search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை மழை"

    • தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    சூறைக்காற்றால் வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்ட காஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.

    சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி தீபு (வயது 35) என்பவரின் 700 நேந்திரம் வாழைகள், சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழைகள், ராசு என்பவரின் 1000 வாழைகள், தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின் 1000 வாழைகள் என மொத்தம் 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது.

    அதேபோல தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல் ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலை பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒருபுறம் மழை வந்து சந்தோசம் இருந்த போதும் சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைகாற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 23-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    24 மற்றும் 25-ந்தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    26.04.2024 மற்றும் 27.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் 25-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும், இதர தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 25-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.

    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாளபுரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராமத்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெங்கு பாதிப்புக்கு 6 பேர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
    • காய்ச்சல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில் கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் 1,373 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 294பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெங்கு பாதிப்புக்கு 6 பேர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

    மாநிலத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜிகா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால், கொசு உற்பத்தியை தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 21 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    பாபநாசத்தில் அதிகபட்சமாக 58 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 38 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 24 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 26.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அங்கு 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. பாளையில் 2 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான சாரல் அடித்தது. களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கரைகளில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், ராமநதியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறில் 1 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இன்று காலை வரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாவூர்சத்திரம், சுரண்டை, வி.கே.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
    • களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும், மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதில் தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் அதிகபட்சமாக 2.6 சென்டி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 1.9 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 1.8 சென்டிமீட்டரும், ஊத்தில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும் இன்றும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.60 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாநகர பகுதி முழுவதும் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 தினங்களுக்கு பல்வேறு இடங்களில் பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தூத்துக்குடியில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதே போல ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை முதலே மிதமான மழை பெய்தது.

    இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர். கார்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஏரல் பகுதியில் இன்று சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் பொது மக்கள் குழந்தைகள் தவிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு காலை 9 மணி முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாகவே காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது.

    கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், குளச்சல், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம், தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பேச்சிபாறை அணையை பொருத்தமட்டில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.16 அடியாக உள்ளது. அணைக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.75 அடியாக உள்ளது.

    அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
    • கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், இது ஒரு குளிர்பிரதேசம் என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக காலை முதல் மாலை வரை அனல் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்ததால் அங்குள்ள அணைகள் மற்றும் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

    நீலகிரியில் கோடைக்காலம் தொடங்கும்போது அனல் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு பெய்ய வேண்டிய கோடைமழை தொடங்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு, வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சடசடவென கோடைமழை பெய்ய தொடங்கியது. இது சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

    இதனால் ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.

    இது அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கோடைக்காலம் காரணமாக வனப்பகுதிகள் வறண்டு காணப்படுவதால் அங்கு தற்போது அடிக்கடி வனத்தீ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் ஊட்டியில் கோடைமழை காரணமாக அங்கு தற்போது குளிர்ந்த காற்று வீசுவதுடன் இதமான காலநிலையும் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.
    • மழையால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.

    திருச்சி:

    வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 61.2 சென்டி மீட்டர் மழை பதிவானது. நேற்று மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. திருச்சி மாநகரில் நேற்று இரவு இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.

    ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது. இந்த நிலையில் பெய்த மழையால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    மாவட்டத்தில் அதிகபட்ச மாக திருச்சி டவுன் பகுதியில் 58.3 மில்லி மீட்டர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் 42, ஏர்போர்ட் பகுதியில் 19.6,பொன்மலையில் 39.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கிராமப்புறங்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மணச்சநல்லூர் தாலுகாவில் வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 11.2 மில்லி மீட்டர், மணப்பாறையில் 7.6, முசிறியில் 20 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் 9.5, துவாக்குடி 5.1,துறையூர் தென்பர நாடு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கரூர் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட நிர்வாகம் மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

    கடந்த 2 நாட்களில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, கந்தர்வகோட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே மானாவாரி நிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறுகளீல் நீர் இருப்பு குறைவாக இருந்தது.

    தற்போது பெய்த மழையால் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி பாசன பகுதியிலும் மழை பெய்துள்ளதால் சம்பா பயிர்களுக்கு இதமாக அமையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • கேரளாவில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
    • பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை மற்றும் இரவில் மழை பெய்தது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

    இதன் தொடர்ச்சியாக வழக்கமாக சம்பா, குறுவை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் போதிய நீர் ஆதாரம் இல்லாததால் சாகுபடி பரப்பை குறைத்தனர். அதேபோல் பயிரிட்டுள்ள நெல் நாற்றுகள் தண்ணீரின்றி கருகும் நிலையும் உருவானது.

    இந்தநிலையில் கேரளாவில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. இதற்கிடையே இன்று காலை முதல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி, பசும்பொன், ஆர்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி, திருவாடானை, தேவிப்பட்டினம் மற்றும் கடலோர பகுதிகளான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர். காற்றின் தாக்கம் அதிகம் இல்லாத நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி பணியை மீண்டும் தொடங்கி அதற்கான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகிறார். அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×