என் மலர்
இந்தியா
- மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
- சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம், நவ.27-
சேலம் எருமாபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் சந்தானகுமார் (38). இவருக்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் போதுமான வருமானமும் இன்றி தவித்து வந்தார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணமும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தானகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தூத்துக்குடி:
வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வங்கக்கடலில் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டு வருகிறது.
இலங்கை கடல் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிம், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
- மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர் உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் முரளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் இதுவரை மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தேசிய கட்சிகள் தொடங்கி ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள்.
- அண்ணன் செங்கோட்டையன் எடுத்த முடிவுகளில் முக்கியமான ஒரு முடிவு த.வெ.க.வில் இணைந்தது.
பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது பேசிய தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:
* தேசிய கட்சிகள் தொடங்கி ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள்.
* அண்ணன் செங்கோட்டையன் எடுத்த முடிவுகளில் முக்கியமான ஒரு முடிவு த.வெ.க.வில் இணைந்தது.
* த.வெ.க.வு.க்கு 20% வாக்குகள் தற்போதே உறுதியாகி விட்டது.
* எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக ஜெயலலிதாவுடன் இணைந்து மாற்றம் கொண்டு வந்தவர் அண்ணன் செங்கோட்டையன்.
* வெற்றி, தோல்வி, பல இழப்புகளின் போதும் கட்சியுடன் துணைநின்ற அனுபவத்துடன் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன்.
- கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.
பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:
* அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி.
* த.வெ.க. எனும் கொள்கை கூட்டத்தில் முக்கியமான மாமனிதர் சேர்ந்திருக்கிறார்.
* கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
- பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?
முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
அதில், மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, "பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்?
காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் என்ன நன்மைகளைப் பெற்றுள்ளது?
காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்கள் என்ன சாதித்துள்ளனர்.
பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?" என்று தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியை காவியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவியாவை காதலித்து வந்ததாகவும், ஆனால், காவியாவுக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த அஜித்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது ஆசிரியை காவியா படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.
இதே தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் வீராவேசம் காட்டினார்கள். ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை.
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மட்டும் 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பதைத் தேடினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
ஆனால், இது குறித்த கவலைகள் எதுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தம்மைச் சுற்றிலும் உண்மைத் தடுப்பு வேலியை அமைத்துக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உன்னத ஆட்சி நடைபெறுவதாக வீண்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- இன்றைய நாள் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.
- 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்று, விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.
பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது:
* அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
* இன்றைய நாள் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.
* செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின.
* 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்று, விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
- வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
- நான் என்ற ஆணவத்தில் இருப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பான்.
- ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு.
மதுரை:
சென்னையில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் பேசும்போது, நான் என்ற ஆணவத்தில் இருப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பான் என்றும், மற்றவர்கள் ஆளக்கூடாதா? என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. அவர்களது கருத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது. அவர் (செங்கோட்டையன்) தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. எனவே அவரது கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று என்றார்.
- அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
- 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும், அதே குடியிருப்பில் வசித்த சதீசும் காதலித்து வந்தனர். இந் நிலையில், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022 அக்டோபர் 13-ந்தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த மாணவியை, மின்சார ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி தீர்ப்பளித்தது.
மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல சதீஷ் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. சதீஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல். இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. மரண தண்டனை விதிக்கத்தக்க, இது அரிதிலும் அரிதான வழக்கல்ல என வாதிட்டார்.
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன்முகம்மது ஜின்னா, காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல் அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல். இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, 3-வது நாள் ரெயில் வரும் வரை காத்திருந்து, ரெயில் அருகில் வந்தவுடன் தள்ளிவிட்டு உள்ளார் என்பதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதால், தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல என்பதால் தான் த.வெ.க.வில் இணைந்தேன்.
- மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தூய்மையான ஆட்சியை கேட்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.
தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் செங்கோட்டையன் பனையூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் இருந்தனர்.
அப்போது செங்கோட்டையன் கூறியதாவது:
* தன்னை விடாமல் பின் தொடர்ந்து ஊடகப் பணியாற்றியதற்காக நிருபர்களுக்கு பாராட்டுகள்.
* ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஊடகப் பணியை செய்தனர்.
* அ.தி.மு.க.வில் புரட்சி தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான்.
* எம்.ஜி.ஆர்.-ஆல் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தவன் நான்.
* எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது 100 நாள் கூட இந்த படம் ஓடாது என விமர்சித்தார்கள். பின்னர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர்.
* அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா தலைமையில் பணியை மேற்கொண்டேன்.
* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 3 கூறுகளாக அ.தி.மு.க. என்ற இயக்கம் பிரிந்தது.
* ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கருத்தை செயல்படுத்த இயலவில்லை.
* அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன்.
* பசும்பொன் சென்று திரும்பிய பின், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டேன்.
* என்னை சார்ந்து இயங்கியவர்களும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.
* அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் கெடு விதிக்கவில்லை. எனது பேட்டியை மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.
* என்னை கட்சியில் இருந்த நீக்கும் எண்ணத்தில் தான் நான் கெடு விதித்ததாக அவதூறு பரப்பினார்கள்.
* அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று தான் நான் கூறினேன். கெடு விதிக்கவில்லை.
* தெளிவாக முடிவு எடுத்தபின், பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தேன்.
* தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல என்பதால் தான் த.வெ.க.வில் இணைந்தேன்.
* தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும்.
* தமிழகத்தில் தூய்மையான ஒரு அரசியலை விஜய் முன்னெடுத்துள்ளார்.
* மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தூய்மையான ஆட்சியை கேட்கிறார்கள்.
* அன்பிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார்.
புனித ஆட்சியை விஜய் கொடுப்பார் என செங்கோட்டையன் கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய செங்கோட்டையன்,
* அ.தி.மு.க. ஆட்சி புனித ஆட்சி இல்லை என்று நான் கூறினேனா?
* ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று கூறவில்லையே.
* தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து யாரும் என்னை அணுகவில்லை.
* சட்டைப் பையில் இருந்து ஜெயலலிதாவின் படத்தை எடுத்து விட்டால் விமர்சிக்க மாட்டீர்களா?
இவ்வாறு அவர் கூறினார்.






