என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் சாணார் பாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்மகும்பல் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.
மேலும் பூஜை அறையில் இருந்த பித்தளை பூஜை பொருட்களையும் சுருட்டி சென்று விட்டனர்.
பொன்னேரி அடுத்த திருவாயர் பாடி பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரம ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம கும்பல் அள்ளி சென்று இருந்தனர்.
இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
- மேயர் பிரியா, நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அம்பத்தூர் வெங்கடாபுரம், பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், நிலை குழு தலைவர் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், கமல், ராஜகோபால், நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர்.
- பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டம்.
திருப்பரங்குன்றத்தை மையபடுத்தி, மதவெறித் திட்டத்தை பாஜக, சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மதச்சார்பற்ற கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டுகளில் ஒன்று தமிழ்நாடாகும். தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலங்களான பழனியாண்டவர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட இந்துமத திருத்தலங்கள், அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் மத வேறுபாடு இன்றி பொதுமக்கள் வழிபடுவதே இதற்கு சான்று.
இத்தகைய தமிழ்நாட்டில் மத வேறுபாடுகளை விதைத்து மக்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சில அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை பாஜகவும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் திட்டமிட்டு செய்து வருவது வழக்கமாகி இருக்கிறது. பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர். அவர்களின் அடுத்த குறி தமிழ்நாடாக இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறு சிறு வலது சாரி அமைப்புகள் பாஜகவின் ஆதரவில் முளைவிட்டு வளரத் தொடங்கியிருந்தன. கடந்த மூன்றாண்டுகளாக அடங்கியிருந்தவர்கள் தேர்தலை கவனத்தில் கொண்டு தங்களின் பிளவுவாத அரசியலை தொடங்கியிருக்கின்றனர். பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டமிட்டு சதிகளை அரங்கேற்றி வருகின்றன.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசை நடத்துகிற வாய்ப்பு கிடைத்தும் கூட பாஜக தமிழ்நாட்டின் நலன்களுக்கான நடவடிக்கை எதையும் சொல்லிக் கொள்ளும்படியாக செய்திடவில்லை என்பதை தமிழ்நாடு அறியும். 2025 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கூட தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டிற்கோ, கோவை - மதுரை புதிய மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்போ, தமிழகத்திற்கு உரிய நிதி பங்கீடோ, பேரிடர் கால பாதிப்பு நிதியோ அல்லது மாநிலத்தின் தொழில், வர்த்தக, வேளாண் வளர்ச்சிக்கோ ஒரு சிறு துரும்பையும் கூட கிள்ளிப் போடவில்லை இந்த பா.ஜ.க.
சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் டெல்டா மாவட்டங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெள்ளப் பெருக்கினாலும், பெரும் புயல்களாலும் தாக்கப்பட்டு, மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்ட போதும் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒதுக்காமல் தமிழ்நாட்டின் மீது வஞ்சனையோடு செயல்படுகிறது பா.ஜ.க. எனவே, தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து இவர்களைப் புறக்கணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது தனது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பாஜகவும், அதன் சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைஅடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோவிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன.
2000 ஆண்டுகளுக்கு முன்பாக சமணம் இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்க்கா அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக மக்கள் எவ்வித பிரச்சனையுமின்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
நேர்மையும், அறவுணர்வும் கொண்ட நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பூசைகளும், சிக்கந்தர் தர்காவில் அவ்வப்போது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்தி அன்னதானம் (கந்தூரி) செய்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் தர்க்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.
மேற்கண்ட வழிபாட்டு முறைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் இருக்கிற சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொய் செய்திகளைப் பரப்பி பிப்ரவரி 4ம் தேதி திருப்பரங்குன்றத்தில் கூடுமாறு அழைப்பு விடுத்தது. சமூக வலைதளங்களில் மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து பதற்றத்தை உருவாக்க முனைந்துள்ள மதவெறி சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகமும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டன.
அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் இவ்வமைப்புகளின் பொய்யையும், புரட்டையும் நம்பவில்லை; முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். எனினும், அங்கு கூடிய மதவெறி அமைப்பினர் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் வெறியூட்டக்கூடிய விதத்திலும் பேசி தங்களது பிளவுவாதத் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்திப்பிடித்த திருப்பரங்குன்றம் உள்ளிட்டு மதுரை மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிகப்பழமையான நகரமான மதுரை எப்போதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மதுரை மக்கள் அனைத்து மத நம்பிக்கைகளை மதித்தும், அனைத்து மத விழாக்களிலும் பங்கேற்று வருகின்றனர்.
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையையும், அனைத்து பகுதி மக்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்க திருப்பரங்குன்றத்தின் அனைத்துப் பகுதி மக்களும் இப்போதுபோல் எப்போதும் உறுதிகாட்ட வேண்டும் எனவும், தமிழ்நாடு இத்தகைய மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணித்திட வேண்டும் எனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பாலாஜி தனது நண்பர்களுடன் சேர்ந்து மேலாளார் சாய்பிரசாத்தை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
ஆந்திர மாநிலம் குடூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் பிரசாத் (வயது 45) இவர் கடந்த 5 ஆண்டுகளாக மணலி புதுநகர் அடுத்த விச்சூர், வெள்ளி வாயலில் உள்ள கண்டெய்னர் யார்டில் மேலாளராக வேலை பார்த்து வந்தார் சாய்பிரசாத்(வயது45). நேற்று முன்தினம் இரவு அவர் தங்கி இருந்த அறையில் சுத்தியலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
விசாரணையில் அங்கு வேலை பார்த்து வந்த தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த டில்லி பாலாஜி கடந்த 6-ந் தேதி வேலை நேரம் முடிவதற்குள் பாதியிலே சென்று விட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலாஜியை மேலாளர் சாய்பிரசாத் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி தனது நண்பர்களுடன்சேர்ந்து மேலாளார் சாய்பிரசாத்தை கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பாலாஜி மற்றும் அவரது நண்பர்களான அங்கு வேலை பார்த்து வந்த முகிலன், பழைய நாபாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி,ஷாம்,கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
- நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பஞ்செட்டி சென்னை-கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.49.28 கோடி செலவில் 4 மாடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்டப்படுகிறது.
சுமார் 6.35 ஏக்கர் பரப்பளவில் 6 நீதிமன்ற வளாகங்கள் இதில் வருகின்றன. இதற்கான கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏ.டி.எம். மையம், தபால் நிலையம், கேண்டீன் ஓய்வறை, கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.
கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, பொன்னேரி எம்.எல்.ஏ. துரை, சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது குறித்த காலத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர். ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ஜெகதீஷ், தர்மதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.
டெல்லி தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்லி மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல இந்தியா கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இந்தியா கூட்டணி பாடம் கற்க வேண்டும். டெல்லி மாநிலத் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி உடனடியாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
டெல்லியில் ஆட்சி நடத்தி வந்த ஆம் ஆத்மியை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்காக பாஜக தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.
அதிகாரிகள் நியமனம், அன்றாட நிர்வாகம் ஆகியவற்றைச் செய்வதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்தத் தீர்ப்பை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி உடனடியாக சட்டத்திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.
இந்த அடாவடிகளுக்கு இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம் ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம்.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை விட சுமார் இரண்டு சதவீத வாக்குகளையே பாஜக கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அங்கு தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதி உட்பட 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகியுள்ளன.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆதரவு தெரிவித்த அந்தக் கட்சிகளுக்கு டெல்லியில் வாக்கு வங்கி எதுவும் இல்லை. எனவே அது காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் எப்படி காரணமாக அமைந்துவிட்டதோ, அப்படி இந்தியா கூட்டணியில் இருந்த பிற கட்சிகளின் இந்த அணுகுமுறையும் ஒருவிதத்தில் காரணமாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு இந்தியா கூட்டணி கூட்டத்தைக் கூட்டுவதில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுத்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணியே வழி வகுத்தது என்பதே கசப்பான உண்மையாகும்.
மக்கள் நலனை விடத் தத்தமது கட்சிகளின் வெற்றியையே இந்தியா கூட்டணி கட்சிகள் முதன்மையாகக் கருதுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். மக்களும்கூட நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே டெல்லி தேர்தல் முடிவுகளை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர் வெற்றியை சாதித்திருக்கும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்குகிற அதிமுக போட்டியாடாமல் பின்வாங்கியது. பாஜகவும் அதே நிலைபாட்டை எடுத்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க விரும்பாமல், இவ்விரு கட்சிகளும் இணைந்து நாதகவுக்கு ஆதரவை நல்குவது என்கிற மறைமுக உடன்பாடு செய்துகொண்டனரோ என்கிற அய்யத்தை எழுப்புகிறது.
அதாவது, நாதக மற்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு வெளிப்படையான வெறுப்பு அரசியலை நாதக முன்னெடுத்தது. குறிப்பாக, தந்தை பெரியாரை மிகவும் அநாகரிகமான முறையிலே பொது வெளியில் கொச்சைப்படுத்தியது. ஆனாலும் அதனை அதிமுக கண்டும் காணாமல் கடந்து சென்ற போக்கு அதிர்ச்சியளித்தது. அதேவேளையில், பாஜக வரிந்து கட்டிக்கொண்டு நாதகவின் வெறுப்பு அரசியலை வரவேற்றது. இவ்விரு கட்சிகளின் இந்தப் போக்கு அவர்களுக்கிடையிலான மறைமுக உடனபாட்டினை உறுதிப்படுத்துவதாகவே விளங்கியது.
தந்தை பெரியாருக்கு எதிரான நாதக'வின் இந்த அணுகுமுறை பாஜகவின் ஃபாசிச அணுகுமுறையின் இன்னொரு வடிவமே என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.
பாஜக மற்றும் சங் பரிவார்களைப் பின்பற்றியே தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் நாதக இறங்கியது. அதன்மூலம் பாஜகவின் வாக்குகளை ஈர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அத்துடன், அதிமுகவின் திமுக எதிர்ப்பு வாக்குகளையும் இயல்பாக பெற்றுவிட முடியுமென நாதக கணக்குப் போட்டது.
ஆனால், வழக்கம்போல அந்தக் கட்சிக்கு வைப்புத் தொகையைக் கூட கிடைக்க விடாமல் செய்துள்ளனர் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள்.
இதன்மூலம், பாஜக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் சூது அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, தந்தைபெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதிக்கான மண்ணே தமிழ்நாடு என்பதை உணர்த்தி, நாதகவுக்கு மறைமுகமாகத் துணைபோன பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உரிய பாடத்தைப் புகட்டியுள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெண்கள் முன்னேறுவதற்கும், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி மிகவும் அவசியம் ஆகும்.
- மாணவிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைவாக பெற்றுத் தர வேண்டும்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் இளைய கண்ணு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அரசு பள்ளிகள் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர், அதே பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவிகள் அதே பள்ளியின் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை உருவாக்கியது. அதன்பின் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பேராசிரியரே பாலியல் தொல்லை கொடுத்ததும் அதிர்வலைகளை உருவாக்கியது.
பெண்கள் முன்னேறுவதற்கும், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் பெற்றோர் தங்களின் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பெண் தெய்வங்களுக்கு கல்வியையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டிய அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மையங்களாக மாறினால், இனிவரும் காலங்களில் பள்ளிகளுக்கு பெண் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோரே அஞ்சும் நிலை உருவாகி விடும்.
இத்தகைய கொடுமைகள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றனவா? என்ற அதிர்ச்சியும், இந்தக் கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்ற ஏக்கமும், தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை எப்போது ஏற்படும்? என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வினாக்கள் அனைத்துக்கும் தமிழக அரசு தான் விடையளிக்க வேண்டும்.
மாணவிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை, விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதன் வாயிலாகவும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதன் வாயிலாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
- போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
வேலூர் அருகே நேற்று முன்தினம் ஓடும் ரெயிலில் சைக்கோ வாலிபர் ஒருவர், ரெயில் பெட்டியில் இருந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணை ரெயிலில் இருந்து தள்ளி விட்டார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று நண்பகலில் வந்த திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயிலில் இருந்த பயணிகளுக்கு சந்திப்பு ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமையிலான போலீசார் இன்டர்சிட்டி ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி அதில் இருந்த பெண் பயணிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். காலியாக இருக்கும் பெட்டிகளில் தனிமையாக பயணிக்க வேண்டாம், சக பயணிகளுடன் சேர்ந்து பயணியுங்கள் என்று பெண் பயணிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.
ரெயிலில் சந்தேக படும்படியாக நபர்கள் யாரும் பயணித்தாலோ, நடுவழிகளில் ஏதேனும் நபர்கள் ரெயில் பெட்டியில் ஏறினாலோ உடனடியாக பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் ரெயில்வே பாதுகாப்பு தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும், அவ்வாறு தெரிவித்தால் அடுத்ததாக உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்து வந்து விடுவார்கள் என்றும் அவர்கள் கூறி எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த ரெயிலில் உள்ள பெட்டிகளில் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் பயணிக்கிறார்களா? என்று போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
- ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
- எல்லா ஊரிலும் தாமரை மலரலாம், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மோடியாலும் முடியாது.
வேலூர்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் மோடி அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. எங்கள் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று பொருள். டெல்லியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது குறித்து கேட்டதற்கு, வெதர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரியாக மாறும் ஆகையால் அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அங்கு அரசு நடக்கிறது.
எல்லா ஊரிலும் தாமரை மலரலாம், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மோடியாலும் முடியாது, அந்தக் கூட்டத்தாலும் முடியாது.
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்ததற்கு அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் ஒரு பொழுதுபோக்கு மன்றம். தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ச்சியாக நிதி வழங்காமல் வஞ்சிக்கப்படுவதற்கு, இதே மாதிரி சும்மா இருந்து விடவும் முடியாது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தோற்றது. தற்போது டெல்லியிலும் தோற்றுள்ளது. அதற்கு என செயற்குழு பொதுக்குழு கூட்டி நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.
- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதில்,
* கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* சுகாதாரத்துறை, கூட்டுத்துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* TANGEDCO தலைவர் நந்தக்குமாரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர்.
- ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பி. புதுபட்டியில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியடித்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அணைத்து வெற்றி வாகை சூடினர்.
இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில் சில்வர் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
போட்டியில 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
- தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவர் தனக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டை இடிக்க இன்று காலை அதே ஊரை சேர்ந்த 3 பேரை வேலைக்கு அழைத்திருந்தார். அதன்பேரில் 3 பேர் வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே பணிகளை தொடங்கினர்.
வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்த போது பக்கவாட்டு சுவர் இடிந்து அவர்களது மேலேயே எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் வலசை, கருப்பு கோவில் தெருவை சேர்ந்த அரியமலை (வயது 35) என்பவர் மீது சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த வீடு இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் (35), கருப்புசாமி (32) ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






