நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு - நடிகர் திலீப்பின் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு
- நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி திலீப்பை விடுவித்தது.
- குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற ஆறுபேருக்கு தண்டனையை உயர்த்தி வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பிரபல நடிகை வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற ஆறுபேருக்கு தண்டனையை உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்த டிசம்பர் 8 அன்று எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி திலீப்பை (எட்டாவது குற்றவாளி) விடுவித்தது. இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது என்றும், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் கூறி அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
திலீப்புடன் சேர்த்து விடுவிக்கப்பட்ட சார்லி தாமஸ், சனில் குமார் மற்றும் சரத் ஆகியோரின் விடுதலையையும் அரசு எதிர்த்துள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேருக்கும் தண்டனையை உயர்த்தி (ஆயுள் தண்டனை வரை) வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.