என் மலர்
இந்தியா
- ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம்.
- 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
மதுரையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட ஹாக்கி மைதானத்தில் வரும் 28ம் தேதி 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
- இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
- அப்பெண் திருடுவதற்கு திட்டம் போட்டாரா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி 'அடிப்பட்டு வந்திருக்கேன்.. ஹெல்ப் பண்ணுங்க சார்' என கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்பெண் உண்மையாக உத்தரவு கேட்டு வந்தாரா இல்லை திருடுவதற்காக திட்டமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அப்பெண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் இரு தினங்களாக பர்கூர் பகுதியில் சுற்றி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
- 30 வருடம் போர் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த சின்னங்களை போராளிகள் அழிக்கவில்லை.
- சிங்களர்களின் மத உரிமையையும், வழிபாட்டு உரிமையையும் மதித்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் ஈழத்தமிழர்கள் பெரும்பகுதியாக வாழும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் கடந்த 16-ஆம் தேதி அங்குள்ள கடற்கரையோரம் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகளும், பௌத்த பக்தர்களும் புத்தர் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டி, புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளனர். அதற்கு தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல் துறையினர் அங்கிருந்து சிலையை அப்புறப்படுத்தினர்.
ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள, பௌத்தவாதிகள் புத்தர் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறியதையடுத்து அடுத்த நாளே காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் காவலர்களின் கைகளாலேயே கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் திரிகோணமலை மட்டுமல்லாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் வழக்கம் போல தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் இந்த அத்துமீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திருகோணமலை ராவணனால் வழிபட்ட புகழ்பெற்ற தலமாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், கி.மு. 150 ஆம் ஆண்டில் வாழ்ந்த தமிழ் மன்னன் எல்லாளனால் வழிபடப்பட்ட இடமாகவும் கருதப்படுகிறது.
இங்குள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம், இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்துக்கள் மற்றும் தமிழர்களிடையே பரவலாக அறியப்பட்டதாக உள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற இந்த தலம் இந்து மதத்தை பின்பற்றும் ஈழத் தமிழ் மக்களுக்கு புனிதமான நகரமாகவும் கருதப்படுகிறது.
1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருக்கோணமலையே விளங்கியது. இது தமிழர்களால் கோரப்பட்ட தனிநாடான தமிழீழத்தின் தலைநகராகவும் பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது. தமிழர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாழ்ந்த இந்நகரில் பௌத்த விகாரை நிறுவுவது என்பது தமிழர்களின் மத நம்பிக்கையையும், கடவுள் வழிபாட்டு உரிமைமையும் சீர்குலைக்கின்ற செய்கையாகும்.
திருகோணமலை துறைமுகம் ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய துறைமுகமாகவும், முக்கிய வணிக மையமாக திகழ்ந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் சிங்களர்களின் ஆதிக்கத்தை முழுமையாக நிறுவுவதற்கும், தமிழர்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்குமான நடவடிக்கையாகவே இதை கருத முடிகிறது.
தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் ஏற்கனவே மெல்ல மெல்ல சிங்களர்களை குடியமர்த்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தற்போது அவற்றை உறுதி செய்யும் விதமாக தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள், சிலைகளை நிர்மாணித்து வருவதாகவும் தமிழர்கள் கூறுகின்றனர்.
30 வருடம் போர் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த சின்னங்களை போராளிகள் அழிக்கவில்லை. சிங்களர்களின் மத உரிமையையும், வழிபாட்டு உரிமையையும் மதித்தனர். ஆனால் அமைதியையும், அன்பையும், ஆசையை துறக்கும் தத்துவத்தையும் போதித்த புத்தரின் பெயரால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கலாச்சார படையெடுப்பை நடத்தி, தமிழர்களை அப்புறப்படுத்த நினைக்கும் பேராசையுடன் சிங்கள பௌத்த இனவாதிகள் செயல்படுகின்றனர்.
மத திணிப்பின் மூலம் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை அழிக்க நினைக்கும் இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வன்மையாக கண்டிப்பதுடன், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இனப்படுகொலை மூலம் அழித்த நிலையிலும் கூட, அம்மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத அளவுக்கு சிங்கள அரசாங்கம் தொடர்ந்து செயல்படுகிறது. எனவே இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் தலையிட்டு ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு கூட்டாட்சி முறையிலான தன்னுரிமை கொண்ட பிரதேசமாக மலர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
- வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை,
திருச்சி:
துவாக்குடி உபகோட்டம் வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஜெய்நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதி நகர், கீழ குமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ண சமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுண் சிப்பில் சி மற்றும் டி செக்டாரின் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர்,
வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, தொண்டைமான் பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருச்சி மாநகர் கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன்.
- எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற செந்தீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர், அரிமா நோக்கு இதழின் ஆசிரியர் எனப் பல்வேறு பொறுப்புகளில் அவர் ஆற்றிய பணிகளும் எழுதிய நுங்களும் ஏராளம்.
தமது இடையறாத தமிழ்ப் பணிகளுக்கு அங்கீகாரமாகக் கலைமாமணி சாகித்ய அகாதெமி, பாரதிதாசன் விருது, சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, குறள்பீட விருது, முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது, கவிக்கோ விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
நமது திராவிட மாடல் ஆட்சிக்கு வந்ததும் 2022-ம் ஆண்டு முத்தமிழறிஞரின் பிறந்ததாளில் கனவு இல்லம் திட்டம் திட்டத்தின்கீழ், அவருக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வழங்கியிருந்தோம்.
மேலும், அவர் இயற்றிய கீழடியில் கேட்ட தாலாட்டுகள், நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு (கவிதைகளும் கட்டுரைகளும்) ஆகிய நூல்களையும், வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை தயாரித்துள்ள, ஈரோடு தமிழன்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த "மகாகவி" என்ற ஆவணப் படத்தையும் முதலமைச்சராக வெளியிடும் பேற்றினைப் பெற்றிருந்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும். தமிழன்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 95.78% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட 35.86% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்த விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
ஆவான் பால் பாக்கெட்டில் "தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிரத்திருந்த கணக்கீட்டு படிவத்தினை தங்களது வாக்காளர் நிலை அலுவலரிடம் ஒப்படைத்து விட்டீர்களா" என்று வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
- HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
- ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடித்தனர்.
பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.
இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 60 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவிந்தபுரா காவல்நிலைய காவலர், பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.76 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- தி.மு.க தலைவர்களின் பிறந்தநாள் ஏழை, எளிய மக்கள் திருவிழாவாக கொண்டாடும் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது.
- ஆளுநரின் வரைமுறை என்ன? அதிகார துஷ்பிரயோகம் என்ன? என்பது குறித்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று மாநகர, பகுதி இளைஞரணி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என யார் பிறந்தநாள் என்றாலும் அறிவுப்பூர்வமான, ஆக்கபூர்வமான பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பதுதான் தி.மு.க தலைவர்களின் நோக்கம். அதன் அடிப்படையில் தான் இன்று இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .
தலைவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தொண்டர்கள் செய்யும் ஒரே இயக்கம் தி.மு.க தான். உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி தொடங்கி ஜனவரி 1-ந்தேதி வரை 48 நிகழ்ச்சிகளை இளைஞர் அணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்குவது, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து முகாம்கள் நடத்துவது, இளைஞர்கள், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது, பொது கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். எனவே தி.மு.க தலைவர்களின் பிறந்தநாள் ஏழை, எளிய மக்கள் திருவிழாவாக கொண்டாடும் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது.
ஆளுநரின் வரைமுறை என்ன? அதிகார துஷ்பிரயோகம் என்ன? என்பது குறித்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் தமிழ்நாடு தான் எங்களுக்கு தாய் வீடு என கூறி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் கிடையாது. சட்டமன்றங்கள் கூடி அமைச்சரவை என்ன முடிவு எடுத்து அறிவிக்கிறதோ அதற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என கூறியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சம்மட்டி அடி அடிப்பது போல் உள்ளது. இந்த உண்மை செய்தியை வெளிக்கொண்டு வந்தால் அது மத்திய அரசுக்கு மற்றும் மத்திய அரசுக்கு துணை போகும் ஆளுநர்களுக்கு பலவீனம் என்பதை தெரிந்து தான் தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் பல்வேறு சமூக வலைதளங்கள் ஒரு மேக மூட்டத்தை போல் மறைக்க பார்க்கிறது. ஆனால் நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சருக்கு தான் அதிகாரம்
மக்களாட்சி தத்துவம் என்பது முதலமைச்சருக்கு தான் அதிகாரம் உள்ளது. ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் பித்தலாட்டம் செயலை செய்வாரானால் சட்டத்தின் தீர்ப்புப்படி தெளிவுபடுத்தி மாநில முதலமைச்சருக்கு தான் முழு அதிகாரம் உண்டு. அது துணைவேந்தரை நியமிப்பது என்றாலும், பல்கலைக்கழகங்கள் தொடங்குவது என்றாலும் அமைச்சரவை என்ன தீர்மானம் கொண்டு வருகிறதோ அதற்கு ஒப்புதல் தரவேண்டிய கடமைதான் ஆளுநருக்கு உண்டு என்பது தெளிவுபடுத்தப்படும். இந்தத் தீர்ப்பின் விரிவாக்கம் ஒன்று அமைச்சரவை அனுப்பிய மசோதாவிற்கு கையெழுத்து இட வேண்டும், இல்லையெல் திருப்பி அனுப்ப வேண்டும்.
அப்படி இல்லை என்றால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் ஆளுநரின் வேலை. அதைத் தவிர நீண்ட நாட்களாக மசோதாவை வைத்துக் கொண்டு இருப்பது அவரது வேலை அல்ல என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனை அவர் புரிந்து செயல்பட வேண்டும் என்றார்.
- தினந்தோறும் தன்னை பற்றி செய்தி வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
- நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்திருக்கிறது.
நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் தற்போது அரசியல் செய்கின்றனர் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திமுக அரசை தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர். தினந்தோறும் தன்னை பற்றி செய்தி வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்திருக்கிறது. நெல் ஈரப்பத அளவை உயர்த்த மறுத்துவிட்டு வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார்.
ஆக்கப்பூர்வமான வேலையை செய்யாமல் தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25-ந்தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26 முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
22-11-2025 முதல் 24-11-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25-11-2025 மற்றும் 26-11-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
22-11-2025 மற்றும் 23-11-2025: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24-11-2025: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25-11-2025: தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கடந்த ஜூன் மாதம் முதல் அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
- இன்றுடன் உடன் பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் 100 சட்டசபை தொகுதிகள் நிறைவு பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்.
"உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக ஒன்றிய கழக, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், வட்டச் செயலாளர்களை அழைத்துக் கட்சி நிலவரங்களை கேட்டறிகிறார்.
கடந்த ஜூன் மாதம் முதல் அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை பாராட்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்கள் செய்துள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.
தேர்தல் வருவதால் ஒற்றுமையாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும் கோஷ்டி பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.
அந்த வகையில் இன்று கடலூர், புவனகிரி, மயிலம் தொகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் சராசரியாக 1.30 மணி நேரம் வரை விசாரித்து கட்சி நிலவரங்களை தெரிந்து கொண்டார்.
அந்தவகையில் இன்றுடன் உடன் பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் 100 சட்டசபை தொகுதிகள் நிறைவு பெற்றுள்ளது. நிர்வாகிகள் முன் வைக்கும் கோரிக்கைகள், அரசு சார்ந்த கோரிக்கைகள், கட்சி சார்ந்த கோரிக்கைகள் என பிரிக்கப்பட்டு இதில் தீர்வு காணப்படுகிறது.
- இபிஎஸ் கல்லூரியில் ஒரு மாதத்திற்குள் 2 மாணவிகள் உயிர்மாய்ப்பு.
- மாணவி மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தகவல்
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் நேற்று காலை தான் தங்கியிருந்த விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 19 வயது மாணவி பல்லவி, குப்பத்தில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி நர்சிங்) படித்து வந்தார்.
போலீசாரின் கூற்றுப்படி பல்லவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழனன்று மாலை (20.11.25) விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மாணவி குதித்ததை பார்த்த சக மாணவிகளும், அங்கிருந்த ஊழியர்களும் அவரைமீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமை காலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்லவியின் குடும்பத்தினர் கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக அக்.31ஆம் தேதி முதலாமாண்டு மாணவி ஒருவர் தூக்க மாத்திரை உட்கொண்டு இறந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டு மாணவிகள் உயிரை மாய்த்துக்கொண்டது அங்குள்ள சக மாணவிகள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் சித்தூர் மாவட்டத்தில் பொறியியல் மாணவர்கள் இருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு பொறியியல் மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டார். மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






