என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேனியில் கனமழை: மூல வைகையாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு
- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யத் தொடங்கியது.
தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வைகை அணையின் பிறப்பிடமான வெள்ளியனை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தும்மக்குண்டு, வருசநாடு, முருக்கோடை, கடமலைக்குண்டு, மயிலா டும்பாறை, கண்டமனூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கும்படியும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்கமாள்புரம் பகுதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயரத்தொடங்கி உள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 49.67 அடியாக உள்ளது. வரத்து 1039 கன அடியாகவும், திறப்பு 69 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 1950 மி. கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.65 அடியாக உள்ளது. வரத்து 3153 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 2756 மி.கன அடி.
மஞ்சளாறு அைணயின் நீர்மட்டம் 52.70 அடியாக உள்ளது. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. இருப்பு 399 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.17 அடி. வரத்து 88.58 அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 83.57 அடி.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 48.60 அடி. வரத்து 103 கன அடி. திறப்பு 14.47 கன அடி. இருப்பு 67.14 மி.கன அடி.
பெரியாறு 101., தேக்கடி 108, சண்முகாநதி அணை 51, ஆண்டிபட்டி 42.2, அரண்மனைபுதூர் 26, வீரபாண்டி 30.4, பெரியகுளம் 54.2, மஞ்சளாறு 31, சோத்துப்பாறை 24, வைகை அணை 39, போடி 30, உத்தமபாளையம் 18.4, கூடலூர் 33 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






