முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் சம்பளத்தை 100% உயர்த்த கர்நாடக அரசு முடிவு

தற்போது முதல்வர் ரூ. 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். 1.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது.பென்சன் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது.
முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் சம்பளத்தை 100% உயர்த்த கர்நாடக அரசு முடிவு
Published on

கர்நாடகாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த சித்தராமையா தலைமையிலான அரசு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பள உயர்வை கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா நியாயப்படுத்தியுள்ளார். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்களின் செலவினம் அதிகரித்து கொண்டே செல்கிறது. சாதாரண மனிதர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.-க்களும் கஷ்டப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் மற்றவர்களிடம் இருந்து பரிந்துரை வந்தது. அதனால் முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார். எல்லோரும் உயிர்வாழ வேண்டும்" என்றார்.

தற்போது முதல்வர் ரூ. 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். இனிமேல் 1.5 லட்சம் ரூபாய் பெறுவார். அமைச்சர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. எம்.எல்.ஏ.-க்கள், எம்.எல்.சி.-க்கள் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். இனிமேல் 80 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள்.

பென்சன் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது.

விமானம் அல்லது ரெயில் டிக்கெட் அலவன்ஸ் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. இதுபோக சொந்த தொகுதிகளில் பயணம் மேற்கொள்ள 60 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ அலவன்ஸ், டெலிபோன் கட்டணம், தபால் கட்டணம் அலவன்ஸ் 85 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.10 லட்சமாக உயர்த்தப்பட இருக்கிறது. சபாநாயகர் மற்றும் சட்ட மேலவைத் தலைவர் சம்பளம் 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com