இப்போ டெல்லில தேர்தல் நடத்தி 10 சீட்டு ஜெயிங்க பார்ப்போம்: பா.ஜ.க.வை சாடிய கெஜ்ரிவால்
- மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
- இதுதொடர்பாக பேசிய கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்துவிட்டது என்றார்.
புதுடெல்லி:
டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அரசுத்தரப்பு அதன் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது என தீர்ப்பில் குறிப்பிட்டது.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தலைநகர் டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்த பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கிறேன். இப்போது தேர்தல் நடந்து, அதில் பா.ஜ.க. 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன் என தெரிவித்தார்.
பா.ஜ.க. ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்துவிட்டது. இன்று நான் மோடிக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்துங்கள். பா.ஜ.க. 10-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன். நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரும் முழு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க, அவர்கள் ஒன்றாக இந்த சதியை செய்தனர் என தெரிவித்தார்.