என் மலர்tooltip icon

    இந்தியா

    • நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
    • கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.

    2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.

    அதன்படி, நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.

    நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.
    • மின்கம்பிகளை சீரமைக்கும் பணி பல மணி நேரம் நடைபெற்றது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

    இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் நேற்று மாலை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாலை 4.30 மணிக்கு நடைபெற இருந்த சோதனை ஓட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மாலை 6 மணி வரையில் நடைபெறாமல் இருந்தது. வெகுநேரமாக காத்திருந்தும், அதிகாரிகள் சோதனை ஓட்டத்தை நடத்த முன்வரவில்லை. இதற்கிடையே அந்த வழித்தடத்தில் சோதனை வாகனம் ஒன்று இயக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, ரெயில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன. தீப்பொறிகளும் வெடித்து சிதறின. ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.

    இதையடுத்து, மின்வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது.

    பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பராமரிப்பு வாகனம் மூலம் சென்று அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மின்கம்பிகளை சீரமைக்கும் பணி பல மணி நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பூந்தமல்லி- போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். 



    • சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 மற்றும் 2018, விதி-16-ன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோருடன் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுடன் வருகிற 29-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல் அத்தியாயம் 4-ஏ-இல் உள்ள பிரிவுக் கூறு 15 ஏ(11)-இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
    • அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.

    இதில் பெரும்பாலும் 1-ம் வகுப்புக்கு தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரையிலான 20 நாட்களில் வந்த 14 வேலை நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    5 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ளது.

    • கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார்.
    • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவி எரித்துள்ளனர்.

    ராஜஸ்தானின் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவியும் கள்ளகாதலனும் எரித்துள்ளனர்.

    மார்ச் 16 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • தற்போது முதல்வர் ரூ. 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். 1.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது.
    • பென்சன் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது.

    கர்நாடகாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த சித்தராமையா தலைமையிலான அரசு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பள உயர்வை கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா நியாயப்படுத்தியுள்ளார். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்களின் செலவினம் அதிகரித்து கொண்டே செல்கிறது. சாதாரண மனிதர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.-க்களும் கஷ்டப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் மற்றவர்களிடம் இருந்து பரிந்துரை வந்தது. அதனால் முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார். எல்லோரும் உயிர்வாழ வேண்டும்" என்றார்.

    தற்போது முதல்வர் ரூ. 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். இனிமேல் 1.5 லட்சம் ரூபாய் பெறுவார். அமைச்சர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. எம்.எல்.ஏ.-க்கள், எம்.எல்.சி.-க்கள் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். இனிமேல் 80 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள்.

    பென்சன் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது.

    விமானம் அல்லது ரெயில் டிக்கெட் அலவன்ஸ் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. இதுபோக சொந்த தொகுதிகளில் பயணம் மேற்கொள்ள 60 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவ அலவன்ஸ், டெலிபோன் கட்டணம், தபால் கட்டணம் அலவன்ஸ் 85 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.10 லட்சமாக உயர்த்தப்பட இருக்கிறது. சபாநாயகர் மற்றும் சட்ட மேலவைத் தலைவர் சம்பளம் 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

    • காலை உணவுத்திட்டம் குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு.
    • நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறது.

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    காலை உணவுத்திட்டம் குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குழந்தைகளின் கவனம், நினைவாற்றல், கற்றல் விளைவுகளை மேம்படுத்துகிறது.

    சிந்தனையுடன் திட்டமிடுவது என்பது பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமல்ல, நாம் நினைத்துப் பார்க்க முடியாத சமூகத்தை மாற்றுகிறது.

    நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறது. இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
    • ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயிலில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழிதடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

    மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 4-ம் வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கிலோமீட்டர் தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் இன்று முதன் முறையாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையில் 2.5 கிலோமீட்டர் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

    அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சென்னை போரூர் - பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று மாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் தாமதம் என தகவல் வெளியானது.

    தொடர்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் சோதனை ஓட்டம் இன்று நடப்பதில் சிக்கல் எனக் கூறப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அடுத்த 3 மணி நேரத்திற்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதி
    • 45 நிமிடங்களுக்கும் மேலாக கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தம்.

    சென்னையில் இருந்து கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக ஆந்திராவிற்கு தினமும் பல ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், ரெயிலின் அபாயச் சங்கிலியில் பையை தொங்கவிட்டதால் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் 45 நிமிடங்களுக்கும் மேலாக ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதனால் ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரெயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதியடைந்தனர்.

    ரெயில்வே போலீசார் விசாரணை செய்யும் போது, பயத்தில் வட மாநில இளைஞர் இறங்கி ஓடிவிட்டதாக பெட்டியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 560 கோடி ஒதுக்கீடு.
    • பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள்.

    தமிழகத்தில் பல பள்ளிக்கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் இருக்கின்றன என்றும் பேராசிரியர் அன்பழகம் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டன என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில்தான் இருக்கின்றன.

    இன்று சட்டசபையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 7,500 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறார்.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2,497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாக சொன்னார்கள். இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாக, பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள்.

    ஆனால், மானியக் கோரிக்கையில், அன்பழகனார் என்ற பெயரே இல்லை. நபார்டு வங்கியிடமிருந்து, ஊரக அடிப்படை வசதி வளர்ச்சி நிதியின் கீழ் பெறப்பட்ட கடன் உதவி மூலம் பள்ளிக் கூடங்கள் கட்டும் பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது. அதற்கும் சென்ற ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2023 - 2024 ஆம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 560 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யவில்லை என்பது மானியக் கோரிக்கையில் தெளிவாகிறது.

    ஆனால், நேற்று சட்டப்பேரவையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, அமைச்சர் பெரியசாமி கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் செயல்படுவதை நாம் பார்த்தோம்.

    விளம்பரத்துக்காக பட்ஜெட்டில் பல கோடி மதிப்பீட்டில் திட்டங்களின் பெயர்களை அறிவிப்பதும், ஆனால், மானியக் கோரிக்கையில் அந்தத் திட்டங்களுக்கு நிதியே ஒதுக்காமல் இருப்பதும், திமுக அரசின் வாடிக்கையாகி விட்டது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும். பெயரளவுக்குத் திட்டங்களை அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் நாடகமாடும் போக்கினை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஐபிஎல் அணிகளின் 10 கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.
    • 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன.

    இன்று மும்பையில் ஐபிஎல் அணிகளின் 10 கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.

    இந்நிலையில், 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். ஐபிஎல்-ன் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. .

    ஐபிஎல் 17-வது சீசனின் தொடக்க விழா முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் புவனேஷ் (வயது23). இவரது நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20).

    இவர்கள் 2 பேரும் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் புவனேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது.

    இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×