search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • போட்டிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
      • நிகழ்ச்சியில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சிறப்புப்பள்ளிகள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தென்காசி இ.சிஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

      இந்நிகழ்ச்சியில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சிறப்புப்பள்ளிகள், சிறப்பாசிரியர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • ஆட்டோவில் இலஞ்சியை சேர்ந்த பொன்சேகா உள்பட 4 பேர் பயணித்தனர்.
      • கருங்கல் ஏற்றி வந்த டிராக்டரின் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

      தென்காசி:

      தென்காசி மேலகரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்து சுப நிகழ்ச்சிக்காக உணவு ஏற்றிக்கொண்டு தென்காசி -அம்பை சாலையில் மத்தளம்பாறையை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

      ஆட்டோ கவிழ்ந்தது

      ஆட்டோவில் அந்த உணவகத்தில் வேலை பார்த்த மேல இலஞ்சியை சேர்ந்த பொன்சேகா(வயது 36) என்ற பெண் உள்பட 4 பேர் பயணித்தனர்.

      அங்கராயன்குளம் அருகே வந்தபோது எதிரே தென்காசியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளின் மீது ஆட்டோ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து, கருங்கல் ஏற்றி வந்த டிராக்டரின் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

      தலை நசுங்கி பலி

      இந்த விபத்தில் பொன் சேகா இடிபாடுகளில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

      விபத்து குறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்சேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் (21) என்ற வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

      இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது.
      • மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் பணிக்கர் ஊரணிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.14.39 லட்சத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊரணி அமைக்கப்பட்டது. குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மகிழ்வண்ணநாதபுரம் அருகே உள்ள நாகல்குளம் வந்தடைந்து அங்கிருந்து மானூர் கால்வாய் மூலம் தண்ணீர் பல கிராமங்களை கடந்து மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது. இந்த மாறாந்தை கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பணிக்கர் ஊரணிக்கு கொண்டு வரப்பட்டு நிரப்பபடுகிறது.

      இந்த ஊரணியில் தண்ணீர் தேக்குவதால் அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த மழையால் இந்த ஊரணிக்கு மாறாந்தை கால்வாய் மடையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வந்துள்ளது. இதனால் ஊரணி கரையின் வடபுறம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. ஊரணி சுற்றி கட்டப்பட்ட கரையின் சுவர் தரமில்லாததால் உடைப்பு பெரியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் அருகில் உள்ள மானூர் கால்வாய் வழியே வீணாக வெளியேறியது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாறாந்தை கால்வாய் மடை அடைக்கப்பட்டு உடைந்த ஊரணி கரையை சரி செய்யும் பணி தொடங்கி உள்ளது.ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊரணி கரை தரமில்லாமல் 2 மாதத்தில் உடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தரமில்லாமல் ஊரணி கட்டியவர்கள் மீதும் அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊரணிக்கு இருபுறமும் கால்வாய் செல்வதால் கரை உடைப்பால் நடவுக்காக பயிரப்பட்ட நெல் நாற்றுகள் சேதம் ஆகி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

      • என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று காலை தொடங்கியது.
      • பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில்-ராஜபாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து ராஜபாளையம், மதுரை செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம், பருவக்குடி வழியாக ராஜபாளையம் பிரதானசாலையில் செல்லும். அதேபோல் ராஜபாளையம், மதுரையில் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி வந்து அங்கிருந்து அச்சம்பட்டி சாலை சென்று வேல்ஸ் மெட்ரிக் பள்ளி, வடக்குப்புதூர் வழியாக பஸ் நிலையம் வந்து செல்லும். மாலை 6 மணிக்கு மேல் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும். எனவே பொதுமக்கள் மாற்று வழியைப் பயன்படுத்த கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் குமார் தெரிவித்துள்ளார்.

      • தாயார்தோப்பு கிராமம் மற்றும் அரசு புறம் போக்கு நிலங்களில் பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
      • தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க குறைந்தது 2 முதல் 3 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

      தென்காசி:

      வீரகேரளம்புதூரில் தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந் நிலையில் வீரகேரளம்புதூர் அருகே உள்ள தாயார்தோப்பு கிராமம் மற்றும் மாணவர் விடுதி அருகில் உள்ள அரசு புறம் போக்கு நிலங்களில் பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க குறைந்தது 2 முதல் 3 ஏக்கர் நிலம் தேவைப்படும். தாயார்தோப்பு மற்றும் அரசு மாணவர் விடுதி அருகில் உள்ள இடங்கள் குறைவான அளவில் உள்ளது. எனவே இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பேசி இடங்களை பெற்று தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.

      ஆய்வின்போது பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரி பேச்சிமுத்து, வக்கீல் சுப்பையா, துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் இசக்கிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி, கிராம உதவியாளர் ஜேம்ஸ்ராஜ், வெற்றிவேலன், பேச்சிமுத்து உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

      • மாணவி காளி பிரியா அண்ணாமலையார் தீப பாடலுக்கு நடனமாடினார்.
      • நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தினர்.

      தென்காசி:

      இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியில் கார்த்திகை தீபத் திருநாள் கொண் டாட்டம் நடைபெற்றது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார்.

      பள்ளி முதல்வர் பால சுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஷைனி பிரீத்தி வரவேற்று பேசினார். மாணவி குங்கும காயத்ரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி காளி பிரியா அண்ணாமலையார் தீப பாடலுக்கு நடனமாடி னார். மாணவி ரட்சனா கார்த்திகை பண்டிகையின் சிறப்பினை பற்றி பேசினார். மாணவர் ஜீவா கார்த்திகை தீபம் குறித்து கவிதை கூறினார்.

      நிகழ்ச்சியில் பிளஸ்-2 வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சுமதி, 10-ம் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வலிங்கம், கணித ஆசிரியர் சரவணன், 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகள் குழு வாக இணைந்து தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தினர். முடிவில் மாணவி ரேணுகா தேவி நன்றி கூறினார். ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், கல்வி ஆலோ சகர் உஷா ரமேஷ், இயக்கு னர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

      • தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
      • நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாளை மறுநாள் ( 27-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.

      அதனை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பா ளர் கிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார்.

      இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி தென்காசியில் உள்ள திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி, நேரு உயர்நிலைப் பள்ளி, பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜான்சன் உயர் நிலைப்பள்ளியை சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு-புத்தகங்கள், பென்சில் மற்றும் பேனா ஆகியவற்றை வழங்கினார்.

      நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணி யன், முகமது அப்துல் ரஹிம், ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர் செயலாளர்கள், மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது அப்துல் ரஹிம் செய்திருந்தார்.

      • பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
      • நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

      ஆலங்குளம்:

      நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

      பாலப்பணிகள்

      ஆலங்குளம் தொட்டி யான்குளம் கரைப் பகுதியில் பாலப் பணிகள் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், பாலம் வேலை நடைபெறும் இடங்களில் வாகனங்கள் சென்று வர நெடுஞ்சாலைத்துறையினர் போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் இரு இடங்களிலும் அடிக்கடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

      இப்பகுதியில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கை களைக் கண்டு கொள்ளவில்லை என கூறினர்.

      இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இப்பகுதியில் பெய்த கன மழையால் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் சாலை வலுவிழந்து சேதமடைந்தது. இதனால் இரு வாகனங்கள் சென்று வர வேண்டிய இடத்தில் ஒரு வாகனம் மட்டுமே சென்று வந்ததால் சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

      தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சாலையில் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் போட்டு ஒரு புறமாக வாகனங்கள் செல்ல வழி செய்தனர்.

      சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக 5 கி. மீ தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்து சென்றதால் நெல்லை மற்றும் தென்காசி ரயில் நிலையத்திற்கு சென்ற பயணிகள், மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இரவானதால் சாலையை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

      தொடர்ந்து இரவில் போலீசார் அப்பகுதியில் நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

      நெடுஞ்சாலைத்துறை யின் பெரும் அலட்சியத்தால் ஆலங்குளத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர் என வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர்.

      • முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
      • தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

      சிவகிரி:

      தென்காசி மாவட்டம் சிவகிரி ஊருக்கு மேற்கே உள்ள வழிவழி கண்மாய் பகுதியை மேல்வைப்பாறு வடிநில பிரிவு உதவி பொறியாளர் முப்பிடாதி பார்வையிட சென்றார்.

      அனுமதி இன்றி மண் அள்ளினார்

      அப்போது, கண்மாயில் தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் கனகராஜ் (வயது 35) என்பவர் பொக்லைன் எந்திரம் மூலமாக மண் அள்ளி, தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்த தங்கமலை ( 45) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரில் கொட்டி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

      உதவி பொறியாளர் முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து உதவி பொறியாளர் முப்பிடாதி சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

      வழக்குப்பதிவு

      அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தார். புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் நேரில் சென்று பார்வையிட்டு இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்தார்.

      தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரையும் பொக்லைன் எந்திரத்தையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

      • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.
      • கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      செங்கோட்டை:

      செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.

      இதில் மாநில மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் 25, 26-ந் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக செயலாற்றுதல் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகளுக்கு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., எடுத்து கூறி னார்.

      இதில் மாவட்ட இணை செயலாளர் சண்முகப்பிரியா, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்மு கையா, முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல செய லாளர் கந்தசாமி பாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை நிலைய பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்க வேண்டும்.
      • அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

      சங்கரன்கோவில்:

      தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-

      தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

      அவரது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சங்கரன்கோவிலில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் முழு நேர உணவு வழங்குதல், வாசுதேவநல்லூரில் உள்ள சிறப்பு இல்லத்தில் முழு நேர உணவு வழங்குதல், வடக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் மற்றும் குழந்தைகள் காப்பு பெட்டகம் வழங்குதல்,

      வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு சீருடை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

      மேலும் பிறந்தநாள் அன்று ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இளைஞர் அணி சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியின் பங்கு குறித்து தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர் அந்தந்த பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.
      • ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாமிற்கு வருபவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஸ்ரீ சக்தி மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

      ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன் ஏற்பாட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகம், நெல்லை ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து நடத்தும், இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிறபகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

      இதில் ஸ்ரீ சக்தி மருத்து வமனை மருத்துவர்கள் வெங்கடேஷ் பாபு, சுமதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.

      முகாமில் மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், இடுப்பு மற்றும் கழுத்து வலி, தண்டுவட மற்றும் வாதநோய் பிரச்சனை, தோள்பட்டை அல்லது மணிக்கட்டு வலி, உடல் எடை குறைவு மற்றும் கூன் விழுதல், முதுகு வலி உள்ளிட்ட அனைத்து விதமான எலும்பு சம்பந்தப்பட்ட நோய்க ளுக்கும் தீர்வு காணலாம்.

      மேலும், வருங்காலங்க ளில் எலும்பு பலவீனத்தால் எலும்பு முறிவு பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில், முகாமிற்கு வருபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

      எனவே, முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் 94425 91760, 94878 10000 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×