இந்தியா

வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் வெடிவிபத்து... 17 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்..!

Published On 2026-03-01 13:05 IST   |   Update On 2026-03-01 13:05:00 IST
  • இன்று காலை நடந்த வெடிவிபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
  • தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரவுல்கானில் உள்ள சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தியாளரான எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதனை மூத்த காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும், இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாகவும், 18 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்.) குழு மீட்புப் பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தது. இன்று காலை 7 மணி முதல் காலை 7.15 மணிக்குள் நிறுவனத்தின் டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் இந்த சம்பவம் நடந்ததாக எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் பிரதிநிதிகள், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

மீட்பு பணிகள் நடந்து வருவதாக நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார், இது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார். குண்டுவெடிப்பு நடந்த உடனேயே காயமடைந்தவர்கள் நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் விபின் இடங்கர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போடர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முன்னதாக ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு துயர சம்பவமாக இந்த விபத்து நடந்துள்ளது.

Tags:    

Similar News