இந்தியா

வங்கதேசத்தில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. கொல்கத்தா வரை நில அதிர்வு - மக்கள் வீதிகளில் தஞ்சம்

Published On 2026-02-27 16:05 IST   |   Update On 2026-02-27 16:05:00 IST
  • தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் பீதியடைந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர்
  • சிக்கிம் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

வங்கதேசத்தில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் சுமார் 1:30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டாக்காவிலிருந்து 188 கி.மீ தொலைவில், 9.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கத்தின் போது வீடுகளில் இருந்த மின்விசிறிகள், சோபாக்கள் ஆடியதாகவும், மேஜையில் இருந்த பாட்டில்கள் கீழே விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

கொல்கத்தாவில் மாநில தலைமை செயலகம், சட்டமன்றம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிலநடுக்கத்தால் பீதியடைந்தனர். அச்சத்தில் அவர்கள் தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

முன்னதாக மதியம் 12:02 மணியளவில் சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி பகுதியிலும் ரிக்டர் அளவில் 2.7 கொண்ட சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவிலான உயிரிழப்புகளோ அல்லது கட்டிட சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.  

Tags:    

Similar News