உள்ளூர் செய்திகள்

தொடர் மழை: குளம்-தடுப்பணைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2024-05-24 04:56 GMT   |   Update On 2024-05-24 04:59 GMT
  • கடந்த 4 நாட்களாக சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது.
  • கால்நடை வளர்ப்பிற்கும் இந்த மழை நீர் அமைந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவது தொடர்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே திருப்பூரில் சதமடித்த வெயிலால் மக்கள் திக்குமுக்காடி போனார்கள். கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் பகல் வேளையில் வீதியில் நடமாடுவதை தவிர்த்தனர். ஆனால் வெயில் உக்கிரகாலமான அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நேற்று மாலை திருப்பூர் மாநகரில் தூறலுடன் மழை பெய்தது. சாலையோர வியாபாரிகளே இந்த மழையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தள்ளுவண்டி உணவகங்கள், சாலையோர காய்கறி கடை அமைத்துள்ளவர்கள் தூறலுடன் மழை தொடர்ந்து பெய்ததால் கவலை அடைந்தனர். இரவு வரை தூறல் மழை தொடர்ந்தது.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையின் மையப்பகுதியில் நல்லம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் மங்கலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுச்செல்வது வழக்கம்.

தற்போது பெய்து வரும் மழையால் நொய்யலின் குறுக்கே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் நொய்யல் வெள்ளம் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இந்த நிலையில் நல்லம்மன் தடுப்பணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

தரைப்பாலம் மூழ்கியதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நல்லம்மன் கோவிலுக்கு செல்ல முடியாததால் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கரையின் முன்பகுதியில் உள்ள சிமெண்டு தரையில் தேங்காய், பழம், மாலை, தீபம் வைத்து நல்லம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.


சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் மழை நீர் பெருக்கெடுத்ததுடன் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இ்ந்த மழையால் சேவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. கோடை வெயிலில் தவித்து வந்த மக்கள் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வெப்பம் தணிந்து மழையின் குளிர்ச்சியை அனுபவித்தனர். இரவில் இதமான குளிர்ந்த காற்று வீசியது.

இந்த நிலையில் தத்தனூர் ஊராட்சியில், பொதுப்பணித்துறையின் குளம் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தொடர்ந்து பெய்த கனமழையால் நேற்றுமுன்தினம் இரவு முதல் குளம் நிரம்பி வழிந்து செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பலர் அங்கு வந்து நீர் நிலைகளை பார்த்து ரசித்து செல்கிறார்கள். இதேபோல் மங்கரசுவலையபாளையம் ஊராட்சி பேரநாயக்கன்புதூரில் கனமழைக்கு அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்பணை குட்டை நிரம்பியது.

இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 7 அடி உயரம் வரை நீர் மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.

தொடர் மழையினால் ஊத்துக்குளி, கத்தாங்கன்னி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும், கிணறு, குளம் மற்றும் குட்டைகளில் நீரூற்றும் உயர்ந்துள்ளது. ஊத்துக்குளி அருகே உள்ள கத்தாங்கன்னி குளமும் நிறைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் எதிர்பார்த்த அளவு விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் இந்த மழை நீர் அமைந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News