என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை: வால்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
கோவை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்திலும் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் மிதமான அளவில் மழை பெய்தது. இன்று காலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருள்போல காட்சியளித்தது.
தொடர்ந்து மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால், பாப்ப நாயக்கன்பாளையம், அண்ணாசிலை, லட்சுமில் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
காலை நேரத்தில் பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர். ஆங்காங்கே உள்ள நிழற்குடைகள், பாதுகாப்பான இடங்களில் மக்கள் நின்றனர். பலர் குடைபிடித்தபடியும், பிளாஸ்டிக் கவர், ஜர்க்கின் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான அளவில் மழை பெய்தது. மாலையிலும் மழை நீடித்தது.
இரவில் 7 மணிக்கு பிறகு கனமழை பெய்ய தொடங்கியது. இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை வெளுத்து வாங்கி வருகிறது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அக்காமலை, பச்சைமலை, சோலையார் அணை, சின்னக்கல்லார், பெரியகல்லார், கவர்க்கல் எஸ்டேட், ரொட்டிக்கடை, உருளிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
மழையால் வால்பாறை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.
இரவு முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக, வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் பொள்ளாச்சி, ஆனைமலை, சூலூர், சுல்தான்பேட்டை, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், தொண்டாமுத்தூர், வடவள்ளி, கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் கோவையில் குளிரும் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க சுவர்ட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
வால்பாறை தாலுகா-57 நீரரார்-40, சோலையார் அணை-26






