இந்தியா

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்

Published On 2026-01-16 01:59 IST   |   Update On 2026-01-16 01:59:00 IST
  • ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
  • இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துவருகிறது.

புதுடெல்லி:

ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இந்தியக் குடிமக்கள் மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் அங்கு கிடைக்கும் எந்தவொரு போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது.

ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளும்படி வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள் மூலம் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமை மேலும் மோசமடைந்தால், அவர்களை மீட்க இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை மந்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News