என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • மக்களுக்கான சேவையாற்றுவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
    • உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    மக்களுக்கான சேவையாற்றுவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘கூலி' படத்தில் அவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
    • சமீபத்தில் கூட முக்கிய பிரபலமான ஒருவருடன் திருமணம் என்றெல்லாம் பேசப்பட்டார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் அனிருத்துக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் திரைக்கு வந்த 'கூலி' படத்தில் அவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

    அனிருத் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வது உண்டு. அந்த நடிகையுடன் காதல், இந்த நடிகையுடன் காதல் என்று 'கிசுகிசு'க்களிலும் நிறைய சிக்கி இருக்கிறார். சமீபத்தில் கூட முக்கிய பிரபலமான ஒருவருடன் திருமணம் என்றெல்லாம் பேசப்பட்டார்.

    இந்த நிலையில் அனிருத்தின் திருமணம் எப்போது என்பது குறித்து அவரது தந்தையும் நடிகருமான ரவிசந்தர் ராகவேந்தர் கூறியிருக்கிறார்.

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் 'அனிருத்து'க்கு எப்போது திருமணம்? என்று கேட்டபோது, "எனக்கே தெரியவில்லை. நான் உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன். உங்களுக்கு தெரிந்தால் கட்டாயம் என்னிடம் வந்து சொல்லுங்கள்", என்று கூறினார்.

    34 வயதாகும் அனிருத் வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன்.
    • இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

    பெங்களூரு:

    உலக அளவில் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் புகலிடமாக உள்ளது. இதனால் தொழில்நுட்ப பூங்கா என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ரோபோ பயன்பாடும் அதிகரித்து வருகிறது. ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இல்லத்தரசிகள் வீடுகளை கூட்டி பெருக்கவும், தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    நிலைமை இப்படி இருக்க இல்லத்தரசிகளின் சமையல் வேலையை எளிதாக்க இப்போது ரோபோ வந்துள்ளது. அதாவது தோசை சுடும் ரோபோவை பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

    இதுபற்றி அந்த என்ஜினீயர் ரெடிட் என்ற இணையதள பக்கத்தில் தோசை சுடும் ரோபோவை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

    நான் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் தனிப்பட்ட முறையில் ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளேன். இந்த ரோபோ தானாகவே அடுப்பில் தோசை கல் வைத்தால் போதும் தானாகவே மாவை ஊற்றி தோசையை சுட்டெடுக்கும். எனது குடும்ப உறுப்பினர்கள் தோசை சுட சிரமப்படுவதை பார்த்து நான் இந்த தோசை சுடும் ரோபோவை வடிவமைத்தேன்.

    இந்த ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன். (திண்டி என்றால் தமிழில் சிற்றுண்டி என்று பொருள்). இதுதொடர்பாக உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதன் விலை பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை.

    இந்த பதிவை பார்த்த பல இணையதள வாசிகள் அந்த என்ஜினீயரின் கண்டுபிடிப்புக்காக அவரை பாராட்டி வருகிறார்கள். ஒருவர், இந்த தோசை ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் ஸ்டேடியம் போல் தெரிகிறது என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

    மற்றொருவர், இந்த ரோபோவை உருவாக்க நீங்கள் நிறைய கடினமாக உழைத்திருக்க வேண்டும் என எனக்கு தெரிகிறது. இதைவிட இன்னும் சிறப்பான ரோபோவை உருவாக்க வேண்டும். அதற்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார். இன்னொருவரின் பதிவில், இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் எடுத்த முயற்சியை நான் புரிந்துக்கொள்கிறேன் என்று கருத்து கூறியுள்ளார்.

    குழந்தைகளுக்கு தாய்மார்கள் தோசை சுட்டு ஊட்டும்போது இது அம்மா சுட்ட தோசை... இது அப்பா சுட்ட தோசை என கூறி தோசை ஊட்டுவது வழக்கம். இனிமேல் இது அம்மா... அப்பா... சுட்ட தோசை என கூற முடியாது. இது ரோபோ சுட்ட தோசை என கூறும் நிலை வந்துவிட்டது என்றால் மிகையல்ல.

    • பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.
    • நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று புதின் கூறினார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வருகிறார்.

    இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் வந்து சேர்ந்தனர். அங்கு அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது.

    இந்நிலையில், இரு நாட்டு அதிபர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிபர் புதின் கூறியதாவது:

    எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

    நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான்.

    டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

    உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது.

    அதேவேளை, நீண்டகால தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.

    உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு உடன்படுகிறேன்.

    அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார்.

    அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது.
    • இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 10-ம் தேதி யுஏஇ, 14-ம் தேதி பாகிஸ்தான், 19-ம் தேதி ஓமனுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஜினி திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை பலரும் அவரருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இதற்கிடையே ரஜினி திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை பலரும் அவரருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "சினிமா உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அவரது பயணம் ஒரு சிறப்புமிக்க அனுபவம், அவரது மாறுபட்ட வேடங்கள் தலைமுறை தலைமுறையாக மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

    வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
    • தற்போது, 5 %, 12 %, 18 % மற்றும் 28% என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

    இந்தியாவில் 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலில் உள்ளது. தற்போது, 5 %, 12 %, 18 % மற்றும் 28% என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், "இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்" என்று தெரிவித்தார்.

    அக்டோபர் 20 தீபாவளி வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே ஜிஎஸ்டி முறையில் என்ன மாதிரியான மாற்றங்களை மத்திய அரசு செய்ய உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % , 28% என்ற 4 அடுக்கு வரி 2 அடுக்குகளாக குறைக்கப்பட உள்ளது.

    அதாவது, 12, 28 சதவீத அடுக்குகள் நீக்கப்பட உள்ளன. 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத அடுக்குக்கும், 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் ஆடம்பர மற்றும் புகையிலை, குட்கா, சிகரெட் போன்ற பொருட்கள் சிறப்பு வரி அடுக்கில் சேர்க்கப்பட்டு அவற்றுக்கு 40% வரி வசூலிக்கப்பட உள்ளது.

    இந்த 40% வரி அடுக்கில் வெறும் 5-7 பொருள்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், இதில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் சேர்க்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

    அதேநேரம் பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே வைத்து இருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது
    • அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

    தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார். 

    இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.

    இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டியவர். மாண்புடன் நடந்து கொண்டு அரசியல் நாகரீகம் பேணிக்காத்தவர்.

    அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்" என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • தலைநகர் டெல்அவிவ் நகரில் அவர்கள் சாலையின் குறுக்கே டயர்களை குவித்து தீ வைத்து எரித்தனர்.

    டெல்அவிவ்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இன்னும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 50 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் காசா போரை நிறுத்தி ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்டு வர வேண்டும் என கூறி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டெல்அவிவ் நகரில் அவர்கள் சாலையின் குறுக்கே டயர்களை குவித்து தீ வைத்து எரித்தனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இஸ்ரேல் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

    இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    • 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

    • 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.
    • செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

    செங்கோட்டையில் குழுமியிருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகள், பொதுமக்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்.

    செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.

    ×