search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் கொள்முதல்"

    • தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மழைக்காலங்களில் நெல்மணிகள் நனையாமல் இருப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    2 லட்சத்து 86 ஆயிரம் 350 மெட்ரிக் டன் அளவுக்கு நெல்மணிகளை பாதுகாக்க முடியும். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் முடிவடையும்.

    இது தவிர நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, அரசு துறை கட்டிடங்களிலும் நபார்டு சேமிப்பு கிடங்கு கட்டும் பணி நடைபெறுகிறது. அவற்றின் மூலம் 7 லட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்க முடியும். தற்போதைய ராபி பருவத்தில் 8 லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    வருகின்ற பருவத்தில் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரல்ரேகை மூலம் பொருள் வாங்க முடியாதவர்கள் கண் கருவிழி கொண்டு பொருள் வாங்கலாம். திருவல்லிக்கேணி, பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும்.

    மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்வதில் சிரமம் இருந்தால் அங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒருவரை நியமித்து அவர்கள் மூலம் பொருள் வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.

    தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

    • இரண்டாம் போக நெல் சாகுபடி தற்போது தீவிரமடைந்துள்ளது.
    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரால் நெல் கொள்முதல் செய்யப்படும்.

    உடுமலை :

    உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டு கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் வாயிலாக 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அப்பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி தற்போது தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில் அரசு கொள்முதல் மையம் இல்லாததால் வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து நஷ்டமடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும் 27 கி.மீ., தொலைவிலுள்ள கண்ணாடிப்புத்தூர் கிராமத்திலுள்ள மையத்துக்கு நெல் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.

    எனவே ருத்ரபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் துவக்க வேண்டும் என்ற எழுந்தது.இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-உடுமலை வட்டாரத்தில் காரீப் பருவத்துக்கான நெல் அறுவடை துவங்கியதும் கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

    இது குறித்த கருத்துரு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மடத்துக்குளம் தாலுகா ருத்ரபாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த மையத்தில் சங்கராமநல்லூர், குமரலிங்கம் மற்றும் கல்லாபுரம் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரால் நெல் கொள்முதல் செய்யப்படும்.

    விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில், விற்பனை செய்யும் முன் மின்னணு நேரடி கொள்முதல் மைய இணையதளத்தில் (e---DPC) பதிவு செய்யவும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக விவசாயிகள் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றனர்.

    • குறுவை பருவத்தில் பெய்யும் மழையின் அளவை கொண்டு நெல்லின் ஈரப்பத சதவீதத்தை கணக்கிடலாம்.
    • மழை பெய்தபோது ஈரப்பத தளர்வு அறிவிக்காமல் அறுவடை முடியும் நேரத்தில் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது காலம் கடந்த செயல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட குறவை நெல்மணிகள் தொடர் மழையால் ஈரப்பதமாகியது. காய வைத்தும் ஈரப்பதம் குறையவில்லை.

    இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவுப்படி மத்திய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.

    மத்திய அரசின் அறிவிப்பு குறித்து டெல்டா மாவட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன்:

    மத்திய அரசு அறிவித்துள்ள 19 சதவீத ஈரப்பத அளவு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்த பிறகு காலம் கடந்த ஏமாற்றம் தரும் அறிவிப்பாகும். இந்த ஈரப்பத உயர்வு அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அதுவும் 22 சதவீதம் கேட்டதற்கு பெயரளவிற்கு 19 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம். குறுவைக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு பலமுறை தொடர்ந்து கோரியும், மத்திய மாநில அரசுகள் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதனால் பயிர் காப்பீடும் செய்யப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார்:

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய 15 நாட்களுக்கு பிறகு தான் மத்திய குழு ஆய்வு நடத்தியது. அந்த மத்திய குழுவும் அறிக்கை தாக்கல் செய்த 10 நாட்களுக்கு பிறகு தான் 19 சதவீதம் நெல் ஈரப்பதம் தளர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இப்படி அனைத்துமே கால தாமதம் தான். ஏற்கனவே விவசாயிகள் கஷ்டப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதுவும் 22 சதவீதம் என கேட்டதற்கு 19 சதவீதத்திற்கு தான் அனுமதி கொடுத்துள்ளது. உரிய நேரத்தில் செய்யும் உதவி தான் சால சிறந்தது. அதனை மத்திய அரசு செய்யவில்லை.

    எனவே இனி ஒவ்வொரு ஆண்டும் குறுவை பருவத்தில் 22 சதவீதம் வரையிலான ஈரப்பதம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று நிலையான அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்போது தான் விவசாயிகள் பலன் அடைவர். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார்:

    ஒவ்வொரு குறுவை பருவத்திலும் ஈரப்பத தளர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுப்பதும், பின்னர் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாமல் பெயரளவிற்கு தளர்வு அளிப்பதும் வாடிக்கையாகி விட்டது. விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்க வேண்டும்.

    குறுவை பருவத்தில் பெய்யும் மழையின் அளவை கொண்டு நெல்லின் ஈரப்பத சதவீதத்தை கணக்கிடலாம். மேலும் ஈரப்பத தளர்வு குறித்து மாநில அரசு முடிவு எடுக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு மாநில அரசு குரல் கொடுக்க வேண்டும்.

    தற்போது அறிவித்துள்ள 19 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பே கால தாமதம் தான். அறுவடை பணிகள் கிட்டதட்ட முடியும் நேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ஏற்று கொள்ள முடியாது.

    தஞ்சை விவசாயி ரவிச்சந்திரன்:

    மழை பெய்தபோது ஈரப்பத தளர்வு அறிவிக்காமல் அறுவடை முடியும் நேரத்தில் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது காலம் கடந்த செயல். அதுவும் விவசாயிகள் கோரிக்கையை முழுமையாக ஏற்காமல் ஈரப்பத தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் 19 சதவீதம் என்பது போதாது. எனவே உடனடியாக 22 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். சம்பா நெல் கொள்முதலுக்கு 23 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நிரந்தரமாக உலர் எந்திரங்களை அமைக்க வேண்டும்.

    • இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.
    • மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதாவது பொதுவாக இந்த காலகட்டத்தில் மழை இன்றி வெயில் அடிக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    இதேபோல் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை இன்றி காணப்பட்டதால் குறுவை அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்ட குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. சில இடங்களில் இறுதி கட்டத்தை எட்டியது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் அறுவடை பாதிக்குமோ என விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    மேலும் இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், புங்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சில இடங்களில் கொள்முதல் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனால் அறுவடை செய்த நெல் மற்றும் வயலில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.

    தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழக அரசு மாநிலம் முழுவதும் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
    • நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்படாமல், மழையில் நனைந்து வீணாகக்கூடிய நிலையில் உள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, மாநிலம் முழுவதும் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகளிடமும் பாதிப்பு குறித்த விபரத்தை கேட்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றாலும் நெல் மூட்டைகள் இன்னும் முழுமையாக கொள்முதல் செய்யப்படவில்லை. மேலும் நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்படாமல், மழையில் நனைந்து வீணாகக்கூடிய நிலையில் உள்ளது.

    எனவே தமிழக அரசு, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து, உரிய இழப்பீடு கொடுத்தும், நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் மூட்டைகளை பாதுகாத்து, கொள்முதல் செய்து, உரிய விலையை கொடுத்தும் விவசாயிகளுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களுக்கு மகாலட்சுமி ஆகியோரை கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.

    சென்னை:

    டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சிவஞானம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கற்பகம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பி.சங்கர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மீனா பிரியதர்ஷினி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செந்தில்குமார்.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களுக்கு மகாலட்சுமி ஆகியோரை கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.

    விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் இவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கள்ளிப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    டி.என்.பாளையம்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் இவ்வாண்டு பருவத்தி ற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியின் போது டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், கோபிசெட்டிபாளையம் தாசில்தார் ஆசியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஈரோடு மண்டல மேலாளர் வி.சி.முருகேசன், துணை மேலாளர் தரக்கட்டுப்பாடு பி.மனோகரன், டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன்,

    கள்ளிப்பட்டி நெல் கொள்முதல் அலுவலர் டி.மோகனசுந்தரம், கொண்டையம் பாளையம் ஊராட்சி தலைவர் மரகதம் பாலு, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பகவதியண்ணன், செயலாளர் முருகேஷ் சஞ்சிவ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
    • தமிழகத்தில் நெல் கொள்முதலை ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்க அரசு ஒப்புதல்.

    புதுடெல்லி:

    சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை ஆகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால், விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

    குறிப்பாக, இந்த நெல் கொள்முதலை வழக்கமான அக்டோபர் மாதத்துக்கு பதிலாக ஒரு மாதத்துக்கு முன்கூட்டியே, அதாவது செப்டம்பரிலேயே தொடங்குமாறு அவர் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூன் 21-ந்தேதி கடிதம் எழுதினார்.

    முதல்-அமைச்சரின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று உள்ளது. இந்த அறிவிப்பை பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் வெளியிட்டார்.

    இது தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், 'தமிழகத்தில் நெல் கொள்முதலை ஒரு மாதம் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் மாதத்திலேயே தொடங்க அரசு ஒப்புதல் அளித்து உள்ளது' என்று தெரிவித்தார்.

    மத்திய அரசு 18.07.2022 தேதியிட்ட கடிதத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

    மேலும் விதைப்பு காலத்திற்கு முன்பே குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும் எனக்கூறிய நரேந்திர சிங் தோமர், இதனால் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட பயிரை விதைப்பதற்கு முன்கூட்டியே முடிவை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

    • மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விவசாயிகள் என்று கூறி தரமற்ற நெல்லை வழங்கியதாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், கிண்ணி மங்கலம், கொக்குளம், சாப்டூர், வால்ராஜபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இதே பகுதியில் வசிக்கும் ஒரு சில வியாபாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களை விவசாயிகள் என்று கூறி தரமற்ற நெல்லை வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விவசாயிகள் புகார் செய்ததால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் உத்தரவின் பெயரில் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கப்பட்ட நெல்லை சோதனை செய்து பார்த்தனர். இதில் அவை சமீபத்தில் அறுவடை செய்த நெல் அல்ல.  அவை தரமற்றவை என ஆய்வில் தெரியவந்தது.

    எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மண்டல மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2021-ம் ஆண்டில் நெல் கொள்முதல் விலையை ரூ.72 மட்டுமே மத்திய அரசு உயர்த்திய நிலையில், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 100 கொள்முதல் விலை உயர்வு சற்று அதிகம் தான்.
    • மத்திய அரசு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையையும், தமிழ்நாடு அரசு அதன் ஊக்கத்தொகையையும் சற்று உயர்த்தி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க முன்வர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021-ம் ஆண்டில் நெல் கொள்முதல் விலையை ரூ.72 மட்டுமே மத்திய அரசு உயர்த்திய நிலையில், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 100 கொள்முதல் விலை உயர்வு சற்று அதிகம் தான். ஆனால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க இந்த விலை எந்த வகையிலும் பயனளிக்காது.

    மத்திய அரசு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையையும், தமிழ்நாடு அரசு அதன் ஊக்கத்தொகையையும் சற்று உயர்த்தி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க முன்வர வேண்டும். அப்போது தான் உழவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×