என் மலர்tooltip icon

    இந்தியா

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
    • தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.

    • விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார்.
    • கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி, கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    விஜய், தி.மு.க. தீய கட்சி, த.வெ.க. தூய்மையான கட்சி என்று பேசுகிறார். த.வெ.க. எப்படி தூய்மையான கட்சியாக இருக்க முடியும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை, எப்படி திட்டங்கள் கொண்டு வருவார்கள் என்று தெரியாது. அப்படி திட்டம் கொண்டு வந்தால் அதை ஒழுக்கமாக எவ்வாறு நிறைவேற்றுவார்கள் என்று சொல்ல முடியாது.

    குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பிக்கும்போதுதன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பித்தார். அத்துடன் இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள கட்சி என்று கூறி இருக்கலாம். ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து உங்களுடன் வந்துள்ளார்கள். அவ்வாறு வந்துள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள். எங்கு வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படி நாம் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள் தான் விஜய் உடன் சேர்ந்துள்ளார்கள்.

    விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார். பிறகு விடுதலை சிறுத்தை கட்சிக்கு சென்றார். அங்கு ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டு அங்கிருந்து வந்தார். அவர் அ.தி.மு.க.விற்கு வர முயற்சி செய்தார். ஆனால் அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைக்காது. உழைப்பவருக்கான கட்சி இது. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

    இங்கு இருப்பவர்கள் எல்லாம் உழைப்பவர்கள். ஆனால் அங்கு சென்று இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள். அதுபோல்தான் இங்கிருந்து செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார். செங்கோட்டையன் 53 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் இருந்து எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து கொண்டார்.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மக்கள் தான் அந்த கட்சியில் இருக்கிறார்கள். அது தூய்மை கட்சி இல்லை. கலப்பட கட்சி. ஏன் கலப்பட கட்சி என்றால் இங்கிருந்து செங்கோட்டையன் சென்றுள்ளார்.

    பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார், அதேபோல் பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வந்த நிர்மல் குமார் அங்கு சென்றுள்ளார். இவ்வாறு எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுகிற கூட்டம் விஜய்யுடன் வந்துள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாளை உங்களையும் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
    • இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    மதுரை:

    பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில் தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

    பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.

    இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.

    பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில் புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
    • தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க இது உதவும்.

    பெங்களூரு:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து நாளை மறுதினம் காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

    இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக, இஸ்ரோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்றைய கிட்டத்தட்ட ஆறு பில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் டவர் பிரச்சினை நீக்குவதற்கும், பில்லியன் கணக்கானவர்களுக்கு பிராட்பேண்டைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

    • இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 4,000 ரன்கள் எடுத்தார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா 153 போட்டிகளில் விளையாடி 4,000 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

    சர்வதேச அளவில் 2வது வீராங்கனை ஆவார். இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களைக் கடந்துள்ளார்.

    மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

    • சிசிஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.
    • இதில் பெண்கள் ஒற்றையரில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார்.

    மும்பை:

    சிஐஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.

    பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, சன்யா வார்ஸ் உடன் மோதினார். இதில் ஜோஷ்னா 7-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதேபோல், ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் உடன் மோதினார். இதில் வீர் சோட்ரானி 11-9, 11-9, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி அநேக இடங்களில் முன்னிலை பெற்றன.
    • அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றன.

    இதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர். நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் மகாயுதி கூட்டணியை ஆசிர்வதித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பா.ஜ.க. மற்றும் மகாயுதி தொண்டர்களுக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல, அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் விடுத்த பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் அசைக்க முடியாத ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது மாநிலத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றும் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

    • பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்தார்.
    • ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆலமரங்களை நடும் பணியை தேர்வு செய்தார்.

    புதுடெல்லி:

    "தென்னைய பெத்தா எளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு"

    இது 'எங்க ஊரு ராஜா' என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். எவ்வளவு தத்துவமான வரிகள்.

    தந்தை பிள்ளையிடம் காட்டிய பாசத்தை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்ற வரிகள்.

    அப்படிப்பட்ட பிள்ளைப் பாசத்தை விட தாய்மைப் பேறு எவ்வளவு மகத்தானது.

    அந்தத் தாய்மைப் பேறு தனக்கு இல்லை என்றாகிப் போனதும் இந்த பெண்மணி எடுத்த ஒரு முடிவு ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    திருமணம் முடிந்து பிள்ளைப் பேறுக்காக கோவில் கோவிலாக சென்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றியவர் சற்றே மாறுபட்டு சிந்தித்தார்.

    பிள்ளைக்காக மரங்களைச் சுற்றுவதை விட்டு அந்த மரங்களையே தன் பிள்ளைகளாக உருவாக்கினால் என்ன என தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்.

    பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்த அந்தப் பெண்மணி, மரங்களை நடும் முயற்சியை தொடங்கினார். அதுவும் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆல மரங்களை நடும் பணியைத் தேர்வு செய்தார்.


    இப்படிப்பட்ட தைரியமான முடிவெடுத்த அந்தப் பெண்மணி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    சாலுமரத திம்மக்கா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பிறந்த மண் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் கிராமம். 1911-ல் பிறந்த அவர், இளம் வயதிலேயே ஹூலிகல்லு ஊரைச் சேர்ந்த சிக்கையாவை மணமுடித்தார்.

    திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை வரம் கிடைக்கவில்லை. கணவரின் ஆதரவு இவரின் பெரும் வரமானது.

    இருவரும் ஆலமரக் கன்றுகளை உருவாக்கி சில ஆலமரக் கன்றுகளை நட்டனர். அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு என ஆலமரக்கன்றுகள் பெருகின.

    மரங்களை நடுவதுடன், அவைகளைத் தொடர்ந்து பராமரித்து வந்தனர். கோடைகாலத் தேவைக்காக மழைக்கால நீர் சேமிப்பாக சிறு சிறு குளங்களை வெட்டினர். தீராத தண்ணீர் பஞ்சத்தின் போதும் தளராமல் தொலை தூரம் சென்று குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஆலமரங்களுக்கு உயிர் தந்தனர் இந்த தம்பதியினர்.

    கணவர் மறைந்த பிறகும் தன் முயற்சியிலிருந்து பின்வாங்காமல் தனது வாழ்நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்தார்.

    தேசிய குடிமகன் விருது (1995), இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது (1997), ஹம்பி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட நாடோஜா விருது (2010), இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (2019) உள்பட பல சிறப்புமிக்க விருதுகள் மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவை இவரை பெருமைப்படுத்தின.

    கடந்த 2016-ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியின் அங்கீகாரத்தையும் பெற்றார்.

    இப்படி பல்வேறு புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி அன்று 114-வது வயதில் காலமானார்.


    கன்னடத்தில் 'மரங்களின் வரிசை' என பொருள்படும் சாலுமரதா என அன்புடன் அழைக்கப்படும் திம்மக்காவின் வாழ்க்கைப் பணி பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

    சாலுமரதா திம்மக்காவின் மரணத்துக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

    "மரம் மனிதனைவிட உயர்ந்தது. அதற்கு தெரிந்தது எல்லாம் பிறருக்கு நன்மை செய்வதே" என அடிக்கடி கூறுவது திம்மக்காவின் வழக்கம். இன்று அவர் இந்த உலகில் இல்லை. ஆனால் அவர் நட்ட ஆயிரக்கணக்கான மரங்களின் உருவிலும், அவை விடும் மூச்சுக் காற்றிலும் திம்மக்கா நம்முடன் என்றென்றும் நிலைத்திருப்பார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.

    இதையடுத்து, 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 9 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 25 ரன்னும் எடுத்தனர்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய பெண்கள் அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஜெமிமா 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார்.
    • சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கியுள்ளார்.

    செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத்.

    சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, ஷாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர்.

    இந்நிலையில், சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளனர். மேலும் சென்னை அணியின் பெயரை VELS CHENNAI KINGS என பெயர் மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.

    2026 ஜனவரியில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
    • ஆண்டிப்பட்டி, வேடுகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி,

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவா கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரி கரை, கே,பி.கரடு வடபுறம்,

    மூலப் பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்ட முத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர்,

    மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியா கவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராம கவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, சோளம் பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை,

    கந்தா்வகோட்டை:

    கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊரணி, வாராப்பூா், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்க நாதப்பட்டி, மாந்தான்குடி, கந்தா்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டாங்கால், சிவன்தான்பட்டி, வீரடிபட்டி,

    புதுப்பட்டி, பல்லவராயன்பட்டி. பழைய கந்தா்வகோட்டை, அரவம்பட்டி, மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கந்தா்வகோட்டை மின்வாரிய உதவிச் செயற் பொறியாளா் கே. ராஜ்குமாா் தெரிவித்து உள்ளாா்.

    ×