என் மலர்tooltip icon

    இந்தியா

    • டாக்டர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
    • மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.

    இந்தநிலையில் அவரை மர்ம நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

    இதை உண்மை என்று நம்பிய அவர் ரூ.32 லட்சத்து 92 ஆயிரத்தை முதலீடு செய் தார். இதன்மூலம் கிடைத்த லாபம் மற்றும் முதலீடு செய்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார்.

    ஆனால் அது முடியவில்லை. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    மேலும் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் டெல்லி போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.

    சிறுமிகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.

    அதை நம்பி அவரும் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன்பின்னரே அவர் ஒட்டுமொத்தமாக ரூ.48 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.
    • விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மன்னராட்சி முதல்வரே, உங்கள் ஆட்சியை பற்றி கேட்டால், உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க. என்று கூறினார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    ஒரு சினிமா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    "மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே

    மக்களாட்சி காணச்செய்த தெங்கள் நெஞ்சமே

    எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே

    கல்லில் வீடுகட்டித் தந்த தெங்கள் கைகளே

    கருணைத் தீபம் ஏற்றிவைத்த தெங்கள் நெஞ்சமே"

    இதுதான் அவருக்கு பதிலாக சொல்லிக்கொள்கிறேன்.

    * பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026-ம் ஆண்டு தூக்கி பிடிப்பார்கள்.

    * முதலமைச்சர் எங்கு போனாலும் வரவேற்கிற கூட்டத்தில் 80 சதவீத கூட்டம் பெண்கள் கூட்டம்தான்.

    * சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.

    * விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.

    * பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள்.

    * சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள், போராட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆர்ப்பாட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து அதை போட்டோ போட்டுக்கொண்டு, அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருந்தால் தமிழகத்தின் நிலை இப்படி தான் இருக்கும். இப்படி தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போடு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில மரணமடைபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது.

    இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.

    சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க திட்டம் இருக்கிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அவ்வப்போது என்கவுன்டர் நடைபெறுகிறது.
    • இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.

    சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லாபால் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. 

    • வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
    • தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.

    சின்னாளபட்டி:

    100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,

    தமிழகத்திற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய ரூ.4039 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இதனால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. கிராமப்புற பெண்கள் இத்தொழில் மூலம் சுய சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.240 முதல் ரூ.270 வரை சம்பளம் கிடைக்கிறது. வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.

    தமிழகத்திற்கு இதேபோல் கல்வி நிதியை வழங்காமலும், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அமைச்சருக்கு மனு அளித்தும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும்.

    நிதியை விரைவில் ஒதுக்காவிட்டால் எங்களது அடுத்தகட்ட போராட்டமும் தொடரும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் மீடியா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுககு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் விஜய் கூறியதைபோல தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. மன்னர் ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது. மக்கள் வாக்களித்து அவர்களுக்காக செயல்படும் திராவிட மாடல் அரசாக தி.மு.க. விளக்கி வருகிறது. தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு யாரும் போட்டி கிடையாது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
    • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.

    டெல்லி:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த புதன்கிழமை அன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பானது சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

    இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.



    இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனிடையே செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கூற மறுத்துவிட்டார். 

    • தினசரி ஸ்ரீசனிபகவானுக்கு நடைபெறும் அபிஷேகமும் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது.
    • அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் திருநள்ளாறு பகுதியில் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று சனிஸ்வர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்கிறார்.

    காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சாமி கோவிலில் வாக்கிய பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது. இதன்படி அடுத்த ஆண்டுதான் சனி பெயர்ச்சி நடக்கிறது.

    இதுதொடர்பாக திருநள்ளாறு தேவஸ்தானம் விளக்கம் அளித்தது. இருப்பினும் இன்று திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    மேலும் ரம்ஜான் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் சில வகுப்புகளுக்கு ஆண்டு விடுமுறை மற்றும் இன்று பங்குனி அமாவாசை சனிக்கிழமை என்பதாலும் தமிழக பகுதியில் சேலம், ஈரோடு, கோவை மதுரை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் இருந்து கேரளா ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    தினசரி ஸ்ரீசனிபகவானுக்கு நடைபெறும் அபிஷேகமும் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சனிபகவானுக்கு உகந்த எள் தீபமேற்றி வழிபட்டனர்.

    தொடர் விடுமுறையால் சனி பகவானை தரிசிக்க அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் திருநள்ளாறு பகுதியில் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நாம் சுயமரியாதையுடன் இருப்பதற்கு பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.
    • கடந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.

    எஸ்.சி., எஸ்.டி. மக்களின் வளர்ச்சிக்காக தீட்டப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சமூக நீதி அடிப்படையில் கல்வி, திறன்மேம்பாடு, வீட்டு வசதி, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    * ஆதி திராவிட பழங்குடியின வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் தமிழக அரசு செயல்படுகிறது.

    * ஆதி திராவிட மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    * நாம் சுயமரியாதையுடன் இருப்பதற்கு பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.

    * தி.மு.க. அரசு சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக செயல்படுகிறது.

    * சமூக நீதி அடிப்படையில் கல்வி, திறன்மேம்பாடு, வீட்டுவசதி, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    * வன்கொடுமை அடிப்படையில் பதியப்படும் வழங்குகள் எண்ணிக்கை கடந்தாண்டை விட 6 சதவீதம் குறைந்துள்ளது.

    * வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17,098 நபர்களுக்கு தீர்வு உதவித்தொகையாக ரூ.207 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    * வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * பழங்குடியின மக்கள் எளிதாக கல்வி பெற அப்பகுதியிலேயே 328 உண்டு உறைவிடப்பள்ளிகள் நடத்தப்படுகிறது.

    * கடந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    * பழங்குடியினர் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்.
    • தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மிக மிக முன்னேறிய மாநிலம் ஆகும். ஆனால் சமீப காலமாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி முழுமையாக பின்தங்கி உள்ளது. அதற்கு தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டு இருக்கும் குழப்பங்கள்தான் முக்கிய காரணம் ஆகும்.

    தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. அங்குள்ள தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு ஓடிக் கொண்டு இருக்கின்றன. அந்த மாநிலத்தில் பலருக்கும் அதிக மாத சம்பளம் கிடைக்கிறது. என்றாலும் அவர்கள் கூட வேறு மாநிலத்துக்கு செல்வதையே விரும்புகிறார்கள்.

    தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி மக்களுக்கு எதிராக நடந்து வருகிறது. மொழி கொள்கையை முன்வைத்து அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் நடத்துமாறு நாங்கள் கூறினோம். அதற்கு இதுவரை அவர்கள் பதில் சொல்வதில்லை.

    மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள்ள பாடப்புத்தகங்களை இன்னும் அவர்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யவில்லை. தி.மு.க. ஊழலில்தான் மிதக்கிறது. அதனால்தான் தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.

    தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் நினைப்பதை உணர முடிகிறது. சமீப காலமாக அங்கு சென்று வரும்போது இதை உணர்ந்து இருக்கிறேன்.

    எனவே 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். தி.மு.க.வை மக்கள் நிச்சயம் பதவியில் இருந்து அகற்றுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறது.

    பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் உரிய தகவல்கள் வெளியிடப்படும். தற்போது பேச்சுவார்த்தை திருப்திகரமாக சென்று கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. சொல்லும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்துகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுகிறார்கள். மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு பற்றி இதுவரை எதுவும் சொல்லவும் இல்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அப்படி இருக்கும் போது தி.மு.க. ஏன் இதை பிரச்சனையாக இப்போது எழுப்ப வேண்டும். 2026-ம் ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். 5 ஆண்டுகளாக ஊழலில் திளைத்தவர்கள் இப்போது திடீரென விழித்துக் கொண்டு இப்படி செயல்பட ஆரம்பித்து உள்ளனர்.

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் மேற்கொள்ளப்படும் போது அந்த சமயத்தில் யாருக்கும் நிச்சயம் அநீதி ஏற்படாது. இதை என்னால் .0001 சதவீதம் உறுதியாக தமிழக மக்களுக்கு சொல்ல முடியும்.

    இந்தி திணிப்பு என்றும் தி.மு.க. ஆட்சியாளர்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். தமிழகத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை தமிழில் நடத்தாமல் இருப்பதுதான் உண்மையில் தமிழுக்கு எதிரானது.

    மத்திய அரசின் கல்வி கொள்கை தாய்மொழியை வளர்ப்பதாகவே அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
    • மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?

    செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி

    அக் 2021- அனு, கீர்த்திவாசன்

    நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்

    ஜூன் 2022- தனுஷ்

    ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி

    ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ

    செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி

    மார்ச் 2023- சந்துரு

    ஏப்ரல் 2023- நிஷா

    ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்

    டிசம்பர் 2023- ஆகாஷ்

    அக்டோபர் 2024- புனிதா

    மார்ச் 2025-இந்து, தர்ஷினி

    இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?

    உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?

    தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?

    மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் மு.க.ஸ்டாலின்!

    மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!

    #நீட்ரகசியம்_திமுக_சதுரங்கவேட்டை என கூறியுள்ளார். 



    • பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது33). எலக்ட்ரீசியன் வேைல பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருதமுத்து (36). இவரது மனைவி வீரலட்சுமி (32). இவரும் அதே பகுதியில் வசித்த பிரவீன் (24) என்பவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்கள் கள்ளத்தொடர்பு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து ஊர் பெரியவர்கள் மூலம் பேசி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.

    இனிமேல் இதுபோன்று செயல்பட்டால் போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனால் அதனையும் மீறி வீரலட்சுமி, பிரவீன் கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 26ந் தேதி வீரலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்த பிரவீனை கணவர் மருதமுத்து கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் மருதமுத்துவை தினேஷ்குமார் (27) என்பவர் பிடித்துக்கொள்ள பிரவீன் கத்தியால் குத்த முயன்றார். ஆனால் தகராறை தடுக்க சென்ற ராஜா மீது கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் உடந்தையாக இருந்த தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

    • யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.
    • மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வடவள்ளி:

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    மருதமலை முருகன் கோவிலில் வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.

    மேலும் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அறங்காவலர் குழுவினர் கும்பாபிஷேக அழைப்பிதழையும் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் சக்தி கலசங்களை வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் மாலை 5 மணி முதல் 3-ந்தேதி வரை பக்தர்கள் அனைவரும் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை யாக சாலையில் தரிசனம் செய்யலாம்.

    ஏப்ரல் 4-ந்தேதி கும்பாபிஷேக விழா முடிந்ததும் மீண்டும் வழக்கமான நடைமுறையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு சன்னதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் மலை மீது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.

    பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், கோவில் பஸ்கள் மூலமாகவும் மலைக்கோவிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×