என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிரைவர் கொலை- மைத்துனர் உள்ளிட்ட 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
- ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோபர்ட் (வயது 40). ஆட்டோ டிரைவர்.
இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுபலெட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 8 மாதங்கள் குடும்பம் நடத்திய நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சுபலெட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இது தொடர்பாக ரோபர்ட்டுக்கும், சுபலட்சுமியின் அண்ணன் சிவநேசனுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை மாயனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறப்பிற்காக பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் சிவனேசன் அவரது நண்பர் கோபி உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ரோபர்ட்டுக்கும், சிவநேசனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரோபர்ட் ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது சிவநேசன், கோபி உள்ளிட்ட 6 பேர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது தகராறு முற்றி சிவனேசன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து ரோபர்ட்டை கத்தியால் குத்தி தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த தாக்குதலில் ரோபர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கரூண் கரட் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவனேசன் ,கோபி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






