இந்தியா

2050-ல் 2 பேரில் ஒருவர் பாதிக்கப்படலாம்: அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை

Published On 2024-05-23 14:50 GMT   |   Update On 2024-05-23 14:50 GMT
  • மயோபியா என்பது கிட்டப்பார்வை குறைபாடு என அறியப்பட்டு வருகிறது.
  • இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

புதுடெல்லி:

உலக மயோபியா விழிப்புணர்வு வாரம் மே 22 முதல் 26 வரை கொண்டாடப்படுகிறது இதில் மயோபியா நோய் பற்றியும், இந்தியாவில் அதன் பாதிப்பு வரும் காலத்தில் மோசமாக இருக்கப் போவதையும் பல்வேறு டாக்டர்கள் கணித்துள்ளனர்.

மயோபியா என்பது கிட்டப்பார்வை குறைபாடு என அறியப்பட்டு வருகிறது. அதாவது, அருகில் உள்ளவை கண்களில் தெளிவாக தெரியும். தூரத்தில் உள்ளவை மங்கலாக தெரியும் நோயாகும்.

கணினி, செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகர்ப்புறத்தில் இருக்கும் 5-15 வயதுடைய குழந்தைகள் 3 பேரில் ஒருவர் வீதம் மயோபியாவால் பாதிக்கப்படும் நிலை உருவாகும். 2050-ம் ஆண்டுக்குள் பாதிப்பு அளவு இரட்டிப்பு அடைந்து இருவரில் ஒருவருக்கு மயோபியா ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

மயோபியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மங்கலான பார்வை, தொலைதூரப் பொருட்களைப் பார்ப்பதில் சிரமம், கண் சோர்வு, தலைவலி மற்றும் உடல் சோர்வு ஏற்படும். கணினி, செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்திய பிறகு இதுபோன்று தோன்றினால் அது மயோபியா ஏற்படுவதன் அறிகுறிகள் ஆகும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கண் பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக குழந்தைகள் செல்போன், கணினி பயன்படுத்துவதை விட்டு வெளியில் சென்று விளையாடுவதை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Tags:    

Similar News