செய்திகள்

கல்லீரல், சிறுநீரகம் செயல் இழப்பு: ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்

Published On 2017-09-26 00:55 GMT   |   Update On 2017-09-26 00:55 GMT
கல்லீரல் செயல்திறன் குறைந்ததால், ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் கூறினர்.
சென்னை:

கல்லீரல் செயல்திறன் குறைந்ததால், ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் கூறினர்.

அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74), கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 10-ந்தேதி திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங் மருத்துவ கல்லூரி மற்றும் குளோபல் மருத்துவமனையில் பணியாற்றும் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான குழுவினர் ம.நடராஜனை பரிசோதித்து ‘தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில்’ அனுமதித்திருந்தனர்.பல உறுப்புகள் செயல் இழப்பு ஏற்பட்டு ம.நடராஜனுக்கு அங்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று உடல்நிலை முன்னேற்றம் இருந்தது. இந்தநிலையில் நேற்று மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.

இதுகுறித்து குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இயக்குனர் டாக்டர் கே.இளங்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ம.நடராஜன் எங்கள் மருத்துவமனையில் கல்லீரல் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருகிறார். நாள்பட்ட கல்லீரல் நோய் காரணமாக அவருக்கு, கல்லீரல் செயல் இழந்ததுடன், சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. அத்துடன் நுரையீரல் நீர்தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக கல்லீரலும், சிறுநீரகமும் மாற்றப்பட வேண்டும் என்பதற்காக தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இருந்தும் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்றுவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். அவருடைய குடும்பத்தினருக்கும் நிலைமையை தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News