search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தசரா திருவிழா"

    • இரவில் சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு, பல்வேறு வேடங்கள் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.

    ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்தனர். விழா நாட்களில் கோவிலில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவில் கடற்கரையில் நடந்தது. இதை காண்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் மூன்று முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகம், எருமை தலை, சேவல் என அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

    பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர்.

    விழாவின் 11-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடியிறக்கப்பட்டது.

    தொடர்ந்து அம்மனின் காப்பு களையப்பட்டது. பின்னர் வேடம் அணிந்த பக்தர்களின் காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் களைந்தனர். இரவில் சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.

    12-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • பல்வேறு அம்மன் கோவில்களில் இருந்து வரும் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுவது வழக்கம்.
    • இந்த வருடம் 13-ம் ஆண்டு தசரா காட்சி நேற்று இரவில் வெகு விமர்சையாக நடந்தது.

    களக்காடு:

    களக்காட்டில் தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் இருந்து வரும் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டது.இந்த வருடம் 13-ம் ஆண்டு தசரா காட்சி நேற்று இரவில் வெகு விமர்சையாக நடந்தது.

    இதையொட்டி களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன், சிதம்பரபுரம் உச்சினிமாகாளி அம்மன், பாரதிபுரம் உச்சினிமாகாளி அம்மன், மேலரதவீதி கற்பகவல்லி அம்மன், கோவில்பத்து துர்க்கா பரமேஸ்வரி அம்மன், கோவில்பத்து முப்பிடாதி அம்மன், விஸ்வகர்மா தெரு சந்தனமாரி அம்மன், தோப்புத்தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன், கழுகேற்றி முக்கு முப்பிடாதி அம்மன், கப்பலோட்டிய தமிழன் தெரு முப்பிடாதி அம்மன் கோவில்களில் இருந்து புறப்பட்டு வந்த 10 அம்மன் சப்பரங்களும் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவில் முன்பு ஒரே இடத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

    இவர்களுடன் சத்தியவா கீஸ்வரர், கோமதி அம்மன், வரதராஜபெருமாளும் காட்சி கொடுத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன்கள் கொலு இருந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.

    நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு புகழ் பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் 25-ந்தேதி தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது.

    பின்னர் இரவில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. இரவில் அம்மன் சப்பரங்கள் பாளையங்கோட்டை தெருக்களில் பவனி வந்தது. அங்கிருந்து அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு மேளதாளம் முழங்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கூடியிருந்த பெண்களும் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் அந்தந்த கோவிலுக்கு சென்றன. அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன்கள் கொலு இருந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு 12 அம்மன் கோவில்களிலும் துர்கா ஹோமம், யாக சாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 12 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் பவனி வந்தன.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலிலும், பகல் 1 மணிக்கு ராஜகோபாலசாமி கோவில் முன்பும், இரவு 7 மணிக்கு மார்க்கெட் பகுதியிலும் அணிவகுத்து நிற்கும். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தேங்காய் உடைத்து அம்மன்களை வழிபடுவார்கள். இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.

    இதேபோல் நெல்லை டவுனில் புட்டாபுரத்தி அம்மன் கோவில், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், முப்பிடாரி அம்மன், வாகையடி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், துர்க்கை அம்மன், தங்கம்மன், மாரியம்மன், சாலியர் தெரு மாரியம்மன் உள்ளிட்ட 30 அம்மன் கோவில்களில் நேற்று தசரா திருவிழா நடந்தது.

    இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், இரவில் சப்பரத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடந்தது.

    • இன்று மாலை 4 மணிக்கு கொடியிறக்கப்படும்.
    • நாளை நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதற்கிடையே தசரா விழாவையொட்டி பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.

    10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.

    இரவு 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    கடற்கரையில் அம்மன் மகிஷாசூரனை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    11-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடியிறக்கப்படும். பின்னர் அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன், வேடம் அணிந்த பக்தர்களும் காப்பு களைவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் நிறைவு நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • குலசை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நள்ளிரவில் விமர்சையாக நடந்தது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்தனர்.

    பெரும்பாலான பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சுவாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து இருந்தனர். இதனால் தென் மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், பத்தாம் நாளான இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு குலசை தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது.

    நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் எளிதில் வந்து செல்லும் வகையில் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டன. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் மாவட்டங்களில் வேடம் அணிந்த பக்தர்களால் தசரா திருவிழா களைகட்டியது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் தசரா குழுக்களாவும் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலிக்கின்றனர்.

    பெரும்பாலான பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சுவாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து காணிக்கை வசூலிக்கின்றனர். தசரா குழுவினரும் ஊர் ஊராக சென்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.

    9-ம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    10-ம் நாளான இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் எளிதில் வந்து செல்லும் வகையில் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    • இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும்.
    • ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்து சூரனை வதம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். ஆனால், இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும். அடிப்படை அம்மன் வழிபாடு.

    ஸ்ரீ ராமர் ராவணனை வென்ற வெற்றியை போற்றும் விதமாக தசரா விழாவை வடமாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர். விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். தசராவின் போது, கோவில் சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் காட்சியும் பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடும் காட்சியும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

    இந்த தசரா பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும் 10 நாட்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். விஜயதசமி அன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவி எழுந்தருளி மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவார். துர்க்கை மகிசாசூரனை அழித்த நாளே விஜயதசமி. வடக்கே உள்ள ஐதிகம்.

    பராசக்தியே துர்க்கை வடிவம். தசராவில் முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவர். புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் 'ஆச்வின' மாதம். இந்த மாதத்தில் உள்ள வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களே நவராத்திரி.

    ராமநாதபுரத்திலும் கர்நாடக மாநிலத்தில் கொண்டாடுவது போல் ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக சிறப்பாக நடைபெறும். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் நவராத்திரி திருவிழா, மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையை போல மன்னர்கள் காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜேஸ்வரி அம்மன் நகரில் உள்ள அனைத்து உற்வச மூர்த்திகளுடன் ஊர்வலமாக மகர் நோன்பு திடலை அடைந்து அங்கு ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்து சூரனை வதம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெறுவார்கள்.

    • இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. இரவில் துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர் ஆகிய திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.

    6-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தசரா குழுவினர் நேற்று முதல் கோவிலில் காப்பு கட்டி குழுக்களாக ஊர் ஊராக சென்று நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். நேற்று தாண்டவன்காட்டில் காளி பக்தர்கள் தசரா குழுக்களாக சென்றனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    • கோவில் வளாகத்தில் காவடி திருவீதி உலா வருதல் நடைபெற்றது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் இரவு அம்மன் ஒரு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு 3-ம் நாள் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் நலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் காவடி திருவீதி உலா வருதல் நடைபெற்றது.

    • வருகிற 5-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • இந்த விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 5-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் போது, ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனங்கள் ஆடுவதற்கும், ஆபாசப்பாடல்கள், சினிமா பாடல்கள் இசைப்பதற்கும், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த உரிய அனுமதி பெற்று அதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். குலசேகரன்பட்டினம் மற்றும் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்களுடன் தற்காலிக போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணித்தும், திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் பக்தர்களை ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்று உலோகத்தாலான எந்தப் பொருட்களையும் கொண்டு வருவதோ, ஜாதி சின்னங்களுடன் கூடிய உடைகளோ, தொப்பி, கொடிகள், ரிப்பன்கள் ஆகியவை அணிந்துவரவோ, போலீஸ் துறையினர் போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அதிக சத்தத்துடன் டிரம் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்த அனுமதி இல்லை. கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுகின்றனர். வியாபாரிகள் அனுமதியின்றி சாலையோரம் கடைகள் அமைத்து போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஒழுங்காக நிறுத்த வேண்டும். பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது.

    இந்த விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காகவும், பக்தர்களின் பொதுநலனுக்காகவும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வருகிற 5-ந்தேதி தசரா திருவிழா நடக்கிறது.
    • 6-ந்தேதி 12 சப்பரங்களும் ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும்.

    நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு தனிப்புகழ் பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது. பின்னர் இரவில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. பேராச்சி அம்மன் சப்பரம் தவிர மற்ற 11 அம்மன் கோவில் சப்பரங்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை தெருக்களில் பவனி வந்தது.

    நேற்று காலை 6 மணிக்கு 11 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து மேல தெரு வழியாக, வடக்குத்தெருவுக்கு சென்று ராஜகோபாலசுவாமி கோவில் முன்பு 6.30 மணிக்கு அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. பின்னர் அங்கிருந்து அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் புறப்பட்டு காலை 7 மணிக்கு ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு மேளதாளம் முழங்க சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் அந்தந்த கோவிலுக்கு சென்றன. அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன்கள் கொலு இருந்து சிறப்பு பூஜை நடைபெறும்.

    வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) தசரா திருவிழா நடக்கிறது. 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். இரவு 7 மணிக்கு மார்க்கெட் பகுதியில் நிற்கும் அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தேங்காய் உடைத்து அம்மன்களை வழிபாடு செய்வார்கள். இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.

    • கர்நாடகாவில் தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை ஆகும்.
    • இதற்கு முன்பு எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரே தொடங்கி வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் தசரா விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

    காவல் தெய்வமாக கருதப்படும் சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசூரன் எனும் அரக்கனை வதம் செய்த வெற்றி கொண்டாட்டத்தையே தசரா விழாவாக கர்நாடக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த தசரா விழா 'நாட ஹப்பா'(கர்நாடகத்தின் பண்டிகை) என்றும் அழைக்கப்படுகிறது.

    பாரம்பரியம் மிக்க இந்த விழா இன்று தொடங்கியது. விழாவை இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். விழாவை தொடங்கி வைக்கவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளியில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தார். அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து அங்கு வெள்ளித் தேரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பூக்களால் அர்ச்சனை செய்து உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன், ஷோபா, மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

    கர்நாடகாவில் தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன்பு எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரே தொடங்கி வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    10 நாட்கள் நடக்கும் தசரா விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தசரா விளையாட்டு தீப்பந்த ஊர்வலம், தொழில் கண்காட்சி, மலர் கண்காட்சி, உணவு திருவிழா, தசரா விளையாட்டு போட்டிகள், குஸ்தி போட்டி, பொருட்காட்சி, யோகா பயிற்சி, அரண்மனை வளாகத்தில் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி மலர் கண்காட்சி, சிற்பம் மற்றும் ஓவிய கண்காட்சி, சிறப்பு மின்னொளி காட்சி, மகளிர் தசரா, குழந்தைகள் தசரா, திரைப்பட விழா இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற உள்ளன.

    தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் விழாவின் 9 நாட்களும் அரண்மனையில் சிறப்பு பூஜைகள், நவராத்திரி கொலு உள்பட பல்வேறு சம்பிரதாயங்கள் நடைபெறும். அதுபோல் இளைய மன்னர் யதுவீர் தங்க, வைர, நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் ராஜ உடையில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவார். இதுதவிர மைசூரு நகரம் முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது.

    தசரா விழாவில் பங்கேற்க இதுவரை 290 கலைக்குழுக்கள் கர்நாடகா வந்துள்ளன. அம்பா விலாசில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற மற்றும் தேசிய அளவிலான குழுவினர் பங்கேற்பது சிறப்பம்சம் ஆகும்.

    தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் அடுத்த மாதம் 5-ந் தேதி விஜயதசமி அன்று தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஜாட்டி சமூகத்தினர் ரத்தம் சொட்டும் மல்யுத்த போட்டி அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது. அந்த மல்யுத்த போட்டி முடிந்ததும் நந்தி மலையில் கொடியேற்று பூஜை நடத்தப்படும். அதையடுத்து 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமந்தபடி யானைகள் புடைசூழ வந்து நிற்கும். அப்போது அம்மன் மீது மலர்கள் தூவி ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கி வைக்கப்படும். இந்த முறை ஜம்பு சவாரி ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    தசரா ஊர்வலம் வழக்கம்போல் மைசூரு அரண்மனையில் தொடங்கி பன்னிமண்டபம் வரை 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும். பன்னிமண்டபத்தை சென்றடைந்ததும் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசூரனை வதம் செய்ததை நினைவூட்டும் விதமாக பிரமாண்ட வாணவேடிக்கை நடைபெறும். அத்துடன் தசரா விழா நிறைவுபெறுகிறது.

    ஜம்பு சவாரி ஊர்வலத்தில் இம்முறை மாநில அரசின் அனைத்து துறைகள் சார்பிலும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அலங்கார வண்டிகள் இடம்பெறும்.

    இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தான் பொறுப்பேற்றார். அதன்பின்னர் முதல் வெளிமாநில நிகழ்ச்சியாக அவரது கர்நாடக சுற்றுப்பயணம் அமைந்துள்ளது. தசாரா விழாவை தொடங்கிவைத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் உப்பள்ளிக்கு சென்று உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பவுர சன்மானா' என்ற பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் தார்வாரில் உள்ள ஐ.ஐ.டி.யில் (இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம்) புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்சின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தியை அவர் தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் தெற்கு மண்டல வைராலஜி நிறுவனத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத்தொடர்ந்து செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்கிறார். மேலும் கர்நாடக அரசு சார்பில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவிக்கப்படுகிறார்.

    இதையடுத்து நாளை மறுநாள் (28-ந்தேதி) பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல உள்ளார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூரு, தார்வாரிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து காலை 11 மணி அளவில் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்கிறார்.

    ×