தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வெப்பநிலை மீண்டும் படிப்படியாக அதிகரிக்கும்

Published On 2024-05-24 02:01 GMT   |   Update On 2024-05-24 02:01 GMT
  • கோடை மழை பரவலாக பெய்து வந்ததால், தமிழ்நாட்டில் அனேக இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருந்தது.
  • கேரள கடற்கரையையொட்டி அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்ல உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்கிய சில நாட்கள் வெயில் வாட்டி வதைத்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து கோடை மழை பெய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்த நிலையில், அதன் பிறகு பரவலாக மழை கொட்டத் தொடங்கியது.

அதிலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் என அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை வரை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னல் மற்றும் 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்திலான பலத்த காற்றுடன் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கோடை மழை பரவலாக பெய்து வந்ததால், தமிழ்நாட்டில் அனேக இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அந்த வகையில், இன்று முதல் 27-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் இயல்பையொட்டியும், நாளை மறுதினமும் (சனிக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (ஞாயிற்றுக்கிழமை) இயல்பைவிட அதிகமாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள கடற்கரையையொட்டி அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்ல உள்ளது. இது புயலாக மாறுமா? அல்லது தாழ்வுப் பகுதி நிலையிலேயே அதிக மழையை அந்த பகுதிகளையொட்டிய இடங்களில் பெய்யுமா? என்பதை வரக்கூடிய நாட்களில் தெரியவரும். அந்த வகையில் பார்க்கும்போது, கேரளாவில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதாலும், கேரளா, லட்சத்தீவு-மாலத்தீவு சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Tags:    

Similar News