என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வது என்பது சமூக நீதி அல்ல- திருமாவளவன்
- தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து தெரியாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர்.
- குப்பை அள்ளுபவனின் பிள்ளை தான் குப்பை அள்ள வேண்டும் என்பதா?
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியது தி.மு.க. அரசு. தி.மு.க. செய்கின்ற பாவ மூட்டையை திருமாவளவன் சுமக்க வேண்டாம். தி.மு.க. சொல்வதை திருமாவளவன் அறிக்கையாக வெளியிடுகிறார். சேரக்கூடாத இடத்தில் திருமாவளவன் சேர்த்து விட்டார். தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாவது:-
தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்புடையத்தல்ல.
குப்பை அள்ளும் தொழிலில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டம். பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.
தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து தெரியாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர். குப்பை அள்ளுபவனின் பிள்ளை தான் குப்பை அள்ள வேண்டும் என்பதா? தலித் பிரச்சனை என்றால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என்று சொல்வதே சாதி புத்தி. ஏன் தலித் பிரச்சனை பற்றி அதிமுக பேசக்கூடாதா? அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா? என்றார்.
சமீப காலமாக அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






