என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது.
    • ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அனுசியா என்பவரது வீட்டில் திருடு போனது. இதேபோல் தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹேம குமார் என்பவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துதீவிர விசாரணை நடத்தினர்.

    கார் திருட்டு தொடர்பாக பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த சோழவரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இன்பராஜ், கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பார்வதி ராஜா என்கிற பாரதி (36) சென்னை சூளைமேடு பெரியார் பாதையை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதில் இன்பராஜ் மீது விருதுநகர், பனங்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இன்பராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தெருவோரங்களில் நிறுத்தப்படும் கார்கள், மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடி வந்து உள்ளனர். அவர்கள் 50க்கும் மேற்பட்ட கார்களை நோட்டமிட்டு திருடி இருப்பது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அன்னூர்-அவினாசி சாலையில் உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் நடக்கிறது.
    • விவசாயிகள், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அழைத்து செல்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் ரூ.1,913 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள 1043 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் 93 சதவீத குளங்களுக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி நிதி ஒதுக்கியதுடன், திட்டம் செயல்பாட்டுக்கு வர காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா இன்று மாலை அன்னூர்-அவினாசி சாலையில் உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் நடக்கிறது.

    இன்று காலை 8 மணிக்கு விழா தொடங்கியது. விழா தொடக்கமாக பாராட்டு விழா நடக்கும் இடத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து கார் மூலமாக இன்று மதியம் கோவை வருகிறார்.

    அவருக்கு கோவை மாவட்ட எல்லையில் அ.தி.மு.கவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    அவர் செல்லும் வழிகளில் எல்லாம் அ.தி.மு.கவினர் திரண்டு வந்து வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் அவர் காரில் விழா நடைபெறும் அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவு பகுதிக்கு செல்கிறார். அங்கு அவரை அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்கின்றனர்.

    அப்போது அவரை விவசாயிகள், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அழைத்து செல்கின்றனர். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி விழா மேடைக்கு செல்கிறார்.

    விழா மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், நன்றி தெரிவித்து அவரை பாராட்டுகின்றனர். அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கி அவரை கவுரவிக்கின்றனர். இறுதியாக எடப்பாடி பழனிசாமி விழா பேரூரை ஆற்றுகிறார்.

    இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், சூலூர் வி.பி.கந்தசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

    இதுதவிர கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 3 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். இதற்காக 3 மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகளும், பொதுமக்களும் என ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் அன்னூர் கஞ்சப்பள்ளிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் அங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த கார் பார்க்கிங் பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, விழா நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கு ஒதுக்கப்பட்டு இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக விழா மேடையில் பரதநாட்டியம், கம்பத்து ஆட்டம், வள்ளி கும்மி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை மக்கள் பார்த்து ரசித்தனர்.

    முன்னதாக அங்கு விழாவையொட்டி மேடை அமைக்கும் பணிகள் மற்றும் குடிநீர், கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதற்கான ஏற்பாடுகளை அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் செய்துள்ளனர்.

    விழாவையொட்டி, அந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • புழல் ஏரிக்கு சிறியகால்வாய் மற்றும் ஓடை, ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • மழை குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 21 அடி ஆகும். 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி முழு கொள்ளவை எட்டியது. பின்னர் மழை குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் புழல் ஏரிக்கு சிறியகால்வாய் மற்றும் ஓடை, ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 196 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏற்கனவே புழல் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து இருந்த நிலையில் தற்போது முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

    இன்று காலை நில வரப்படி புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 20.91 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3222மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 209 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்ட உள்ளது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடியில் 22.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3248 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது.

    • டாக்டர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.
    • உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் நிலைமை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் உள்நோயாளிகளாவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இங்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி அருகில் உள்ள முசரவாக்கம், அய்யங்கார் குளம், பாலு செட்டி சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இங்குள்ள ஆண்கள் பொதுநல நோயாளிகள் பிரிவில் போதுமான டாக்டர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் ஏராளமான நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆண்கள் பொது நலப் பிரிவில் பல மணி நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே போதுமான டாக்டர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் கூறும் போது, காலை 6 மணி முதலே நோயாளிகள் ஓ.பி. சீட்டினை பெற்று மருத்துவம் பார்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். ஆனால் போதுமான டாக்டர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.

    இதனால் உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் நிலைமை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது. டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தொடர்ந்து கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்றனர்.

    • டெல்லியில் தி.மு.க. மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்றனர்.
    • எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு பொருள் ஈட்டித் தந்த தமிழகத்திற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

    * தமிழகத்தில் நேற்று 72 இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

    * துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவத்தோடு உரையாற்றினார்.

    * டெல்லியில் தி.மு.க. மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்றனர்.

    * மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டி தமிழக எம்.பி.க்கள் போராடினர்.

    * தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது.

    * பட்ஜெட்டில் மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்துள்ளது.

    * யுஜிசி புதிய வரைவு விதி மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது.

    * எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு பொருள் ஈட்டித் தந்த தமிழகத்திற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?

    * ஆசிரியருக்கு சம்பளம், 100 நாள் வேலைவாய்ப்பு என எதற்கும் நிதி தராது வஞ்சிக்கிறது மத்திய அரசு.

    * உ.பி., பீகார், குஜராத் மாநிலங்களுக்கு கேட்காமலேயே நிதி தருகிறது மத்திய அரசு.

    * அளிக்க வேண்டி நிதியை கூட மத்திய அரசு இன்னும் அளிக்கவில்லை.

    * அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை கூட கண்டிப்பதற்கு பிரதமர் மோடி குரல் கொடுக்கவில்லை.

    * நான் ஒரு தமிழச்சி தான் என கூறும் நிதியமைச்சர் நிர்மலா தமிழகத்திற்காக செய்தது என்ன?

    * மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

    • புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • போலீசார் கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமெண்ட் ஆலை குடியிருப்பு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி இங்கு புகுந்த கொள்ளையர் சிமெண்ட் ஆலை பணியாளர்கள் கார்த்திகேயன், வேல்முருகன், தாமரைக்கண்ணன், பழனிசாமி, கருப்பையா, கவியரசன் ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 சவரன் நகை, ரூ.1 லட்சம், வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மத்தியபிரதேசம் தார் மாவட்டம் தண்டா கிராமத்தை சேர்ந்த திலீப் மகன் கலாம் (24) என்பவருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மத்தியபிரதேசம் விரைந்த போலீசார் கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர் போலீசில் இருந்து தப்பிக்க முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கலாமை போலீசார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கு கால்முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டு போடப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    • நவாப்பின் மனைவி பரிதா நவாப் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக உள்ளார்.
    • கடிகாரத்தில் ரகசிய கேமிராவை வைத்து யார் என்று விசாரணை.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு ஆணையாளராக கிருஷ்ண மூர்த்தி பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஆணையாளர் அறையில் கடந்த மாதம் 25-ந் தேதி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணனை, நகர தி.மு.க. செயலாளர் நவாப் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மாநில மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் தி.மு.க. நகர செயலாளர் நவாப்பை கண்டித்து துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதற்கிடையே நகராட்சியில் பணிபுரியும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியுடம் ஒரு புகார் கொடுத்தனர். அதில் துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மன உளைச்சல் கொடுப்பதாகவும் கூறி இருந்தனர்.

    நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிய கூடிய டெங்கு தடுப்பு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு துப்புரவு அலுவலர் ராம கிருஷ்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    தொடர் போராட்டங்களால் பரபரப்பாக இருந்த கிருஷ்ணகிரி நகராட்சியில், தற்போது அமைதி திரும்பிய நிலையில், மீண்டும் மற்றொரு சூறாவளியாக ஆணையாளர் அறையில் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த வீடியோவில் ஆணையாளர் அறையில் கடந்த 25-ந்தேதி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், நகர தி.மு.க. செயலாளர் நவாப் ஆகியோர் அமர்ந்து காரசாரமாக பேசுவதும், நகராட்சி ஆணையாளர் அவர்களை சமாதானப் படுத்துவதுமான வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடிகாரத்தில் ரகசிய கேமிராவை வைத்து யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப்பை தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நகர செயலாளர் எஸ்.கே.நவாப் கழக கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நவாப்பின் மனைவி பரிதா நவாப் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும்.
    • பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம்.

    சென்னை:

    பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு களை ஒழுங்குபடுத்தும் வகையில் கடுமையான விதிகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பங்கேற்கும் சிறார்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 'ஆன்லைன் உண்மையான பண விளையாட்டு' என்பது, தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021-ன்படி, 'வெற்றிகளை' சம்பாதிக்கும் எதிர்பார்ப்புடன் ஒருவர் பணம் அல்லது பொருளை டெபாசிட் செய்யும் விளையாட்டு என வரையறுக்கப்படுகிறது.

    ஆன்லைன் விளையாட்டில் ஒரு வீரரின் செயல் திறனின் அடிப்படையில் 'வெற்றிகள்' பணமாகவோ அல்லது பொருளாகவோ பரிசுகளை வழங்குகின்றன அல்லது விநியோகிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் தெளிவுபடுத்தியுள்ளன.

    தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையில், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், பதிவு செய்வதற்கும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இப்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் பண விளையாட்டுகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும்.

    நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் பணம் கட்டி சிறார்களை விளையாட அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம் ஆகும்.

    இந்த திருத்தப்பட்ட விதிகள் தமிழ்நாட்டில் இப்போது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பணம் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் உள்நுழைவு பக்கத்தில் தொடர்ச்சியான எச்சரிக்கை செய்தி காட்டப்பட வேண்டும் என்று அதில் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளது.

    • திருப்பரங்குன்றத்தில் அரசியல் செய்யும் விவகாரம் கவலை அளிக்கிறது.
    • அரசியல், ஆன்மீகம் ஆகியவை ஒன்றாக போய்விட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் செயல்படும் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் பல்வேறு போட்டிகள் மற்றும் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக பள்ளிக்கு வந்த கவிஞர் வைரமுத்துவை பள்ளி மாணவர்கள் கிராமத்து வழக்கப்படி சிலம்பாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் ஆகிய பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைரமுத்து கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் அரசியல் செய்யும் விவகாரம் கவலை அளிக்கிறது.


    இப்போது அரசியல், ஆன்மீகம் ஆகியவை ஒன்றாக போய்விட்டது. அரசியலுக்குள்ளும் ஆன்மீகம் இருக்கிறது. ஆன்மீகத்திற்குள்ளும் அரசியல் இருக்கிறது. இதைத்தான் உலகம் தற்போது நம்பிக் கொண்டிருக்கிறது.

    என்னைப் பொறுத்த வரை இந்து மதத்தினரின் வாழ்க்கை முறை வேறு, இஸ்லாம் மதத்தினரின் வாழ்க்கை முறை வேறு, அவரவர்களின் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொள்ள அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதனை செய்து தரும் கடமை அரசுக்கு உண்டு என்பதே எனது கருத்து.

    கலைத்துறையில் இருப்பவர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களே. அந்த வகையில் விஜய் மீது எனக்கு அதிக நட்பு உண்டு. அரசியல் குறித்தான கருத்துக்களை கூறி நான் யாரையும் பகைக்க விரும்பவில்லை. உண்மையை சொல்லாமல் நான் பொய்யனாகவும் ஆக விரும்பவில்லை, நட்பை கெடுக்கவும் விரும்ப வில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • படித்துறை பகுதிக்கு சென்று பறவைகள் பூங்காவை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
    • பூங்காவில் செயற்கையான அருவிகள் போன்ற அமைப்பும் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும், திருச்சி மக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுப்போக்கும் வகையிலும் திருச்சி கரூர் சாலை கம்பரசம்பேட்டையில் அய்யாளம்மன் படித்துறை அருகே பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பறவைகள் பூங்கா திருச்சி மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது. பறவைகள் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவருக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் அய்யாளம்மன் படித்துறை பகுதிக்கு சென்று பறவைகள் பூங்காவை திறந்து வைத்து பார்வையிடுகிறார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப்குமார், பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த பூங்காவில் செயற்கையான அருவிகள் போன்ற அமைப்பும் உள்ளது. இந்த பூங்காவில் அரிய வகையிலான பறவைகள் வளர்க்கப்பட இருக்கின்றன. இதுமட்டு மல்லாமல் குழந்தைகள் தெரிந்து கொள்ள 5 வகையான நிலங்கள் அதாவது குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் மற்றும் பாலை போன்ற அமைப்புகளும் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை குழந்தைகளுக்கு புரியும் வகையில், மலைகள், காடுகள், கடற்கரை, சமவெளி மற்றும் பாலை வனம் போன்ற இடங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது.

    புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் பூர்வ படங்கள் திரையிடப்படும். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.

    பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் மூலம் புதுக்கோட்டை செல்கிறார்.

    புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் மகன் கணேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    • பாம்பின் கூடு பறவைகளின் கூடு போன்று அல்ல.
    • கூடு வைத்திருக்கும் காலங்களில்தான் பாதுகாப்புக் கருதி கருஞ்சாத்தி ஆட்களை விரட்ட முற்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தற்போது பணிகள் எதுவும் நடக்காததால் யானை, சிறுத்தை, ராஜநாகம் என அனைத்து வன விலங்குகளும் சுதந்திரமாக வந்து செல்கிறது.

    இந்நிலையில் மாஞ்சோலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் அருகே ராஜநாகம் ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து பரப்பி உள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. சுமார் 18 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் எவ்விதமான பரபரப்பும் இன்றி சாதாரணமாக நின்று மெதுவாக ஊர்ந்து செல்கிறது.

    இதுகுறித்து மாஞ்சோலை மற்றும் காணி பழங்குடியின மக்கள் கூறுகையில், எங்கள் மக்கள் ராஜநாகத்தை 'கருஞ்சாத்தி' என்று அழைக்கின்றனர். இவைகளின் கூட்டை பல முறை பார்த்துள்ளோம். பாம்பின் கூடு பறவைகளின் கூடு போன்று அல்ல. இது மிக இறுக்கமாக இருக்கும். காட்டுத் தீ ஏற்பட்டால் கூட அதைத் தாங்கும் வலிமையில் அந்தக் கூடு வேயப்பட்டிருக்கும். அவை கண் இமைக்கும் நேரத்தில் நம்மை நோக்கி சீறிப் பாய்ந்து விரட்டும். கூடு வைத்திருக்கும் காலங்களில்தான் பாதுகாப்புக் கருதி கருஞ்சாத்தி ஆட்களை விரட்ட முற்படுகிறது. மற்ற காலங்களில் மிக சாதுவாக இருக்கும் என்றனர்.

    • போலீசார் பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.
    • பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி.பூங்கா காய்கறி மார்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 45), பாஸ்கர் ரெட்டி (60) ஆகிய இருவரும், ஈரோடு மார்கெட்டுக்கு லாரியில் தக்காளி கொண்டு வந்தனர்.

    பின்னர் அவற்றை இறக்கிவிட்டு, மார்கெட் அருகில் உள்ள ஏ.பி.டி.ரோடு பகுதியில் தங்களது லாரியை நிறுத்தி சமைத்து சாப்பிட்டு விட்டு லாரியிலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு சென்ற 4 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த மகேந்திரன், பாஸ்கர்ரெட்டி இருவரையும் எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

    அப்போது லாரி டிரைவர்கள் இருவரும் தங்களிடம் பணம் இல்லை என கூறவே, கூகுள் பே மூலமாக தங்களது வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி மகேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து அவர்களது வங்கிக் கணக்கிற்கு ரூ.18 ஆயிரத்து 700 அனுப்பவைத்து, பின்னர் மகேந்திரனின் செல்போனில் இருந்து கூகுள் பே ஆப்பையும் அழித்துவிட்டு சென்று விட்டனர்.

    இதையடுத்து, மகேந்திரன், பாஸ்கர் ரெட்டி இருவரும் தாங்கள் தக்காளி பாரம் இறக்கிய மண்டி உரிமையாளர் வைரவேலிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ஆந்திர மாநில லாரி ஓட்டுனர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்தது, ஈரோடு வீரப்பன் சத்திரம், மிட்டாய்காரர் வீதியை சேர்ந்த சண்முகம் (19), சக்திவேல் (19) என்பது தெரியவந்த்து. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    ×