இந்தியா

ரீமால் புயல் எதிரொலி: 21 மணி நேரத்திற்கு விமான சேவை ரத்து

Published On 2024-05-25 16:46 GMT   |   Update On 2024-05-25 16:46 GMT
  • நாளை காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.
  • கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயல், வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.

இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரீமால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மதியம் 12 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை 21 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தப்படுகிறது.

கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News