இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்
- அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2,500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- தொடர் போராட்டங்களால் ஈரானில் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்து முடங்கியது.
புதுடெல்லி:
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
ஈரானில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 2,500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்தும் முடங்கியது.
இந்தப் போராட்டங்களால் நாடு முழுவதும் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கு வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு கடந்த 5-ம் தேதி எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், ஈரானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாவதை அடுத்து, இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரானில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மீண்டும் ஒருமுறை தீவிரமாக அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.