இந்தியா

கேரளாவில் வினோதம்- ஒரு நபருக்கு பதிலாக மற்றொரு நபரை ஜெயிலில் அடைத்த போலீசார்

Published On 2024-05-24 04:59 GMT   |   Update On 2024-05-24 05:56 GMT
  • இரு அபுபக்கரின் தாய் மற்றும் தந்தையின் பெயர் ஒரே பெயராகும்.
  • தன்னை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோர்ட்டை அபுபக்கர் அணுக உள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வெளியங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியங்கோட்டில் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலைபார்க்கும் அபுபக்கர் குடும்ப செலவுக்கு பணம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆகவே அபுபக்கர் மீது அவரது மனைவி ஆயிஷாபி திரூர் குடும்பநல கோர்ட்டில் புகார் செய்தார். அவரது மனுவை விசாரித்த கோர்ட்டு, அபுபக்கருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. அது தொடர்பாக பொன்னானி போலீசார் விசாரணை நடத்தி அபுபக்கரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஆயிஷாபியின் கணவர் அபுபக்கரை கைது செய்வதற்கு பதிலாக, பக்கத்து வீட்டில் வசித்து வரும் மற்றொரு அபுபக்கரை கைது செய்தனர். மனைவியுடன் தகராறு செய்தது தொடர்பாக இவர் மீது வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் தான் தன்னை கைது செய்திருக்கின்றனர் என்று அந்த நபர் நினைத்துக் கொண்டார்.

போலீஸ் நிலையத்துக்கு சென்றதும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் அவரிடம் தெரிவித்தனர். அது தொடர்பான ஆவணங்களை அபுபக்கர் பார்த்தது, இது எனது மீதான வழக்கு இல்லை எனவும், தனது மீது பிடிவாரண்டு எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

ஆனால் அவர் கூறியதை போலீசார் கேட்காமல், அவரை திரூர் குடும்பநல கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ரூ. 4 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் தன்னால் அபராதம் செலுத்த முடியாது என்று அபுபக்கர் கூறினார். இதையடுத்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பேரில் அபுபக்கர் சிறையில் அடைக்கப்பட்டார். அபுபக்கர் சிறையில் அடைக்கப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் தலையிட்டு விசாரணை நடத்தியபோது ஆயிஷாபியின் கணவர் அபுபக்கருக்கு பதிலாக பக்கத்து வீட்டு அபுபக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.

இரு அபுபக்கரின் தாய் மற்றும் தந்தையின் பெயர் ஒரே பெயராகும். இதனால் உண்மையான நபருக்கு பதிலாக மற்றொரு நபரை போலீசார் கைது செய்து விட்டது தெரியவந்தது. இதுபற்றி தவறுதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அபுபக்கரின் உறவினர்கள் கோர்ட்டில் கூறினர். மேலும் அதற்கான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து அபுபக்கரை போலீசார் தவறுதலாக கைது செய்து சிறையில் அடைத்தது உறுதியானது. ஆகவே தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட அபுபக்கரை உடனடியாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அபுபக்கர் 4 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விசாரணை நடத்தியபோது அபுபக்கர், அந்த அபுபக்கர் நான் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அதனை போலீசார் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டதே இந்த தவறுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தன்னை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோர்ட்டை அபுபக்கர் அணுக உள்ளார்.

Tags:    

Similar News