search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக நிர்வாகிகள்"

    • பள்ளி சீருடையில் மாணவ-மாணவிகளும் நின்று மோடியை வரவேற்றனர்.
    • பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    கோவை:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் கோவையில் ரோடு ஷோ மூலம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு மத்தியில் பள்ளி சீருடையில் மாணவ-மாணவிகளும் நின்று மோடியை வரவேற்றனர். இதற்கு தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திலும் புகார்கள் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    விசாரணையில் பேரணியில் பங்கேற்றது சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் என்பது தெரியவந்தது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் விசாரணை அறிக்கையை அவர் கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதன்பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களும் பிரதமர் மோடி நடை பயணத்தில் பங்கேற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த பள்ளி மாணவர்கள், பள்ளி வேனிலேயே அழைத்துச் செல்லப்பட்டு பேரணியின் போது கலைநிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும் படி மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி நேற்று சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
    • பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    கோவை:

    கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நடைபெற்றது. சாய்பாபா காலனி சிக்னல் அருகே தொடங்கிய இந்த வாகன பேரணியானது ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை நடைபெற்றது.

    சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையுடன் அழைத்து வந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் மாணவ-மாணவிகளின் புகைப்படத்துடன் தகவல் வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உரிய விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் இது தொடர்பாக நேற்று சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது குழந்தைகளை சரியாக பராமரிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாக சட்டப்பிரிவு 75 ஜே.ஜே.-ன் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    முன்னதாக கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் நேற்று சாய்பாபாகாலனியில் உள்ள சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று காலை நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் அந்த பள்ளிக்கு சென்று அதிகாரிகள் நடத்திய விசாரணை தொடர்பாக கலெக்டருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் விவகாரம் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு கோவை தேர்தல் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    • மக்களிடம் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.
    • புள்ளி விவரங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களை கொண்டும் உண்மையை தான் பேச வேண்டும்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா சமூக ஊடக செயல்வீரர்கள் கூட்டம் காளப்பட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக வலைதளங்களின் வாயிலாக மக்களுக்கு எப்படி உதவலாம், நாம் செய்யும் உதவி எப்படி அவர்களை சென்றடைகிறது. அதன்பின் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மக்களிடம் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களை கொண்டும் உண்மையை தான் பேச வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதற்கு பல விஷயங்களை படிக்க வேண்டும். பார்க்க வேண்டும், கேட்க வேண்டும். அப்போது தான் நமக்கு தேசிய, மாநில, மாவட்ட, மாநகரம் வரை அனைத்து அரசியலையும் புள்ளி விவரமாக புரிந்து கொள்ள முடியும். அதை மக்களிடம் புட்டு, புட்டு வைக்க முடியும்.

    அதற்கு தினமும் நாளிதழ்களை படிப்பதும், டி.வி.யில் செய்தியை கேட்பதையும் பழக்கமாக்கி கொள்ள வேண்டும். மொபைல் போனில் சமூக வலைதளங்களை முழுமையாக பார்த்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க.வினர் 50 ஆண்டு காலமாக மக்களிடம் சொல்லி வரும் பொய்கள், அவர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டி அதை அவர்கள் மனதில் இருந்து களைய வேண்டும். அப்பணியை நம் தொண்டர்களும், செயல்வீரர்களும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றே தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக நடந்த வன்முறை சம்பவத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜ.க., இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை, தாம்பரம், ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல்லில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் ராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் சீதாராமன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் வழக்கம்போல குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மர்மநபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை சீத்தாராமனின் வீட்டிற்குள் வீசினர். இதில் அந்த பெட்ரோல் குண்டு வீட்டின் உள்ளே நிறுத்தப்பட்டு இருந்த காரின் அருகே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    சத்தம் கேட்டு சீத்தாராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    காரில் தீப்பிடிக்காததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சீத்தாராமனின் வீட்டின் வெளியே நின்றபடி பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்செல்வது பதிவாகி உள்ளது.

    இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், பா.ஜனதாவினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அசம்பாவிதத்தை தடுக்க அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் பால்ராஜ். பா.ஜ.க. மேற்கு மாநகரத் தலைவராக இருந்து வருகிறார். இவர் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் அருகே குடோன் ஒன்று அமைத்து அதில் விற்பனைக்கு வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி வைத்து இருந்தார்.

    நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் குடோன் உள்ளே சென்று செந்தில் பால்ராஜ்க்கு சொந்தமான இண்டிகா கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது.

    இதைபார்த்த பால்ராஜ் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி 4-வது வீதியை சேர்ந்தவர் சிவசேகர் (51). இவர் பு.புளியம்பட்டி நகர பா.ஜனதா பிரச்சார அணி முன்னாள் துணை தலைவராக பதவி வகித்தார். தற்போது இவர் பா.ஜனதாவில் இருந்து கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் தனக்கு சொந்தமான 5 கார்களை தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் நேற்று இரவு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு சிவசேகர் வெளியே ஓடி வந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    பின்னர் பு.புளியம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற 4 கார்களும் தப்பியது.

    இதுபற்றி தெரியவந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி.க்கள் நீலகண்டன், சேகர், மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மர்மநபர்கள் யாரோ காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தில் கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே தடயவியல் நிபுணர்களும் தீ வைத்து எரிக்கப்பட்ட காரை சோதனை செய்தனர்.

    இது தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் பு.புளியம்பட்டி போலீசில் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். பா.ஜனதா பிரமுகர் காருக்கு தீ வைத்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் திரண்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.

    இதையடுத்து பு.புளியம்பட்டி நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 200 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பா.ஜ.க. இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார். நள்ளிரவு 11.30 மணிக்கு இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் வெளியே சத்தம் கேட்டது. உடனே பரத் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்ததால் கார் தப்பியது. காரின் மேல் உறை போர்த்தப்பட்டு இருந்ததால் உறை மட்டும் எரிந்து இருந்தது, கார் தப்பியது.

    பரத் தூங்கச் சென்றதும் மர்மநபர்கள் அங்கு வந்து பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதில் தான் கார் எரிந்தது தெரியவந்தது. இதுபற்றி பரத் போலீசில் புகார் செய்தார். போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் மனோஜ்குமார். பா.ஜனதா ஆதரவாளரான இவர் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். அவரது வீடும் அங்குதான் உள்ளது. நேற்று இரவு மனோஜ்குமார் தனது 2 கார்களை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.

    நள்ளிரவு மர்மநபர்கள் அவரது கார்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் 2 கார்களும் தீ பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள், டாக்டர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து வெளியில் வந்த அவர் கார்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். இதில் கார்கள் சேதம் அடைந்துள்ளது. இதுபற்றி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பா.ஜனதா ஆதரவாளர் கார்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது, 3 பேர் கும்பல் கார்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக நடந்த வன்முறை சம்பவத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ×