search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "expelled"

    46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன் என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். #smkrishna #RahulGandhi #congress #pmmodi
    புதுடெல்லி:

    கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பலம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றினார். ஆனால் ஆட்சி காலம் முடியும் முன்பே அவருக்கு வழங்கப்பட்ட மத்திய மந்திரி பதவியை காங்கிரஸ் பறித்தது. அதற்கு அக்கட்சி மேலிடம் எந்த காரணத்தையும் கூறவில்லை. 

    இதனால் டெல்லியில் வீட்டை காலி செய்துவிட்டு எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரு திரும்பினார். கர்நாடகத்திற்கு வந்த பிறகு அவர் வீட்டில் ஓய்வு எடுத்தார். கர்நாடக காங்கிரசில் தனக்கு ஏதாவது நல்ல பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவரை காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் காங்கிரஸ் மீது எஸ்.எம்.கிருஷ்ணா கடும் அதிருப்தியில் இருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை அவர் கடந்த 2017-ம் ஆண்டு பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். காங்கிரசில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கு உரிய மதிப்பு இல்லை என்று கூறி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தார். காங்கிரசின் குடும்ப அரசியலையும் அவர் குறை கூறினார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை விமர்சிக்கவில்லை.

    இந்த நிலையில் சுமார் 85 வயதாகும் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த (2017) மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். 

    இந்தநிலையில், மடூர் கிருஷ்ணா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எஸ்எம். கிருஷ்ணா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    ''நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், மன்மோகன் சிங் அரசில் இருந்து வெளியேறியதற்கும் ராகுல் காந்தியின் தலையீடுதான் முக்கியக் காரணம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை. ஆனாலும், கட்சியிலும், ஆட்சியிலும் ஏராளமான விஷயங்களில் தலையிட்டார். 

    நான் கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியில் வகித்த பல்வேறு பதவிகளிலும் எனது பணியை ராகுல் காந்தி உத்தரவின் பெயரில் திறமையாகவே செய்தேன். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்று ரகசியமாக ராகுல் காந்தி உத்தரவிட்டதால், நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.

    ஆனால், தற்போது பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது''.

    இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். #smkrishna #RahulGandhi #congress #pmmodi
    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது ஏன்? என்ற பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. #OPS #Raja #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா. பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரான இவர், அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார். கட்சியில் எந்த பதவியும் வகிக்காவிட்டாலும் தேனி, மதுரை பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக வலம் வந்தார்.

    இவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-



    அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க.வின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா (பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர்) அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவருடன் அ.தி.மு.க.வினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் பதவிக்கு அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இது அ.தி.மு.க.வினருக்கு பிடிக்காததால், கட்சிக்குள் பூசல் வெடித்தது. எனினும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவராக ஓ.ராஜா தேர்வானதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

    இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.ராஜாவின் அண்ணனும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர்.

    ஜெயலலிதா உயிருடன் இருந்த நேரத்தில், ஓ.ராஜா மீது கொலை வழக்கு புகார் எழுந்ததை தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக ஆன நேரத்தில், மதுரை, தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் ஓ.ராஜாவின் தலையீடு அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

    ஓ.பன்னீர்செல்வமே தனது தம்பியை கட்சியில் இருந்து நீக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #OPS #Raja #ADMK


    ×