search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறிமுதல்"

    • சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.

    தாம்பரம்:

    சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரெயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

    இந்த பணம் நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் பரவியது.

    இதைத் தொடர்ந்து அந்த பணத்தை பிடிக்க பறக்கும் படையினர் அதிரடியாக களம் இறங்கினார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்வதற்காக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை கைப்பற்ற பறக்கும் படையினர் முடிவு செய்தனர்.

    நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.40 மணி அளவில் தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரெயிலை நிறுத்தி சோதனை செய்வதற்காக பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர்.

    பறக்கும் படை அதிகாரியான செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    எஸ்-1 பெட்டியில் இருந்து எஸ்-10 பெட்டி வரைக்குள் ஏதாவது ஒரு ரெயில் பெட்டியிலேயே ரூ.4 கோடி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் பயணிப்பதாகவும் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவலை தெரிவித்தவர் கூறி இருந்தார்.

    இதையடுத்து பறக்கும் படையினர் சுமார் ½ மணி நேரம் ரெயிலை நிறுத்தி பயணிகளின் உடமைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த 3 பேர் வைத்திருந்த 6 பைகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பறக்கும் படை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து அந்த பணத்தை அப்படியே பைகளோடு கைப்பற்றி பறக்கும் படை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தாம்பரம் போலீஸ் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்போடு பைகளை கொண்டு சென்ற பறக்கும் படையினர் பணம் எண்ணும் எந்திரத்தின் மூலமாக எவ்வளவு பணம் உள்ளது? என்று எண்ணிப் பார்த்தனர்.

    அப்போது அதில் ரூ.3 கோடியே 99 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.

    இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.

    3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    நெல்லையில் போய் இறங்கியதும் அங்கு ஒருவர் வருவார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியே எங்களிடம் இவ்வளவு பணமும் கொடுத்து அனுப்பப்பட்டிருப்பதாகவும் 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து இந்த பணத்தை நெல்லையில் வாங்குவதற்கு தயாராக இருந்த நபர் யார்? என்பது பற்றியும், பணம் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது? என் பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் இருந்தே ரூ.4 கோடி பணமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பறக்கும் படை அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து ரூ.4 கோடி பணத்தின் முழு பின்னணியையும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

    இதன்படி சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் என்பவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

    அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள புளுடைமண்ட் ஓட்டலிலும் இன்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த 2 இடங்களிலும் மேலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ரூ.4 கோடி பணம் எப்படி ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டது? எங்கெல்லாம் வசூல் செய்யப்பட்டது? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்து உள்ளன. சென்னை கிரீன்வேஸ் ரோடு, யானைக்கவுனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.

    பின்னர் ரெயில் மூலமாக பணத்தை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு கைதான 3 பேருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    • பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ந் தேதியில் இருந்து நேற்றுவரை ரூ.192.67 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.

    அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ந் தேதியில் இருந்து நேற்றுவரை ரூ.192.67 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், ரூ.82.63 கோடி ரொக்கப் பணம், ரூ.4.34 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.84 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.89.41 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.15.43 கோடி மதிப்புள்ள இலவச பரிசுப் பொருட்கள் அடங்கும்.

    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்துள்ளது.

    ஓசூர்:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று இரவு ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை அவர்கள் மடக்கி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, தங்க நகைகள் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து சோதனை செய்தனர். மேலும் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் வாகனத்தில் கொண்டு சென்ற பொருட்களுக்கான ஆவணங்களை சோதனை செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்க நகைகளை இந்த கூரியர் சர்வீஸ் நிறுவனத்தினர் பெற்று கொண்டு ஓசூரில் உள்ள பிரபல ஜுவல்லரிக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.

    அதிகாரிகள் சோதனை செய்ததில், கூரியர் சர்வீஸ் வாகனத்தில் மொத்தம் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்தது. ஆனால் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்துள்ளது. மீதமுள்ள 24 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து 69 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் எனவும் தங்க நகைகளின் மொத்த எடை 30 கிலோ எனவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை சீல் வைத்து, வாகனத்தின் மூலம் ஓசூர் அரசு கருவூல அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர்.
    • திருமாவளவன் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என்றனர்.

    இதனை கேட்ட திருமாவளவன் தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் முன்புறம், உள்புறம் ஆகியவற்றை சோதனையிட்டனர். வாகனத்தில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் திருமாவளவன் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று அங்கனூருககு புறப்பட்டு சென்றார். திருமாவளவன் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேன் ஒன்றை மறித்து பறக்கும் படையினர் சோதனை மேற்கெண்டனர்.
    • பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சென்னை:

    சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ராஜா அண்ணாமலைபுரம் 3-வது குறுக்கு தெருவில் வேன் ஒன்றை மறித்து பறக்கும் படையினர் சோதனை மேற்கெண்டனர்.

    இதில் ரூ.1 கோடியே 81 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் படை தனி தாசில்தார் கண்ணன் தலைமையில் குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480 ரொக்கம் இருந்தது கண்டுபிடி க்கப்பட்டது.

    இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வடுவூர் நெய்வாசல் டாஸ்மாக்கில் பணிபுரிவதும், அங்கு வசூலான பணத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து பின்னர் வங்கியில் செலுத்த இருந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
    • கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    ராசிபுரம்:

    சேலம் அருகே உள்ள மல்லூர் பகுதியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அ.தி.மு.க. கட்சி சின்னம் பதித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசர்ட்டுகள் இருப்பது தெரிய வந்தது. டி சர்ட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி கண்டெய்னர் லாரி டிரைவர் மூர்த்தி (48) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட டி சர்ட்டுகளின் மதிப்பு ரூ.2லட்சத்து 36ஆயிரத்து 250 என தெரிய வந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    • பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    • மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் சோதனை சாவடியில், கடந்த 21-ந் தேதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாக்கியம் தலைமையிலான குழுவினர் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த காரை சோதனை செய்தனர்.

    அப்போது பறையப்பட்டி புதூரைச் சேர்ந்த மோகன் வந்த காரில், 96, 500 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    பின், மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.

    இதைத்தொடர்ந்து உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள் தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம் ஆகியோர் மோகனிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.96,500-யை திரும்ப ஒப்படைத்தனர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    திருவாரூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வரும் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதனை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், கீரனூர் சோதனை சாவடியில் தலைமை காவலர் கிறிஸ்துராஜ், புஷ்பா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் பஸ்சில் பயணம் செய்த ஒருவரின் பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவரை விசாரித்த போது, மன்னார்குடியை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 40) என்பது தெரியவந்தது.

    ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக சோதனை சாவடியில் இருந்த போலீசார் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரேசன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.12.85 லட்சம் ஆகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசு பஸ்சில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
    • பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு, செலவின கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மொத்தம் 25 பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தேர்தல் விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி, டோல்பிரி எண் ஆகியவற்றில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை 24 மணி நேரத்தில் 58 விதி மீறல் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு 39 புகார்களும், சி விஜில் செயலி மூலம் 19 புகார் என மொத்தம் ஒரே நாளில் 58 புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் 58 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.62 லட்சத்து 86 ஆயிரத்து 948-ம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதை அடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வரை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.66 லட்சத்து 45 ஆயிரத்து 797 கைப்பற்றி உள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ. 58 லட்சத்து 11 ஆயிரத்து 390-ம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670-ம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.21 லட்சத்து 41 ஆயிரத்து 280-ம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.18 லட்சத்து 78 ஆயிரத்து 800-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850-ம், கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.62 லட்சத்து 86 ஆயிரத்து 948-ம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கைப்பற்றப்பட்ட தொகை மொத்தம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 97 ஆயிரத்து 385 ஆகும்.

    இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ரூ.1 கோடியை 71 லட்சத்து 89 ஆயிரத்து 595 உரிமையாளர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.89 லட்சத்து 7 ஆயிரத்து 790-ஐ மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • சித்தளம்பட்டு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தயாநிதி மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • பறிமுதல் செய்த பணத்தை வானூர் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தளம்பட்டு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தயாநிதி மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பறிமுதல் சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் 2 லட்சத்து 68 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனர். விசாரணையில் காரில் வந்தவர் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் என்பது தெரியவந்தது, பறிமுதல் செய்த பணத்தை வானூர் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்.

    ×