search icon
என் மலர்tooltip icon

    ஜெர்மனி

    • ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் லுப்தான்சா.
    • லுப்தான்சா ஐரோப்பாவின் 2-வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது.

    பெர்லின் :

    ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் லுப்தான்சா. உள்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2-வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது.

    இந்த நிலையில் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லுப்தான்சா நிறுவனம் 1,000-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

    இதன்காரணமாக சுமார் 1,34,000 பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்ற அல்லது முழுவதுமாக ரத்து செய்ய வேண்டியிருந்தது.

    • உங்கள் தட்டில் பாம்பு இருப்பதை கண்டால் உங்களின் கதி என்னவாகும்.
    • இந்த சம்பவம் ஜெர்மனி செல்லும் விமானத்தில் நிகழ்ந்துள்ளது.

    பெர்லின் :

    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அப்படி இருக்கையில் விமானத்தில் உணவு உண்ணும் போது உங்கள் தட்டில் பாம்பு இருப்பதை கண்டால் உங்களின் கதி என்னவாகும். அப்படி ஒரு சம்பவம்தான் ஜெர்மனி செல்லும் விமானத்தில் நிகழ்ந்துள்ளது.

    துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனியின் டஸ்சல்டார்வ் நகரை நோக்கி சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது விமான பணிப்பெண்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    அவர்களில் ஒரு விமான பணிப்பெண் தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட தொடங்கிய சில நிமிடங்களில் உணவில் காய்கறிகளுக்கு நடுவே பாம்பின் தலை கிடந்ததை கண்டு அதிர்ந்துபோனார். உடனடியாக அவர் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து டுவிட்டரில் பகிர்ந்தார்.

    இதனால் சிறிது நேரத்திலேயே இந்த விவகாரம் பூதாகரமானது. அதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

    • பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் கருத்து.
    • ஐரோப்பிய ஒன்றியத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு.

    எல்மா:

    ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மா பகுதியில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்களை தனித் தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாகவும், இத்தாலி பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமது டுவிட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார். மேலும் செனகல் அதிபர் மேக்கி சால், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனைச் சந்தித்து பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றில் இந்தியா-ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து ஆக்கப்பூர்வ முறையில் விவாதம் நடத்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    • பிரதமர் மோடியை தேடிச் சென்று அமெரிக்க அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்தார்.
    • மோடி, பைடன் திடீர் சந்திப்பு குறித்த வீடியோ சர்வதேச சமூகத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.

    முனீச்:

    ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏழு நாடுகளின் தலைவர்கள் கொண்ட குழுவினர் உடன் சேர்ந்து, புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அனைத்து தலைவர்களும் அப்போது ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

    பிரதமர் மோடி தனது அருகில் நின்று கொண்டிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஜோ பைடன், பிரதமர் மோடியை தேடி, அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றார்.

    மோடியின் பின்பக்கத்திலிருந்து தோளை தட்டி அழைத்த பைடன், தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பைடனை கண்டவுடன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்ற பிரதமர் அவருடன் கைகுலுக்கி பதிலுக்கு வாழ்த்து கூறினார்.

    இந்திய பிரதமர் இருக்கும் இடத்தை தேடிச் சென்று, அமெரிக்க அதிபர் வாழ்த்தியது, சர்வதேச சமூகத்தினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது.

    • ஜி7 மாநாடு ஜெர்மனியில் நேற்று தொடங்கியது.
    • இதில் பங்கேற்ற பிரதமர் மோடி உலக தலைவர்களை சந்தித்தார்.

    பெர்லின்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

    இதற்கிடையே, ஜி-7 மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.

    மேலும், மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரும் பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.

    இதையடுத்து, உலக தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • ஜி-7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார்.
    • ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    பெர்லின்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார்.

    மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. அதில் உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசுகையில், குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறுகையில், ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • ஜெர்மனி சென்றுள்ள பிரதமர், அர்ஜென்டினா அதிபரை சந்தித்தார்.
    • இந்தியாவுடன் யோகா, தியானம், உள்பட கலாச்சார தொடர்பை அர்ஜென்டினா மேற்கொண்டுள்ளது.

    முனீச்:

    ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி,  முனீச் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, விவசாயம், பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். 

    இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள், அரசியல்,பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்தும் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

    இந்தியாவில் அர்ஜென்டினாவின் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இரு நாடுகளும் யோகா, தியானம், ஆகியவற்றுடன் கலாச்சார தொடர்பைக் கொண்டுள்ளன.

    அர்ஜென்டினாவில் இந்திய தத்துவம், ஆன்மீகம், நடனம் மற்றும் இசை ஆகியவை பிரபலமாக உள்ளன. அர்ஜென்டினாவில் சுமார் 2,600 வெளிநாடு வாழ் இந்தியர்களும் மற்றும் இந்திய வம்சாவளியினரும் வசிக்கின்றனர்.

    • ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அங்கு முனீச் நகரில் இந்திய வம்சாவளியினரிடம் பேசினார்.
    • 4வது தொழில் புரட்சியில் பின்வாங்காமல் உலகையே இந்தியா வழிநடத்தி வருகிறது என்றார்.

    முனீச்:

    ஜெர்மனியின் முனீச் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியர்களாகிய நாம் நமது ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியாதான் என்று நாம் இன்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, ஆடைகள், இசை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள பன்முகத்தன்மைதான் நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி அவசர நிலை.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக மாறியுள்ளது. அனைத்து கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கியுள்ளோம். 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் வங்கி நடைமுறையில் இணைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை தற்போது பெற முடியும்.

    கடந்த நூற்றாண்டில் தொழில் புரட்சியால் ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் பலன் அடைந்தன. அப்போது இந்தியா அடிமையாக இருந்தது அதனால்தான் பலன்களைப் பெற முடியவில்லை. ஆனால், தற்போதுள்ள 4-வது தொழில் புரட்சியில் பின்வாங்காமல் உலகையே இந்தியா வழிநடத்தி வருகிறது.

    தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. டேட்டா நுகர்வில் இந்தியா இன்று புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என தெரிவித்தார்.

    • பொருளாதார ரீதியாக ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் வகையில் ஜி7 நாடுகள் நடவடிக்கை எடுக்க திட்டம்
    • ஜி7 மாநாட்டின் முதல் நாளான இன்று பணவீக்கத்தை சமாளிப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    எல்மாவ்(ஜெர்மனி):

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பொருளாதார ரீதியாக அந்த நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் வகையில், அந்நாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

    ரஷியாவிடம் இருந்து தங்கம் இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 உறுப்பு நாடுகள் அறிவிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை ஜி7 மாநாட்டின்போது இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜி7 மாநாடு ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாப்பதற்கும் பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் உத்திகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    இந்த மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து எரிவாயு விநியோக அவசர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன.

    பெர்லின்:

    ஜெர்மனி அரசு இன்று இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான தனது மூன்று-நிலை அவசரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்த பின்னர், குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் முதல் உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து, இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியது.

    மேலும், தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன. இது, ஐரோப்பாவில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    நம்மால் இன்னும் உணர முடியாவிட்டாலும், நாம் இப்போது எரிவாயு நெருக்கடியில் இருக்கிறோம் என ஆற்றல்துறை மந்திரி ராபர்ட் ஹாபெக் கூறினார்.

    • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் போலந்து வீரரிடம் தோல்வி அடைந்தார்.
    • ஏ.டி.பி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி கடந்த வாரம் முதலிடம் பிடித்தார் மெத்வதேவ்.

    ஹாலே:

    ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாலேயில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், போலந்தைச் சேர்ந்த வீரர் ஹூபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஹர்காக்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்காத நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வைக்கிறது.
    • சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அண்டை நாடான பாகிஸ்தானை கிரே பட்டியலில் இருந்து நீக்க மறுத்துவிட்டது.

    பெர்லின்:

    பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு 27 நிபந்தனைகளை விதித்தது. அதன்பின், மேலும் 7 நிபந்தனைகளை விதித்தது.

    மொத்தமுள்ள 34 நிபந்தனைகளில் 32 நிபந்தனைகளை தாங்கள் நிறைவேற்றிவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தங்கள் நாட்டை கிரே பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் செயல் திட்டத்தின் நிபந்தனைகளை பாகிஸ்தான் பின்பற்றத் தவறிவிட்டது. கடனில் மூழ்கிய பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற முயன்ற முயற்சி தோல்வியடைந்தது. இதனால் கடந்த 3 ஆண்டாக பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் உள்ளது. ஜூன் 2018-ல் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது.

    கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் சாம்பல் பட்டியல் நிலை காரணமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடினமாக உள்ளது.

    இந்நிலையில், நான்காவது ஆண்டாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தொடர்ந்து பாகிஸ்தானை சாம்பல் நிறப் பட்டியலில் வைத்துள்ளது.

    ×