என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசு: GST வரியில் வர உள்ள தரமான மாற்றம் - வெளியான அசத்தல் தகவல்!
    X

    பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசு: GST வரியில் வர உள்ள தரமான மாற்றம் - வெளியான அசத்தல் தகவல்!

    • செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
    • தற்போது, 5 %, 12 %, 18 % மற்றும் 28% என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

    இந்தியாவில் 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலில் உள்ளது. தற்போது, 5 %, 12 %, 18 % மற்றும் 28% என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், "இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்" என்று தெரிவித்தார்.

    அக்டோபர் 20 தீபாவளி வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே ஜிஎஸ்டி முறையில் என்ன மாதிரியான மாற்றங்களை மத்திய அரசு செய்ய உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % , 28% என்ற 4 அடுக்கு வரி 2 அடுக்குகளாக குறைக்கப்பட உள்ளது.

    அதாவது, 12, 28 சதவீத அடுக்குகள் நீக்கப்பட உள்ளன. 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத அடுக்குக்கும், 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் ஆடம்பர மற்றும் புகையிலை, குட்கா, சிகரெட் போன்ற பொருட்கள் சிறப்பு வரி அடுக்கில் சேர்க்கப்பட்டு அவற்றுக்கு 40% வரி வசூலிக்கப்பட உள்ளது.

    இந்த 40% வரி அடுக்கில் வெறும் 5-7 பொருள்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், இதில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் சேர்க்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

    அதேநேரம் பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே வைத்து இருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×