சினிமா

`மெர்சல்' படத்தில் எதிர்ப்புக்குள்ளான காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு

Published On 2017-10-20 08:55 GMT   |   Update On 2017-10-20 08:55 GMT
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மெர்சல் படத்தில் எதிர்ப்புக்குள்ளான காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் மெர்சல்.

தமிழகம் முழுவதும் சுமார் 700 திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் வெளியாவதற்கு முன்பே சில சர்ச்சைகள் வெளியாகி இருந்த நிலையில், படம் வெளியான பின்னரும் மெர்சல் படத்திற்கு எதிராக சில பிரச்சனைகள் எழும்பத் தொடங்கின.

மெர்சல் படத்தில் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்டது. எனவே அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்க வேண்டும் என்ற கருத்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.



அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட வேண்டும். அனைவருக்கும் அரசு இலவச மருத்துவம் கொடுப்பது மிகவும் முக்கியம் என்பதை வற்புறுத்தும் விஜய், “7 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு அந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்குகிறது. ஆனால் நமது நாட்டில் 28 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டும் மருத்துவ வசதி செய்யப்படவில்லை. ஆனால் மக்களை சீரழிக்கும் மதுவுக்கு வரி இல்லை. இதற்கு காரணம் யார்?” என்று சாடுகிறார்.

அரசியல் குறித்து விஜய் பேசும்போது, “ஒரு குழந்தை உருவாக 10 மாதம் ஆகிறது. ஒரு பட்டதாரி உருவாக 3 ஆண்டுகளும், டாக்டர், வக்கீல், என்ஜினீயரிங் படிக்க 4, 5 ஆண்டுகளும் ஆகின்றன. ஆனால் ஒரு நல்ல அரசியல் தலைவன் உருவாக ஒரு யுகம் தேவை” என்று குறிப்பிடுகிறார்.

மத்திய அரசை பற்றி விஜய் வசனம் பேசுகிறார். சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகி இருப்பதால் ‘மெர்சல்’ படத்துக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற மத்திய அரசுக்கு எதிரான ஜி.எஸ்டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து இடம்பெற்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா, பணம் மதிப்பிழப்பு உள்ளிட்ட காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது விஜய் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
Tags:    

Similar News