செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது- சீமான் பேட்டி

Published On 2019-01-26 04:56 GMT   |   Update On 2019-01-26 04:56 GMT
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். #seeman #Rajinikanth #pmmodi

நெல்லை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றகோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கொடநாடு பிரச்சினையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள காவல்துறையால் நேர்மையாக விசாரணை நடத்த முடியாது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முதன் முதலாக போராட்டம் நடத்தியது நாங்கள்தான்.

காங்கிரஸ் கட்சி குடும்ப சொத்து, இதில் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுப்பதில் தவறு ஏதுமில்லை என கருதுகிறேன். தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று பொய் பேசி வருகின்றனர். கருத்து கணிப்பில் பா.ஜனதாவுக்கு ஓட்டுபோடுவோம் என்று யாரும் கூறவில்லை. கருத்துகளை உருவாக்குகிறார்கள்.

மாநில கட்சிகள்தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமர் யார் என்று தீர்மானிப்பார்கள். இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், கூட்டாட்சி தத்துவம் சிறப்படையும். ஜனநாயகம், அதிகாரம் பரவலாக்கப்படும். மாநில கட்சிகள் அதிகாரம் பெற்று இந்தியாவை கூடி பேசி கூட்டாட்சி செய்தால்தான் சரியானதாக இருக்கும்.

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தேர்தலுக்காக அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆட்சி முடிவடையும் போது நலத்திட்டங்களை அறிவித்து, அடிக்கல் நாட்டுகின்றனர். தேர்தல் முடிந்த உடன் ஒருமித்த கருத்துடன் புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்.


கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே விஜயகாந்த் கட்சி தொடங்கி வெற்றி பெற்றார். ஆனால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் யாரும் இல்லாத திடலில் கம்பெடுத்து சுழற்றுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, அவர் நடிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், வர வேற்கிறோம். ஆனால் அவர் முதல்வராகவும், தலைவராகவும் இருந்து ஆட்சி செய்வது ஆபத்தானது, அதை நாங்கள் எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். #seeman #Rajinikanth #pmmodi

Tags:    

Similar News