செய்திகள்

2019 பாராளுமன்ற தேர்தல் மோடியே வெற்றி பெறுவார்: 79 சதவீதம் பேர் ஆதரவு

Published On 2017-12-16 05:38 GMT   |   Update On 2017-12-16 05:38 GMT
2019 பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது தொடர்பான ஆன்லைன் கருத்து கணிப்பில் மோடி தலைமையிலான அரசு என்று 79 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர்.
புதுடெல்லி:

2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியை பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தி வெற்று பெற்று ஆட்சியைப் பிடித்தது.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு துணிச்சலாக பல நடவடிக்கைகள் எடுத்தார். அனைவருக்கும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு, தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா உள்பட பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வந்தார்.

தொடர்ந்து அதிரடியாக ரூ.1000, ரு.500 நோட்டுகளை செல்லாததாக அறிவித்தார். கறுப்பு பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி மக்கள் வங்கிகளில் காத்திருந்து அவதிப்பட்ட நிலை ஏற்பட்டது.



அதன்பிறகு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்தினார். இதுவும் வணிகர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு உருவானது. சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது.

இந்த நிலையில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை எடுத்துக் கூறி காங்கிரஸ் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டது. காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடியும் எதிர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மோடியின் நடவடிக்கைகளால் குஜராத்தில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருத்து நிலவியது. ஆனால் ஓட்டுப்பதிவு முடிந்ததும் நடந்த கருத்து கணிப்புகளில் குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது பா.ஜனதாவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் டைம்ஸ் குரூப் நிறுவனம் சார்பில் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது தொடர்பாக ஆன்லைன் மூலம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 9 மொழிகளில் நடந்தது. இதில் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் யாரை ஆதரிப்பீர்கள் என்று ஆன்லைனில் வாக்களிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 பகுதியாக நடந்த இந்த கருத்துகணிப்பில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டு ஆன்லைனில் வாக்களித்தனர்.

அதில் பெரும்பாலானவர்கள் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் வந்தால் கூட தங்கள் ஆதரவு மோடிக்கே என்று தெரிவித்துள்ளனர். மோடிக்கு 79 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 20 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர். 58 சதவீதம் பேர் தங்களுக்கு ராகுல்காந்தி மீது ஈர்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.



பா.ஜனதாவுக்கு மோடி தலைவராக இல்லாவிட்டால் கூட ஆதரிப்போம் என்று 48 சதவீதம் பேரும், இல்லை என்று 31 சதவீதம் பேரும், கருத்து சொல்ல விரும்பவில்லை என்று 21 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். ராகுல்காந்தி தலைவராக இல்லாவிட்டால் காங்கிரஸ் மிக மோசமாக பின்தங்கி விடும் என்று 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு யார் ஆட்சி அமைப்பார்கள் என்று கேள்விக்கு மோடி தலைமையிலான அரசு என்று 79 சதவீதம் பேரும், ராகுல் தலைமையிலான அரசு என்று 16 சதவீதம் பேரும், 3-வது அணி என்று 5 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

ராகுல்காந்தி தலைவராக இல்லாத காங்கிரசை ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்று 21 சதவீதம் பேரும், இல்லை என்று 73 சதவீதம் பேரும், கருத்து சொல்ல விரும்பவில்லை என்று 6 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News