search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாண்டஸ் புயல்"

    • திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
    • கோணசமுத்திரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை மிளகாய் ஆகிய பயிர்களும் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.

    திருவள்ளூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இன்று விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கோணசமுத்திரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை மிளகாய் ஆகிய பயிர்களும் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.

    சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமராவதி அணையில் இருந்து 1,282 கனஅடி தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
    • இந்த ஆண்டில் 5-வது முறையாக அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    உடுமலை:

    மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்தநிலையில் புயல் கரையை கடந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த ஆறுகள் மூலம் நீர் பெறுகிற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளின் நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை உள்ளது.

    90 அடிக்கு நீர் தேங்கும் வகையில் 4.04 டி.எம்.சி., கொள்ளளவுள்ள இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    மாண்டஸ் புயல் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை, கொடைக்கானல், மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நீர்வரத்தை நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு அணைக்கு திடீரென 1000 கனஅடியை கடந்து நீர்வரத்து இருந்தது. இதனையடுத்து அணையில் ஏற்கனவே 89.5 அடிக்கு நீர்தேக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு கருதி வரத்து நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 89 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,282 கனஅடி தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    அணையின் மொத்த கொள்ளளவான 4.04 டி.எம்.சி.யில் தற்போது 3.99 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது. அணை முழு கொள்ளளவில் தற்போது உள்ளது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் வரும் நீர் முழுமையாக உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த ஆண்டில் 5-வது முறையாக அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 9-ந்தேதி இரவு முதலே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் மர அறுவை எந்திரங்களை பயன்படுத்தி அகற்ற தொடங்கினார்கள்.
    • 644½ டன் எடையுள்ள மரக்கழிவுகள் 100 டிப்பர் லாரிகளின் மூலம் 291 நடைகளாக மாநகராட்சியின் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    சென்னை:

    'மாண்டஸ்' புயலினால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும், ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன. அதன்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில் விழுந்தன.

    இந்த மரக்கிளைகள் அனைத்தையும் மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 9-ந்தேதி இரவு முதலே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் மர அறுவை எந்திரங்களை பயன்படுத்தி அகற்ற தொடங்கினார்கள்.

    அந்தவகையில் 644½ டன் எடையுள்ள மரக்கழிவுகள் 100 டிப்பர் லாரிகளின் மூலம் 291 நடைகளாக மாநகராட்சியின் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் ஓய்ந்த பின்னரும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் விட்டு, விட்டு மழை கொட்டியது.

    பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

    இதில் 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.

    இதே போல் 139 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 41 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது.
    • அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி இருக்கிறது.

    ஆலந்தூர்:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

    இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதே போல் நேற்று 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

    மேலும் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 2 மணி நேரம் ஓடு பாதையும் மூடப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மலேசியா, மும்பை, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றன.

    இந்த நிலையில் தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி இருக்கிறது.

    இது தொடர்பாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "சென்னை விமான நிலையத்தில் விமான சேவை வழக்கம் போல் உள்ளது. கடினமான நேரத்தில் உறுதுணையாக இருந்த அரசு மற்றும் விமான நிலையங்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நிலைமையை புரிந்து ஒத்துழைப்பு அளித்த அனைத்து பயணிகளுக்கும் நன்றி" என்று கூறப்பட்டுள்ளது.

    • நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்
    • போக்குவரத்து மாற்றம்

    வாணியம்பாடி:

    மாண்டஸ் புயலால் வாணியம்பாடி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது. வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதி சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால், வாணியம்பாடி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.

    இதேபோல், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில், சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதை நகராட்சிப் பணியாளர்கள் வெட்டி அகற்றினர்.

    • அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை
    • அதிகாரிகள் ஆய்வு

    அரக்கோணம்:

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதன்படி அரக்கோணம் அடுத்த அரிகிலபாடி கிராமத்தில் ரமேஷ் என்பவரது வீடு அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ளது. நேற்று மழையின்போது புளிய மரம் ஒன்று அவரது வீட்டின் மீது விழுந்தது.

    ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் அருகில் உள்ள தந்தை வீட்டில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாகயாருக்கும் எவ்வித பாதிப் பும் ஏற்படவில்லை. சேதம் அடைந்த வீட்டினை அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் பார்வையிட்டார்.

    மழையால் தணிகைபோளூர் பெரிய ஏரி நிரம்பி கடவாசல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் கடவாசலில் மீன்களை பிடித்து வருகின்றனர். அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே உள்ள செந்தில் நகரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    • அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை
    • வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு

    போளூர்:

    மாண்டஸ் புயலால் போளூர் பகுதியில் 2 பேரின் வீடுகள் நேற்று முன்தினம் சேதம் அடைந்தன. போளூர் அடுத்த இருளம்பாறை கிராமத்தை வசிக்கும் முத்தம்மாள் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

    இதேபோல் பெரியகரம் கிராமத்தில் வசிக்கும் சரோஜா வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை இது குறித்து வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.

    • புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது.
    • உழைப்பு, உழைப்பு உழைப்புதான் நமது மூலதனமாக இருக்கணும்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர் கோவி அய்யாராசு இல்ல திருமண விழா இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    மணமக்கள் திலீபன் ராஜ்-ஐஸ்வர்யா திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து பேசியதாவது:-

    இன்றைக்கு நான் பொறுப்பேற்று பணியாற்றி கொண்டிருக்கிற இந்த ஆட்சி ஒரு திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    இந்த ஆட்சியை பற்றி பலர் பேசும் போது இங்கே குறிப்பிட்டு சொன்னார்கள். 2, 3 நாள் பெய்த மழையை பற்றி குறிப்பிட்டார்கள். மழை-புயல் அதை எப்படி எல்லாம் சமாளித்தோம். அதில் என்ன பெயர் நமக்கு கிடைத்தது. பார்க்கிறவர்கள் எல்லாம் இதை தான் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.

    நாம் ஆட்சிக்கு வந்த போது என்ன நிலைமை? ஒரு பெரிய கொடிய தொற்று நோய் கொரோனா. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு முதல்-அமைச்சரில் இருந்து எல்லா அமைச்சர்களும் ஹெல்த் மினிஸ்டராக மாறினோம். அதனால் தான் கட்டுப்படுத்த முடிந்தது.

    அது முடிவதற்கு முன்னாலே வெள்ளம் வந்துவிட்டது. பெரிய மழை வந்தது. அதையும் சமாளித்தோம். வெற்றி கண்டோம்.

    இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்றால் இதை தான் கலைஞர் சொல்லி விட்டு சென்றார். உழைப்பு, உழைப்பு உழைப்புதான் நமது மூலதனமாக இருக்கணும். அதை நான் ஸ்டாலினிடம் பார்க்கிறேன் என்று சொன்னார்.

    அந்த உழைப்பை பயன்படுத்தி தான் நான் மட்டுமல்ல அமைச்சர்கள் மட்டுமல்ல சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல உள்ளாட்சி பிரதிநிதிகள் நம்முடைய கழக தோழர்கள் இந்த இயக்கம் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று ரத்தம் சிந்தி, உயிரை அர்ப்பணித்து போராடி கொண்டிருக்கிற கலைஞரின் உயிரினும் உயிரான அன்பு உடன் பிறப்புகளாக விளங்கி கொண்டிருக்கிறவர்கள். அவர்களும் இதில் இணைந்து கொண்டு பணியாற்றிய காரணத்தால் தான் இன்று கம்பீரமாக மக்களிடத்தில் செல்ல முடிகிறது.

    நேற்றில் இருந்து போனை வைக்கவே முடியல. எல்லோரும் போன் பண்ணி ரொம்ப சிறப்பா பண்ணிட்டீங்க என்று பாராட்டினார்கள். எல்லா இடத்தில் இருந்தும் பாராட்டுகள் தான் வந்து கொண்டிருக்கிறது.

    நான் கூட பேசும் போது சொன்னேன். நம்பர்-1 முதல்-அமைச்சர் என்று பாராட்டினார்கள். நம்பர்-1 முதல்-அமைச்சர் என்பதில் எனக்கு அதிகமாக பெருமையோ, பாராட்டோ நினைக்கலை. என்றைக்கு நம்பர்-1 தமிழ்நாடு என்று வருகிறதோ அன்றைக்குதான் எனக்கு பெருமை.

    அதையும் நிறைவேற்றுவான் இந்த ஸ்டாலின் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் இல்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதனால் அதையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

    மணமக்களை வாழ்த்துகிறபோது அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய முறை. இன்றைக்கு மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் குடும்ப கட்டுப்பாட்டுக்காக எவ்வளவோ பல கோடி ரூபாய் செலவு செய்து பிரசாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது உங்களுக்கு தெரியும்.

    முன்பெல்லாம் குடும்ப கட்டுப்பாடு எந்த நிலையில் இருந்தது என்றால், நாம் இருவர் நமக்கு மூவர் என்று சொன்னார்கள்.

    அது படிப்படியாக குறைந்து நாம் இருவர் நமக்கு இருவர் என மாறியது. இப்போது என்னவென்றால் நாம் இருவர் நமக்கு ஒருவர். நாளைக்கு இதுவும் மாறலாம். நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை? அப்படி கேட்கிற நிலை வந்தாலும் வரலாம். காரணம் நாட்டின் நிலைமை அப்படி இருக்கிறது.

    ஆகவே நீங்கள் பெற்றெடுக்கிற குழந்தை அளவோடு பெற்றாலும் அந்த குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ஏனென்றால் தமிழுக்கு தலைவர் கலைஞர் எப்படி எல்லாம் சிறப்பு சேர்த்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். இன்று இந்த திருமணம் சுயமரியாதை உணர்வோடு நடக்கிறது என்றால் இது வெறும் சுயமரியாதை, சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல தமிழ் திருமணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது.
    • 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன.

    கடலூர்:

    மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மாமல்லபுரம் பகுதியில் சுமார் 60 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி கரையை கடந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசி வந்தது. இந்த நிலையில் கடல் அலை வழக்கத்தை விட சுமார் 14 அடி உயரம் உயர்ந்து, கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6-ந் தேதி முதல் கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல க்கூடாது என மீன்வ ளத்துறை அதிகா ரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில் இதனை மீறி மீனவர்கள் யாரேனும் மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் மீனவர்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த படகுகளை பாதுகாப்பாக முன்னோக்கி கொண்டு வந்து வைத்தனர்.

    மேலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. இது மட்டுமின்றி கடலில் தங்கி மீன் பிடித்த மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்பி வந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன. இந்த நிலையில் நேற்றுடன் இயல்புகள் நிலைக்கு கடல் பகுதி திரும்பியதால் மீனவர்கள் இன்று 11-ந் தேதி முதல் வழக்கம் போல் மீன் பிடிக்க செல்லலாம் என மீனவளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி அதிகாலை முதல் மீனவர்கள் ஆர்வமுடன் மீன் பிடிக்க சென்றனர். மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் நள்ளிரவு முதல் ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்று மீன் பிடித்து கடலூர் துறைமுகம் மற்றும் கரைக்கு ஆர்வமுடன் கொண்டு வந்து மீன்கள் விற்பனை செய்ததை காண முடிந்தது. 

    • இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது.
    • பெரும்பாலான நேரங்களில் சாரல் மழை தூறிக்கொண்டே உள்ளது.

    சென்னை:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியதால் சென்னையில் மட்டும் 400 மரங்கள் சாய்ந்தன. மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மரங்கள், சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

    சூறைக்காற்றுடன் மழையும் கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. காற்றில் சாய்ந்த மரங்கள் இரவோடு இரவாக அப்புறப்படுத்தப்பட்டன. சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை தூக்கி நிறுத்தி சீரமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றன. இதையடுத்து மின் வினியோகம் சீரானது.

    மாண்டஸ் புயல் ஓய்ந்த நிலையிலும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை ஓயவில்லை. விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடக்க தொடங்கிய புயல் அதிகாலையில் கரையை கடந்து முடித்தது. இப்படி புயல் கரையை கடந்த பிறகும் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இரவிலும் அது நீடித்தது.

    இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் சாரல் மழை தூறிக்கொண்டே உள்ளது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் கரையை கடந்த போதிலும் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். விட்டு விட்டு மழை பெய்யும். புயல் கரையை கடந்திருந்தாலும் வடகிழக்கு திசையை நோக்கி வீசும் காற்று நீடிக்கிறது. இதுவே மழை நீடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. நாளை மறுநாளில் (13-ந் தேதி) இருந்து மழை படிப்படியாக குறையும்.

    இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    • ஏற்காட்டில் தொடர்ந்து மழையும் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
    • ஏற்காடு மலை பாதையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன.

    சேலம்:

    மாண்டஸ் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. புயல் காரணத்தால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் அண்ணா பூங்கா, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உட்பட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதேபோல் புறநகர் பகுதி முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன.

    ஏற்காட்டில் தொடர்ந்து மழையும் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் கடுமையான குளிர் நிலவி வருகிறது. ஏற்காடு மலை பாதையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன.

    தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. நேற்று மதியம் முதல் இரவு 9 மணி வரை ஏற்காட்டில் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடும் குளிரால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காடையாம்பட்டி 18.2, ஆனைமடுவு-14, ஓமலூர்-11.4, சேலம்-10.4, மேட்டூர்-6.2, எடப்பாடி-4.4, கரியகோவில்-3, ஆத்தூர் 02.4, சங்ககிரி-2 என மாவட்டம் முழுவதும் 171.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகர பகுதி, திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    ×