என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    இந்நிலையில், ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் அகா தலைமையில் ஃபகர் சமான், ஷாஹீன் அஃப்ரிடி, சைம் அயூப், ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட 17 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணியில் மூத்த வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    • தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து தெரியாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர்.
    • குப்பை அள்ளுபவனின் பிள்ளை தான் குப்பை அள்ள வேண்டும் என்பதா?

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியது தி.மு.க. அரசு. தி.மு.க. செய்கின்ற பாவ மூட்டையை திருமாவளவன் சுமக்க வேண்டாம். தி.மு.க. சொல்வதை திருமாவளவன் அறிக்கையாக வெளியிடுகிறார். சேரக்கூடாத இடத்தில் திருமாவளவன் சேர்த்து விட்டார். தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குவதாக கூறினார்.

    இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாவது:-

    தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்புடையத்தல்ல.

    குப்பை அள்ளும் தொழிலில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டம். பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

    தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து தெரியாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர். குப்பை அள்ளுபவனின் பிள்ளை தான் குப்பை அள்ள வேண்டும் என்பதா? தலித் பிரச்சனை என்றால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என்று சொல்வதே சாதி புத்தி. ஏன் தலித் பிரச்சனை பற்றி அதிமுக பேசக்கூடாதா? அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா? என்றார்.

    சமீப காலமாக அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • கவர்னர் கம்பு சுத்த வேண்டியது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான்.
    • கவர்னர் தமிழகத்தில் நீடிப்பது தான் நமக்கு நல்லது.

    தருமபுரி:

    தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இந்தியாவிற்கான திசைக்காட்டி திராவிட மாடல். ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறு பரப்புகின்றனர்.

    * தமிழகத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் செய்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.

    * தி.மு.க. அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ளாமல் பொய்களை மேடைதோறும் கவர்னர் புலம்பி வருகிறார்.

    * கவர்னர் கம்பு சுத்த வேண்டியது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான்.

    * கவர்னர் தமிழகத்தில் நீடிப்பது தான் நமக்கு நல்லது.

    * தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலம் என்பதை மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரமே கூறுகிறது.

    * பள்ளிக்கல்வியில் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் 2-ம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டை கவர்னர் விமர்சிக்கிறார்.

    * தமிழக மாணவர்களை இழிப்படுத்துகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி என்றார். 

    • முரசொலி மாறன் 92-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • பல்வேறு துறைகளின் சார்பில் 70.427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.

    அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக தருமபுரிக்கு வந்தார்.

    இந்த நிலையில், ஒட்டப்பட்டியில் முரசொலி மாறன் 92-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து, அதியமான் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி பி.எம்.பி. கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.512.52 கோடி மதிப்புள்ள 1,044 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.362.77 கோடி மதிப்புள்ள 1,073 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நகராட்சிகள் துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 70.427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    • சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
    • இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெறுகிறது.

    தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பங்களுடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில், அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் இன்று காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரெயில்களில் 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது.

    அக்டோபர் 19-ந்தேதிக்கான ரெயில் முன்பதிவு வருகிற புதன்கிழமையும், தீபாவாளி நாளான அக்டோபர் 20-ந்தேதிக்கான முன்பதிவு வருகிற வியாழக்கிழமையும் தொடங்க உள்ளது. 

    • திருமாவளவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இலட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஆழ்ந்த அறிவும் - தெளிவான சிந்தனையும் - உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் - எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

    இலட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்! என்று பதிவிட்டுள்ளார். 

    • பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான்.
    • சாதிதான் என்னுடைய முதல் எதிரி என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:

    திருமாவளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு சாதாரணமானது அல்ல. அதில் பல தழும்புகள் இருக்கிறது. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக உள்ளது. சாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்துவது எளிதான காரியம் அல்ல.

    அவர்களை அரசியல் மயப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள். அவர்கள் களத்திற்கு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கட்சியை ஆரம்பித்து அங்கீகாரம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். அரசியலில் அங்கீகாரம் பெறுவதே சிரமம்.

    என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். எனவே, சாதி தான் என்னுடைய முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் பதிலாக சொல்கிறேன். பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. நம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை.

    ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை வைத்துத்தான் அளவிட முடியும் என அம்பேத்கர் கூறியுள்ளார். பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான் என தெரிவித்தார்.

    • போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
    • போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டிர்களா இபிஎஸ்?.

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) 'தமிழ்நாடு 26வது மாநில மாநாடு' நடந்து வருகிறது. "வெல்க ஜனநாயகம்" என தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் சிபிஐ முன்னாள் மாநில தலைவர் முத்தரசன், இந்தநாள் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கருப்பும் சிவப்பும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம். எங்களில் பாதி நீங்கள். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது.

    சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருப்பதால் தான் நமது நட்பும் வலுவாக இருக்கிறது. சேலத்தில் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும். அதன் பணிகள் நாளையே தொடங்கப்படும். முத்தரசன் வைத்த கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியுமா!..  

    நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டு வரும் தருணத்தில் நாம் கொள்கை உறவோடு சேர்ந்திருக்கிறோம். சதி செய்தாலும் போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் வந்துள்ளது.

    கம்யூனிஸ்டுகளை விட நீங்கள் பெரிய தியாகம் செய்து விட்டீர்களா, எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டீர்களா இபிஎஸ்?.

    அடிமைத்தனத்தை பற்றி எடப்பாடி பேசலாமா? அவருக்கு பேச என்ன உரிமை உள்ளது. திராவிட, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பற்றி தெரியாத இபிஎஸ் வாய்க்கு வந்தததை பேசி வருகிறார். ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் தற்போது மிரண்டு போயிருக்கின்றனர்.

    எப்படியாவது கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் நமது லட்சியம் பெரிது. அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்றாகி இருக்கிறோம். கூட்டணியில் இருந்தாலும் விமர்சனங்களை முன்வைக்க கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தவறியதில்லை" என்று தெரிவித்தார். 

    • 2 ஆண்டுகளில் 600 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.10 ஆக உள்ளது.

    முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி (Swiggy), தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 17 சதவீதம் அதிகரித்து ரூ.12 இல் இருந்து ரூ.14 ஆக உயர்த்தியுள்ளது.

    அதிக தேவை உள்ள பகுதிகளில் இந்த அதிகரிப்பு சோதனை அடிப்படையில் இந்த பயன்பாட்டு கட்டண உயர்வு செயல்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பண்டிகைக் காலத்தில் ஆர்டர்கள் அதிகரித்ததால் இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.

    2023 ஆம் ஆண்டில் வெறும் ரூ.2 ஆக இருந்த இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம், 2 ஆண்டுகளில் 600 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.10 ஆக உள்ளது.  

    • குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்டு ப்ரீவிஸ்-ஐ 2.2 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது.
    • அதிக தொகை கொடுத்திருக்கலாம் என்ற வகையில் அஸ்வின் பேசியிருந்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் குர்ஜப்னீத் சிங். இவர் காயத்தால் 2025 சீசன் தொடங்குவதற்கு முன் அணியில் இருந்து விலகினார். இதனால் ஏலத்தில் எடுக்கப்படாத பேபி ஏபி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸை 2.2 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது.

    சிஎஸ்கே அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். அடுத்த சீசனுக்கான Trade பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் அணி கேட்கிறது. இதற்கிடையே Trade-க்கு பெரும்தொகை தேவைப்படும். இதனால் நான் கூட வெளியேற்றப்படலாம் என்ற தொனியில் அஸ்வின் கூறியிருந்தார்.

    மேலும், டெவால்ட் ப்ரீவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார். திரைமறைவில் அதிகத்தொகை இருந்திருக்கலாம் என்பது போன்றும் பேசியிருந்தார்.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அஸ்வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஐபிஎல் விதிமுறைக்கு இணங்க நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளது.

    • 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது.
    • தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் நாளை (ஆகஸ்ட் 17) பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது.

    இந்நிலையில் நாளை செய்தியாளர்கள் சந்திப்பில் இவற்றை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

     பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்த படம் கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்து கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் கூறியிருந்தார். இதனால் இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சலமபல பாடல் வெளியாகி வைரலானது.

    ×