search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    போர் வரும் போது பார்த்துக் கொள்வோம்: ரசிகர்கள் முன்பு சூசகமாக பேசிய ரஜினி
    X

    போர் வரும் போது பார்த்துக் கொள்வோம்: ரசிகர்கள் முன்பு சூசகமாக பேசிய ரஜினி

    போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று ரசிகர்களுடனான கடைசி நாள் சந்திப்பின் போது ரசிகர்கள் முன்பு ரஜினிகாந்த் சூசகமாக பேசினார்.
    கடந்த 5 நாட்களாக பரபரப்பாக நடந்த ரஜின யின் ரசிகர்கள் சந்திப்பு இன்றுடன் முடிந்தது.

    முதல் நாள் சந்திப்பையே அதிரடியாக தொடங்கினார் ரஜினி. நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் (ரசிகர்கள்) ஏமாந்து போவீர்கள்.

    ஒரு வேளை ஆண்டவன் கட்டளைபடி அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன். அரசியலை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப் பவர்களை அருகில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார்.

    கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியை முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால் ரஜினியோ எதற்கும் பிடிகொடுக்காமல் ‘‘எல்லாம் அந்த ஆண்டவன் கையில்’’ என்று கூறி வந்தார்.



    ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதியாலும் அரசியல் களத்தில் வேகமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா வலுவாக காலூன்ற திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

    இதற்கு ரஜினியை பயன்படுத்தி கொள்ள அக்கட்சி முடிவு செய்தது. இதற்கான முயற்சிகளும் தீவிரமானது. பா.ஜனதா தலைவர்கள் ரஜினிக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினி பா.ஜனதாவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதுபற்றி ரஜினியிடம் கேட்ட போது நோ கமெண்ட்ஸ் என்று பதில் அளித்தார். பா.ஜனதாவின் அழைப்பு பதில் எதுவும் சொல்லாமல் ரஜினி பதிலை தவிர்த்திருந்தாலும் நேரடியான இந்த அழைப்பை அவர் ஏற்க மறுப்பதையே இது காட்டுகிறது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. பா.ஜனதா போன்று காங்கிரஸ் கட்சி ரஜினியை வளைத்து போட திட்டமிட்டுள்ளது.



    இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையிலும் ‘‘என் வழி தனி வழி’’ என்று நிரூபிக்கும் வகையிலேயே ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு அமைந்துள்ளது. ரசிகர்களின் சந்திப்பின் முதல் நாளான கடந்த 15-ந்தேதி அன்றே அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சை ஊறுகாய் போலவே ரஜினி தொட்டு இருந்தார். ஆனால் கடைசி நாளான இன்று ரசிகர்கள் முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது.

    இன்றைய அரசியல் நிலவரம் பற்றியும், தலைவர்கள் குறித்தும் கருத்துகளை தெரிவித்த ரஜினி, தேர்தலை மனதில் வைத்து தனது பேச்சை முடித்துள்ளார். ‘‘போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்’’ என்று ரஜினி கூறி இருக்கிறார். அவர் போர் என்று தேர்தலையே சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.



    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன.

    ரசிகர்களுடனான ரஜினியின் முதல் கட்ட சந்திப்பே முடிந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை அடுத்தடுத்து சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். அரசியல் பிரவேசம் குறித்து அனைத்து ரசிகர்களின் கருத்துகளையும் கேட்டபின்னரே தனது அரசியல் பயணத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க ரஜினி திட்டமிட்டிருக்கிறார்.

    கபாலி படத்தில் இடம்பெற்ற ‘‘வந்துட்டேனு சொல்லு’’ என்கிற ரஜினியின் வசனம் மிகவும் பிரபலம். இதனை ரஜினி ரசிகர்களும் இப்போது முணுமுணுக்க தொடங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேசம் 100-க்கு 90 சதவீதம் உறுதியாகி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
    Next Story
    ×