ஈரான் அதிபர் கமேனி பலி: அமெரிக்காவுக்கு எதிராக காஷ்மீரில் போராட்டம்
- ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
- காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு ராணுவ தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் மத்தியில் இந்த படுகொலை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கமேனியின் படத்துடன் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஸ்ரீநகர் லால் சவுக்கில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு கமேனி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் ஈரானை ஆதரித்தும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலைமை மோசமடையாமல் இருக்க போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
வதந்திகள் பரவாமல் தடுக்கவும், போராட்டங்கள் மேலும் விரிவடையாமல் இருக்கவும், இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமேனி உயிரிழந்த செய்தி அறிந்ததும் பல இடங்களில் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தி துக்கம் அனுசரித்தனர்.
மேலும் லடாக், லே பகுதி உள்ளிட்ட காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவ பொம்மையையும் எரித்தனர். இஸ்ரேல், அமெரிக்க கொடியுடன் கூடிய உருவபொம்மையை எரித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இதே போல உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.