search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து விதிமீறல்"

    • போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி தற்போது விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    அதன்படி சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதில் 12 ஆயிரத்து 625 வழக்குகளில் அபராத தொகை ரூ.70 லட்சத்து 46 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாததற்காக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.42 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சென்னையில் உள்ள போக்குவரத்து துணை கோட்டங்களில் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் போக்குவரத்து காவல்துறை 6,187 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை சமீபத்தில் தொடங்கியது. புதிய சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து போலீசார் அதிரடியாக அபராதம் விதித்தனர். சென்னையிலும் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டினார்கள். அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது போக்குவரத்து காவல்துறை

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும். யாருக்கும் பாரபட்சம் காட்டப்படாது என தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • சென்னையில் 10 போக்குவரத்து துணை கோட்டங்களிலும் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • அண்ணாநகர் போக்குவரத்து துணை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.

    புதிய சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து போலீசார் முதல் நாளான நேற்று அதிரடியாக அபராதம் விதித்தனர். சென்னையிலும் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டினார்கள்.

    அந்த வகையில் சென்னையில் நேற்று முதல் நாளில் மட்டும் போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.15½ லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1100 பேரிடம் இருந்து உடனடியாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 10 போக்குவரத்து துணை கோட்டங்களிலும் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போலீசில் சிக்கினர். சென்னை மாநகர் முழுவதும் முதல் நாளான நேற்று மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 1,500 பேருக்கு கையில் பணம் இல்லாததால் அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் உடனடியாக பணத்தை கட்ட முடியாவிட்டால் அவர்களிடம் அபராத ரசீது தொகையை போலீசார் கொடுத்து விடுவார்கள்.

    அபராத தொகை நிலுவையில் இருப்பதாக பதிவு செய்து ரசீதை மட்டும் வழங்குவது வழக்கம். அந்த வகையில்தான் தற்போது பிடிபட்ட 2,600 பேரில் 1,500 பேருக்கு அபராதத்தை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் ஆன்லைன் வழியாக அபராதத்தை செலுத்தி கொள்ளலாம்.

    அண்ணாநகர் போக்குவரத்து துணை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 99 பேரிடம் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 10 பேரிடம் இருந்து ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் பகுதியில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டிய 10 பேரும் போலீசில் சிக்கினர். இவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வகையில் அபராதம் வசூலித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் 2-வது நாளான இன்றும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு பலர் பயணிப்பார்கள். அதுபோன்று அறிமுகம் இல்லாத நபர்களை லிப்ட் கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர்களும் சிக்கினர். அவர்களுக்கும் போலீசார் ரூ.100 அபராதம் விதித்ததையும் காண முடிந்தது.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், யாருக்கும் பாரபட்சம் காட்டப்படாது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என்று அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.

    • அபராத தொகையை உயர்த்தினாலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வரை சாலை விபத்துகளை குறைக்க முடியாது.
    • ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் இதனை யாரும் இதுவரை பின்பற்றியது கிடையாது.

    சென்னை:

    தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிர்பலிகளின் எண்ணிக்கையோ ஏராளம். சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

    போக்குவரத்தினை முறையாக கடைப்பிடிக்காமல் வாகன ஓட்டிகள் செல்வது விபத்துக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்றதாகும். சாலைவிபத்தினால் உயிரிழப்பு மட்டுமில்லாமல் கை, கால்கள் போன்ற உறுப்புகளை இழந்து பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் சாலை விபத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளது. விதிகளை பலர் கடைப்பிடிக்காமல் உள்ளனர்.

    இந்தநிலையில் அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திரரெட்டி பிறப்பித்துள்ளார்.

    தற்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோன்று, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000, செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிச் சென்றால் ரூ.1000, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகையானது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் வேளையில், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம், ஆம்புலன்சுகளுக்கு வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என புதிய நடைமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.

    வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்துள்ள இந்த புதிய அபராத நடைமுறை தமிழகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    தற்போது புதிய அபராத தொகையை இ-சலான் கருவியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா?, போக்குவரத்து விதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது பற்றி மக்கள் பார்வை வருமாறு:-

    வேலூரை சேர்ந்த பாண்டியன்:-

    அபராத தொகையை உயர்த்தினாலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வரை சாலை விபத்துகளை குறைக்க முடியாது. பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் விதிப்பதற்கு பணம் பெற்று அவர்களுக்கு அரசே ஹெல்மெட் வாங்கி கொடுக்க வேண்டும்.

    இதனால் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வருவது குறையும். அதேபோல் அவசர தேவைகளுக்காக சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகனங்களின் எண்களை குறித்துக்கொண்டு அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். மேலும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு அபராத தொகையை பெற்று அரசே இன்சூரன்ஸ் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். விபத்துகளுக்கு மிக முக்கிய காரணம் மோசமான சாலைகளே. எனவே சாலைகளை சீரமைத்து, சீரமைக்கும் காண்டிராக்டரே அதை பராமரிக்கும் பணியையும் குறிப்பிட்ட வருடங்களுக்குள் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடுகின்றனர். அதுபோல் மற்ற சாலை விதிகளையும் பின்பற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சாந்தி:-

    சாலை விபத்துகளில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வருந்தத்தக்கது. போக்குவரத்து விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதத்தொகையை அரசு உயர்த்தியது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினாலே பெரும்பாலான விபத்துகள் குறையும், அதற்கு அரசு துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குண்டும், குழியுமான சாலைகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பத்தூரை சேர்ந்த கல்பனா:-

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் இதனை யாரும் இதுவரை பின்பற்றியது கிடையாது. இதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோய் உள்ளது. தற்போது அரசு ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் என்று அறிவித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, ஆம்புலன்சுக்கு வழி விடாமல் செல்வது போன்றவற்றுக்கு அபராதம் விதித்து அரசு அறிவித்துள்ளது. இதை மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தமிழகத்தில் விபத்துகள் குறையும். மேலும் விலை மதிப்பில்லா உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். விபத்தில்லா தமிழகமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். அரசு அறிவிப்போடு நின்று விடாமல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராணிப்பேட்டையை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி குணசேகரன்:-

    போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் நடவடிக்கையாகும். அபராதம் விதிப்பது என்பது சட்டத்தை மக்களை பின்பற்ற வைக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருக்க கூடாது. உதாரணமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற நடவடிக்கை, வாகனத்தில் செல்லும் போது வழியில் லிப்ட் கேட்பவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி, அவர்களை பின்புறத்தில் அமரவைத்து செல்பவர்களுக்கு, தர்ம சங்கடத்தை உண்டாக்கி, லிப்ட் கொடுக்காமல் செல்ல வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும். இதெல்லாம் கவனத்தில் கொண்டு அரசு இதை மறுபரிசீலனை செய்து, இதை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

    திருவண்ணாமலையை சேர்ந்த வினோத்:-

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, அவர் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அபராத தொகையை அதிகரித்து உள்ளது ஏழைகளை பாதிக்கும். இந்த அபராத நடைமுறை போக்குவரத்து விதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் அரசு பொதுமக்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி தரமற்ற ஹெல்மெட் விற்பனை செய்வதை அரசு தடுக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ள ஹெல்மெட் மட்டுமே விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன்:-

    போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க போலீசார் சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. எனினும் மக்களிடையே அச்சம் இல்லை. எனவே அபராதம் விதித்தும் மக்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்து அறிவுறுத்தப்படுகிறது. எனினும் பலர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். அபராத தொகை உயர்த்தப்பட்டதால் அந்த தொகைக்கு ஹெல்மெட் வாங்கி விடலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வரும். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க தொடங்குவார்கள். 28-ந்தேதி அபராத நடவடிக்கை அமலுக்கு வந்த பின்னர் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • தானாக முன்வந்து விதிகளைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கும் என்றும் கூறினர்.
    • பலர் இது நகரங்களில் போக்குவரத்து குழப்பத்தை மோசமாக்க வழிவகுக்கும் என்று பலர் கூறியுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விதிகள் குறித்து குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி பட்டியலிட்டார். அப்போது அவர், அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளார். மேலும் இது முதல்வர் பூபேந்திர படேலின் மக்களுக்கு ஆதரவான முடிவு என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், " யாரேனும் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக குஜராத் போலீசார் பூக்கள் கொடுத்து விதிகளை மீற வேண்டாம் என்று வற்புறுத்துவார்கள் என்றும் கூறினார்.

    மேலும், "தீபாவளி என்பது விளக்குகளின் திருவிழா. மேலும் ரங்கோலி வண்ணங்கள், ஏராளமான இனிப்புகள், விளக்குகள் மற்றும் பட்டாசுகள் என உற்சாகத்துடன் வருகிறது.

    இந்தச் சந்தர்ப்பத்தில், முதல்வர் பூபேந்திர படேலின் மக்களுக்கு ஆதரவான முடிவு இது" என்று சங்கவி கூறினார்.

    இவரது இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றனர். மேலும் இது, தானாக முன்வந்து விதிகளைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கும் என்றும் கூறினர். இருப்பினும், இது நகரங்களில் போக்குவரத்து குழப்பத்தை மோசமாக்க வழிவகுக்கும் என்று பலர் கூறியுள்ளனர்.

    • இருசக்கர வாகனத்தை ஓட்டிய மாணவனின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
    • இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று பெற்றோர்களின் முன்னிலையில் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.

    இடுக்கி:

    கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர், ஒரே ஸ்கூட்டியில் பயணித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்த 5 மாணவர்களுக்கும் மோட்டார் வாகன துறையினர் அபராதம் விதித்தனர்.

    அத்துடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய மாணவனின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. மாணவர்கள் 5 பேரும் இடுக்கி மருத்துவக் கர்லலூரியில் சமூக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் ரமணன் கூறியதாவது:-

    மாணவர்கள் 5 பேரும் இடுக்கி மருத்துவக்கல்லூரியில் 2 நாட்கள் சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தகுதியான பிரிவில் அவர்களின் சேவையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினேன்.

    இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன்பாக, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்களின் முன்னிலையில் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினேன். விதிகளை மீறி வேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கி கூறினேன். அப்போது அந்த மாணவர்கள் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்று பெற்றோர்களின் முன்னிலையில் உறுதியளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரவு 11 மணி வரை போக்குவரத்து போலீசார் பணிபுரிய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    • 3 பெண் போலீசாரை நியமித்து அபராதம் செலுத்தாத நபர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில், போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மார்ச் வரை கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தாதவர்களை தொடர்புகொண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர, ஒரு சிறப்பு செயல் திட்டம் மாநகர போலீசாரால் வகுக்கப்பட்டது.

    அதன்படி கடந்த மே மாதம் 27-ந் தேதி முதல், மாநகர கிழக்கு மற்றும் மேற்கு பகுதி போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகங்களில் தலா 3 பெண் போலீசாரை நியமித்து அபராதம் செலுத்தாத நபர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இதன் மூலம் 10 நாட்களில் 5,629 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் அபராதத்தொகை ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டுள்ளது. ேமலும் மாநகரில் போக்குவரத்து போலீசார் தற்போது இரவு 10 மணி வரை பணியில் உள்ளனர்.

    இந்தநிலையில், மேம்பாலம் கட்டும் பணி, சாலை விரிவாக்கப் பணி போன்றவை நடைபெறுவதாலும், திருமணம் போன்ற விசேஷ நாட்களிலும், விடுமுறை, பண்டிகை நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் லட்சுமி மில் சந்திப்பு, ஆம்னி பஸ் நிறுத்தம் பகுதி, அவினாசி சாலை பழைய மேம்பாலம் ரவுண்டானா பகுதி, லாலி சாலை சந்திப்பு, ஆத்துப்பாலம் சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பு, ஒப்பணக்கார வீதி சந்திப்பு, கோவை ெரயில் நிலையம், காந்திபுரம் சிக்னல் சந்திப்பு ஆகிய 10 இடங்களில் இரவு 11 மணி வரை போக்குவரத்து போலீசார் பணிபுரிய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×