என் மலர்
இந்தியா
- கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- கடந்த சனிக்கிழமை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).
இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.
இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவானார்.
இந்நிலையில் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட புவியியல் பேராசிரியரை 72 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,270-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.66,160-க்கும் விற்பனையானது.
நேற்று மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480
19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,320
18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000
17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680
16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-03-2025- ஒரு கிராம் ரூ.114
19-03-2025- ஒரு கிராம் ரூ.114
18-03-2025- ஒரு கிராம் ரூ.113
17-03-2025- ஒரு கிராம் ரூ.113
16-03-2025- ஒரு கிராம் ரூ.112
- கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சரலபள்ளியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
மதுரை:
தென்மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில், கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகில் உள்ள சரலபள்ளியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.07230) சரலபள்ளியில் இருந்து அடுத்த மாதம் 2-ந் தேதி, 9, 16, 23, 30-ந் தேதி, மே மாதம் 7-ந் தேதி, 14, 21, 28-ந் தேதி, ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந் தேதிகளில் புதன்கிழமை தோறும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 9.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வருகிறது.
நள்ளிரவு 2.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07229) கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந் தேதி, மே மாதம் 2, 9, 16, 23, 30-ந் தேதி, ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. சனிக்கிழமை பகல் 11.40 மணிக்கு சரலப்பள்ளி சென்றடைகிறது.
இந்த ரெயில்கள் நளகொண்டா, மிரியால்குடா, நடிக்குடே, சட்டெனபள்ளி, குண்டூர், தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
- இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.
- மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு அமலுக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் எங்களுடன் இணையும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை நான் மனதார வரவேற்கிறேன்.
மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழ்நாட்டின் 58 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நியாயமான எல்லை நிர்ணயம் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்த ஒரு மைல்கல் தருணமாகும். இந்த மிகப்பெரிய ஒருமித்த கருத்து, தமிழ்நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.
இந்த வரலாற்று ஒற்றுமையை கட்டியெழுப்ப, நமது எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களின் தலைவர்களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி, நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்தினர். தமிழ்நாட்டின் முன்முயற்சியாகத் தொடங்கியது இப்போது ஒரு தேசிய இயக்கமாக வளர்ந்துள்ளது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.
இது நமது கூட்டுப் பயணத்தில் ஒரு வரையறுக்கும் தருணம். இது ஒரு சந்திப்பை விட அதிகம் - இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கத்தின் தொடக்கமாகும். இது இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!
மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு அமலுக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களில் உள்ள போக்குவரத்துக்கு கழகங்கள் என 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 25 மண்டலங்களில் 3 ஆயிரத்து 274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்களும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள விழுப்புரம் மண்டலத்தில் 88 பணியிடங்கள், வேலூர் மண்டலத்தில் 50, காஞ்சீபுரம் மண்டலத்தில் 106, கடலூர் மண்டலத்தில் 41, திருவண்ணாமலை மண்டலத்தில் 37 இடங்கள் என மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதே போன்று, கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் கும்பகோணம் மண்டலத்தில் 101 பணியிடங்கள், நாகப்பட்டினம் மண்டலத்தில் 136, திருச்சி மண்டலத்தில் 176, காரைக்குடி மண்டலத்தில் 185, புதுக்கோட்டை மண்டலத்தில் 110, கரூர் மண்டலத்தில் 48 என மொத்தம் 756 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும், சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள சேலம் மண்டலத்தில் 382 இடங்கள், தர்மபுரி மண்டலத்தில் 104 என மொத்தம் 486 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கோவை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள கோவை மண்டலத்தில் 100, ஈரோடு மண்டலத்தில் 119, ஊட்டி மண்டலத்தில் 67, திருப்பூர் மண்டலத்தில் 58 என மொத்தம் 344 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதே போன்று, மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள மதுரை மண்டலத்தில் 190 பணியிடங்கள், திண்டுக்கல் மண்டலத்தில் 60, விருதுநகர் மண்டலத்தில் 72 என மொத்தம் 322 பணியிடங்களும், நெல்லை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள நெல்லை மண்டலத்தில் 139, நாகர்கோவில் மண்டலத்தில் 129, தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
8 கோட்ட போக்குவரத்துக் கழகத்திலும் சேர்த்து நிரப்பப்பட இருக்கும் 3 ஆயிரத்து 274 டிரைவர்- கண்டக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக 21-ந்தேதி (இன்று) மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட மேலும் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மேலும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேர்வு குறித்த விவரங்கள் அவ்வப்போது விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
- ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறினார்.
அழகான பெண்களை பேச வைத்து படுக்கையில் நெருக்கமாக இருக்க வைத்து பின்னர் அதனை வீடியோ, புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பது ஹனி டிராப் என அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் தனக்கு எதிராக ஹனி டிராப் வலை வீசப்பட்டு தோல்வி அடைந்தாக அம்மாநில அமைச்சர் கே.என். ராஜண்ணா தெரிவித்துள்ளார்.
இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஹனி டிராப் மோசடிக்கு இலக்காகி இருப்பதாக அம்மாநில கூட்டுறவத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அமைச்சர் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாட மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல், கூட்டுறவுத் துறை அமைச்சரை ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து பேசிய அமைச்சர் ராஜண்ணா, "பலர் கர்நாடகா சிடி மற்றும் பென் டிரைவ் ஆலையாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். இது மிகமுக்கிய பிரச்சனை. தும்குருவை சேர்ந்த அமைச்சர் ஹனி டிராப்பில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தும்குருவை சேர்ந்தவர்கள் நானும், பரமேஷ்வராவும் தான். இது தொடர்பாக நான் குற்றச்சாட்டு சமர்பிக்க இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்," என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஹனி டிராப் விவகாரத்தில் கிட்டத்தட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 48 பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவில் நீள்கிறது. நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இதில் சிக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தான் இங்கு விளக்கம் அளிக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக தான் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யார் யார் என்பது வெளிவரட்டும். பொதுமக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது.
- 2022-ல் நேபாள பயணத்துக்கு ரூ.80 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வெளியிடுமாறு மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய வெளியுறவு இணை மந்திரி பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வழங்கினார். அதன்படி இந்த 3 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பயணங்களுக்கான மொத்த செலவு சுமார் ரூ.258 கோடி என அவர் தெரிவித்தார்.
இதில் முக்கியமாக, 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கான செலவு ரூ.22.89 கோடி என கூறப்பட்டு இருந்தது. அதேநேரம் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது.
முன்னதாக 2023-ல் ஜப்பான் பயணத்துக்கு ரூ.17.19 கோடியும், 2022-ல் நேபாள பயணத்துக்கு ரூ.80 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.
- அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.
- வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாள்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் பயணிகள் வாகனங்களில் பயணிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். வாகனங்களுக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க வேண்டும்.
அதாவது, இருசக்கர வாகனங்களில் இருவர் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மூன்று சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது குறைந்தது 4 பேர் வரை பயணிக்கலாம். அதேபோல் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் டிரைவரை தவிர்த்து 3 பேர் பயணிக்கவும் முன் இருக்கையில் அமர்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு உள்ளது.
இதேபோல் மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் தனக்கு இல்லை என்பது போல ஒரு ஆட்டோவில் 14 பள்ளி குழந்தைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி BKD சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோவில் பள்ளி சீருடையில் பல குழந்தைகள் இருப்பதை கண்ட போலீசார் உடனே அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, டிரைவரின் முன்பக்க இருக்கையில் குறைந்தது 3 பள்ளி குழந்தைகள், பின் இருக்கையில் 11 பள்ளி குழந்தைகள் அமர்ந்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பம் முந்தைய ஆண்டை விட அதிகளவில் கொளுத்துகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பொதுவாகவே கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்த ஆண்டு சென்னையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இந்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
- எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று புதுப்பெண்ணின் உடலில்பட்டு வெடித்தது.
- வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரேநாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் விக்கி மற்றும் பியா. காதலர்களான இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக சொந்த ஊரான பெங்களூருவுக்கு வந்திருந்தனர்.
பெங்களூருவில் உள்ள திறந்தவெளி தோட்டத்தில் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோ ஷூட்' நடத்தினர். அப்போது வண்ணப்புகை குண்டுகள் வெடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பில் புதுபெண்ணை மணமகன் அலேக்காக தூக்கி கொண்டாடியபோது வண்ணப்புகை குண்டுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதற தொடங்கின.
அப்போது எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று புதுப்பெண்ணின் உடலில்பட்டு வெடித்தது. இதனால் அவர் வலியில் துடித்து கதறினார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடலின் முகுது மற்றும் இடைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் அவருடைய தலைமுடியும் எரிந்து கருகி இருந்தது.
இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரேநாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
- கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
அதன்படி, நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.
- மின்கம்பிகளை சீரமைக்கும் பணி பல மணி நேரம் நடைபெற்றது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் நேற்று மாலை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாலை 4.30 மணிக்கு நடைபெற இருந்த சோதனை ஓட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மாலை 6 மணி வரையில் நடைபெறாமல் இருந்தது. வெகுநேரமாக காத்திருந்தும், அதிகாரிகள் சோதனை ஓட்டத்தை நடத்த முன்வரவில்லை. இதற்கிடையே அந்த வழித்தடத்தில் சோதனை வாகனம் ஒன்று இயக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ரெயில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன. தீப்பொறிகளும் வெடித்து சிதறின. ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.
இதையடுத்து, மின்வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பராமரிப்பு வாகனம் மூலம் சென்று அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மின்கம்பிகளை சீரமைக்கும் பணி பல மணி நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பூந்தமல்லி- போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.






