என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர்.
- ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பி. புதுபட்டியில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியடித்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அணைத்து வெற்றி வாகை சூடினர்.
இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில் சில்வர் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
போட்டியில 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
- தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவர் தனக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டை இடிக்க இன்று காலை அதே ஊரை சேர்ந்த 3 பேரை வேலைக்கு அழைத்திருந்தார். அதன்பேரில் 3 பேர் வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே பணிகளை தொடங்கினர்.
வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்த போது பக்கவாட்டு சுவர் இடிந்து அவர்களது மேலேயே எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் வலசை, கருப்பு கோவில் தெருவை சேர்ந்த அரியமலை (வயது 35) என்பவர் மீது சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த வீடு இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் (35), கருப்புசாமி (32) ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர்.
- தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை.
மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர். தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.
இப்போது அதை மற்ற மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளனர். நமது மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்காக அவர்களைத் தண்டிக்கும் வகையில் இந்த செயல் உள்ளது.
இந்திய வரலாற்றில் எந்த அரசாங்கமும் ஒரு மாநிலத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான அணுகலை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்றதாக இருந்ததில்லை. தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகம் என்பதை பா.ஜ.க. அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம்.
- ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 2022 முதல், 2023 2024 வரை, தள்ளுபடி செய்யபபட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்பட வில்லையென்றால், பொது மக்களுக்கு எப்படித் தெரியும்?
அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகைகளை கொண்டு போய் வங்கியில் வைத்துக் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறித்தான் தேர்தல் பிரசாரமே செய்தார்.
அப்போது தேவைப்படாத கடன் தள்ளுபடிக்கான தகுதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டதைத்தான், உங்கள் வாக்குறுதியை நம்பிக் கடனாளியாக நிற்கும் பொதுமக்களின் சார்பாக நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம்.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?
மழைநீர் வடிகால் என்ற பெயரில், ஆளுக்கொருகதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், முதலமைச்சரும், மேயரும். இத்தனை ஆண்டுகள், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கணக்கு காட்டி விட்டு, ஒவ்வொரு முறையும் மழையின் மீது பழியைப் போட்டு, பேரிடர் நிவாரண நிதி தரவில்லை என்று கூற வெட்கமாக இல்லையா?
தமிழத்துக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்காக, தமிழக மக்களால் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா? கேன்டீன் செல்வதற்காகவே டெல்லி வரை செல்கிறார்கள் என்று பொதுமக்கள் கேலி செய்யும் அளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது.
இப்படி, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என்று வீணடித்துவிட்டு, பாராளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டு, ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும், பொது மக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?
அமைச்சர் பெரியகருப்பனுக்கு நான் பணிவன்புடன் கூறிக்கொள்வதெல்லாம், உங்கள் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் நள்ளிரவில் பதிலளித்தாலும், நண்பகலில் பதிலளித்தாலும், உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இது ஒவ்வொரு துறை அமைச்சருக்கும் பொருந்தும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோபர்ட் (வயது 40). ஆட்டோ டிரைவர்.
இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுபலெட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 8 மாதங்கள் குடும்பம் நடத்திய நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சுபலெட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இது தொடர்பாக ரோபர்ட்டுக்கும், சுபலட்சுமியின் அண்ணன் சிவநேசனுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை மாயனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறப்பிற்காக பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் சிவனேசன் அவரது நண்பர் கோபி உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ரோபர்ட்டுக்கும், சிவநேசனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரோபர்ட் ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது சிவநேசன், கோபி உள்ளிட்ட 6 பேர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது தகராறு முற்றி சிவனேசன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து ரோபர்ட்டை கத்தியால் குத்தி தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த தாக்குதலில் ரோபர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கரூண் கரட் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவனேசன் ,கோபி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ரேவதிக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேவதியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார்.
- அண்ணாமலை பற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.
ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 சட்டப் பேரவை தேர்தல் வரை, கவர்னர் ஆர்.என்.ரவியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் அவரவர் பதவியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சாரமே செய்யாமல் திமுக ஆட்சிக்கு வர முடியும் என்றார்.
இது பற்றி தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அண்ணாமலையால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றால், அவரைப் பற்றி ஏன் பதற்றப்பட வேண்டும்?
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு எளிமையானதாக இருக்காது. திமுக கண்டிப்பாக தோற்கடிக்கப்படும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் என்பது, அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், திமுகவினர் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
திமுக அரசின் ஊழல் முறைகேடுகளை, தி.மு.க.வினரின் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எல்லாம் மக்கள் மன்றத்தில் அண்ணாமலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடித்தால் திமுகவுக்கு வேட்டு வைத்து விடுவார் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். அதனால் அவரை எப்படியாவது மாற்றி விடுவார்கள் என்ற நப்பாசையில், அவரே தொடரட்டும் என்று கூறி தற்காலிக இன்பம் அடைந்து வருகிறார்.
அண்ணாமலை ஜுரம் முதல்வர் ஸ்டாலினை ஆட்டி படைக்கிறது. அதனால் தான் திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார். அண்ணாமலை பற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சந்திரகுமாரை தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 45 பேர் டெபாசிட் இழந்தனர்.
- ஈரோட்டில் தி.மு.க. கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு பிறகு உருவானது. அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முதன் முதலில் தேர்தல் நடைபெற்றது.
2011ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் வி.சி.சந்திரகுமார் (தற்போதைய தி.மு.க வேட்பாளர்) போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் முத்துசாமி (தற்போதைய தி.மு.க. அமைச்சர்) போட்டியிட்டார். அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமார் மொத்தம் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முத்துசாமி 58 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்றார்.
இதில் வி.சி.சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார். அதன் பிறகு தே.மு.தி.க தலைமையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியை விட்டுப் பிரிந்து தி.மு.க.வில் சந்திரகுமார் இணைந்தார்.
அதன் பிறகு 2016ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்றார்.
தி.மு.க. சார்பில் போட்டி யிட்ட சந்திரகுமார் 57 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 7 ஆயிரத்து 794 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க கூட்ட ணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவேரா போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் யுவராஜா போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திருமகன் ஈவேரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட யுவராஜா 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றார்.
இதனால் திருமகன் ஈவேரா 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார். இதன் பிறகு திருமகன் ஈவேரா மரணத்தை தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் தென்னரசு போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகள் பெற்றார். இளங்கோவன் 66 ஆயிரத்து 575 வாக்கு வித் தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
இந்நிலையில் இளங்கோவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்ததால் கடந்த 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த முறை தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமியும் போட்டியிட்டனர்.
அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சி தேர்தலை புறக்கணித்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 1 லட்சத்து 15 ஆயிரத்து 709 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24 ஆயிரத்து 151 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் சந்திரகுமாரை தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 45 பேர் டெபாசிட் இழந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு முதல் முறையாக தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதனால் ஈரோட்டில் தி.மு.க. கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த தேர்தல் முடிவு, வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முன்னோட்டமாக இருப்பதாக கூறி கொண்டாடி வருகின்றனர்.
- தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூந்தமல்லி:
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி வந்தது. லாரியை டிரைவர் முத்துப்பாண்டியன் ஓட்டினார்.
அந்த லாரி வேலப்பன்சாவடி பாலத்தின் மீது ஏற முற்பட்ட போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது.
லாரி கீழே கவிழ்ந்ததில் அதில் இருந்த பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரிடிரைவர் முத்துப்பாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் வரவ ழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவர் முத்துப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படகிற்குள் தண்ணீர் அதிகம் புகுந்ததால் பாரம் தாங்காமல் சிறிது சிறிதாக விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது.
- அந்த வழியாக வந்த மற்றொரு விசைப்படகை சேர்ந்தவர்கள் பார்த்து உடனடியாக தங்கள் படகை திருப்பினர்.
மண்டபம்:
ராமேசுவரத்தில் இருந்து நேற்று 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜோசலன் என்பவருக்கு சொந்தமான படகில் 7 மீனவர்கள் சென்றிருந்தனர்.
அவர்கள் நள்ளிரவில் தனுஷ்கோடி அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இந்தநிலையில் அவர்களது படகில் திடீரென்று பலகை உடைந்து விசைப்படகிற்குள் தண்ணீர் புகுந்தது. அதனை தற்காலிகமாக சரி செய்யும் முயற்சியில் படகில் இருந்த மீனவர்கள் மேற்கொண்டனர்.
ஆனாலும் அவர்களது முயற்சி வீணானது. தொடர்ந்து படகிற்குள் தண்ணீர் அதிகம் புகுந்ததால் பாரம் தாங்காமல் சிறிது சிறிதாக விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடலில் குதித்தனர்.
இதற்கிடையே அவர்கள் பிடித்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்டவைகளுடன் படகு முழுவதுமாக மூழ்கியது. இதனால் செய்வதறியாது தவித்த மீனவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து கடலில் பல மணி நேரம் நீந்தியவாறு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு விசைப்படகை சேர்ந்தவர்கள் பார்த்து உடனடியாக தங்கள் படகை திருப்பினர். நடுக்கடலில் தத்தளித்த 7 பேரையும் தங்கள் படகில் ஏற்றி இன்று அதிகாலை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியது.
- வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கீழே தள்ளிவிட்ட கொடூரம்!
- அனைத்துத் தரப்பு மக்களும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்தக் காட்டாட்சி தர்பாரை வீழ்த்த உறுதி பூண்டுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'திராவிட' என்ற சொல்லுக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் 'திராவிட மாடல்' என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை விடியா தி.மு.க-வின் தலைவர், நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருவது. தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
இந்த ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், அஜாக்கிரதையால், சமூக விரோத செயல்களில் ஈடுபட ஆளும் தி.மு.க-வினருக்கு கட்சிக் கொடியின் பெயரால் லைசென்ஸ் வழங்கி உள்ளதால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களோடு, கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இதை ஊடகப் பேட்டியில் காவல் துறை அதிகாரியே ஒத்துக்கொள்வது, தமிழகக் காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி உள்ளதையே காட்டுகிறது.
* கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு!
* கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே, பள்ளி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம்!
* மணப்பாறை தனியார் பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!
* வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கீழே தள்ளிவிட்ட கொடூரம்!
* வேலூரில் இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து, ஆறு பேர் கொண்ட காமுக கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!
* தமிழகக் காவல் துறையின் உயர் பதவியில் உள்ள பெண் ADGP-யே தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என புகார்!
* கள்ளக்குறிச்சியில் பெண் VAO மீது சாணி அடித்து தாக்குதல்!
* சிவகங்கையில் காவல் நிலையத்தில் புகுந்து பெண் SI மீது தாக்குதல்!
* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு வன்கொடுமை 'யார் அந்த சார்?' உண்மையான, பின்புலம் மறைந்துள்ள குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதில், பத்திரிகையாளர், காவல் துறை என்று தடம் மாறும் விசாரணை!
* கிழக்கு கடற்கரை சாலையில், நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய காரில் துரத்தி அச்சுறுத்தியவர்கள் மற்றும் இதுகுறித்து துப்பு துலக்க வேண்டிய காவல் அதிகாரி, இரண்டு வெவ்வேறான பேட்டிகள் அளிப்பதும்; தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளி மற்றும் திமுக நிர்வாகிகளின் பேட்டிகள்! உண்மையில் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுகிறதா? அல்லது புனையப்பட்ட நாடகம் அரங்கேற்றமா? என்று ஏவல் துறைதான் விளக்க வேண்டும்!
பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை, உயர் பதவியில் உள்ள பெண் காவல் அதிகாரி உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறியுள்ள தமிழகம், கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் பொம்மை முதலமைச்சரின் கைகளில் உள்ள காவல் துறை!
* கோவை மத்திய சிறையில் கைதி தனது உயிருக்கு ஆபத்து என்று வீடியோ வெளியீடு!
* புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்திற்கே இன்னும் முழுமையான முடிவு எட்டப்படாத நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் கலப்பு செய்திகள் வெளிவருகின்றன!
* விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்று இருமுறை கள்ளச் சாராய மரணங்கள் நடைபெற்றும். கள்ளச் சாராய விற்பனை தொடர்வது வாடிக்கையாக உள்ளது!
தொடரும் குற்றச் சம்பவங்கள் பற்றிய எனது இந்த அறிக்கைக்கும், சட்ட நடவடிக்கை எடுக்காமல், யாரையாவது விட்டு அறிக்கை வெளியிடுவார் பொம்மை முதலமைச்சர்.
அந்த காலத்தில் மன்னன் நகர்வலம் போவதுபோல, இந்த திராவக மாடல் ஆட்சியின் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நகர்வலம் போக ஆரம்பித்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை கொடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த சமயத்தில், அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க மனமில்லாத நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரின் செய்கை கண்டனத்திற்குரியது!
இத்தகைய நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், தொழில் துறையினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என, கொதிப்படைந்துள்ள அனைத்துத் தரப்பு மக்களும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்தக் காட்டாட்சி தர்பாரை வீழ்த்த உறுதி பூண்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாத பொம்மை முதலமைச்சருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது.
- ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராயபுரம்:
பழைய வண்ணாரப்பேட்டை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அனுசியா என்பவரது வீட்டில் திருடு போனது. இதேபோல் தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹேம குமார் என்பவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துதீவிர விசாரணை நடத்தினர்.
கார் திருட்டு தொடர்பாக பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த சோழவரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இன்பராஜ், கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பார்வதி ராஜா என்கிற பாரதி (36) சென்னை சூளைமேடு பெரியார் பாதையை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதில் இன்பராஜ் மீது விருதுநகர், பனங்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்பராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தெருவோரங்களில் நிறுத்தப்படும் கார்கள், மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடி வந்து உள்ளனர். அவர்கள் 50க்கும் மேற்பட்ட கார்களை நோட்டமிட்டு திருடி இருப்பது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






