search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் பறிமுதல்"

    • சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.
    • கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மோண்டா மார்க்கெட்டில் சித்தி விநாயக் என்ற பிரபல நகைக்கடை உள்ளது.

    இந்த கடைக்கு கடந்த 27-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் டிப்டாப் உடைய அணிந்து கார்களில் வந்து இறங்கினர்.

    அவர்கள் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி போலியான அடையாள அட்டைகளை காண்பித்தனர்.

    இதனை நம்பி கடை ஊழியர் மற்றும் உரிமையாளர்கள் அவர்களை சோதனை நடத்த அனுமதித்தனர். அவர்கள் கடையில் இருந்த ஆவணங்கள் மற்றும் நகைகளை சரிபார்த்தனர்.

    அப்போது சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.

    அவர்கள் சென்ற பிறகுதான் வந்தவர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்த திருட்டு கும்பல் என தெரியவந்தது.

    இது குறித்து கடையின் உரிமையாளர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தலைமையில் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    கும்பல் வந்த கார் பதிவு எண் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்.

    விசாரணையில் அவர்கள் ரகுமான் கபூர் அதர், ஜாகிர் கனி அதர், பிரவீன் யாதவ் மற்றும் ஆகாஷ் அருண் ஹோவில் என தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 தங்க பிஸ்கெட்டுகள் மீட்கப்பட்டன.

    மேலும் 6 பேர் தலைமறைவாகி விட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் கோவா பகுதிகளுக்கு அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.

    அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போன்று இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று நவீன ஸ்கேனிங் கருவி மீலம் சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த பயணியை மருத்துவ பரிசோதனைக்காக விமான நிலைய பகுதியில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விரட்டி சென்று பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இலங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இலங்கையில் இருந்து கடத்தல் காரர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடத்தல்காரர்கள் வரும் பகுதிகளுக்கு ரோந்து படகில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஹோவர் கிராப்ட் கப்பலில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றனர்.

    அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் ஒரு நாட்டுப்படகு வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளை பார்த்ததும் நாட்டுப்படகில் இருந்தவர்கள் ஏதோ ஒரு பொருளை கடலில் வீசியுள்ளனர்.

    இதையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர். அந்த படகில் வேதாளை பகுதியை சேர்ந்த முகமது நாசர், அப்துல் கனி, பாம்பன் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் இருந்தனர்.

    அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கடலில் வீசியது தங்கக்கட்டிகளா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்ற போது இலங்கை பகுதியில் இருந்து மேலும் ஒரு நாட்டுபடகு வருவது தெரியவந்தது. அந்த படகை போலீசார் மடக்கி, அதில் வந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக நேற்று 3 பேர் வந்த படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று கடத்தல்காரர்கள் படகில் இருந்து கடலில் பார்சலை வீசிய பகுதி மணாலி தீவுப்பகுதி ஆகும். அங்கு கடலில் தங்கம் வீசப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் மீனவர்களை வைத்து தங்கத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுங்கத்துறை அதிகாரிகள் அதிநவீன ஸ்கேனிங் எந்திரம் மூலம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்கிறார்கள்.
    • விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.

    வேலை நிமித்தமாகவும், சுற்றுலாவாகவும் வெளிநாடுகளுக்கு செல்வோர் திரும்பி வரும்போது, தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அவ்வாறு கடத்தப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்துள்ளது.

    இருந்தபோதிலும் இதனை கட்டுப்படுத்தும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிநவீன ஸ்கேனிங் எந்திரம் மூலம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்கிறார்கள்.

    இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். அப்போது ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் எந்திரத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அந்த எந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து எடுத்து வந்த ரூ.9.64 லட்சம் மதிப்பிலான 159 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது.

    இதனை தடுக்க ஆந்திர மாநில சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தள்ளம்பள்ளி என்ற இடத்தில் நாயுடு பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

    காரில் 5 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. தங்கத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தங்கம் கடத்தி வந்த 4 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காருடன் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. யாருக்காக கடத்தி வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் ஆந்திராவில் சென்னையில் இருந்து கடத்தப்பட்ட 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு கடத்தி வந்த 7.3 கிலோ தங்க கட்டிகள் ஆந்திராவில் பிடிப்பட்டது.

    தொடர் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.58 லட்சம் ஆகும்.
    • தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிக்கிய பயணியிடம் தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு வளைகுடா நாடான மஸ்கட்டில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் அந்த பயணியின் உடமைகளை பரிசோதித்தனர்.

    அப்போது அவரிடம் ஒரு கிலோ 182 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது தெரியவந்தது. அதனை அவர் கேப்ஸ்யூல் வடிவில் உடலுக்குள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.58 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிக்கிய பயணியிடம் தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    • இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
    • துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.39 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 745 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.55 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள 1,042 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளிலும் எதுவும் இல்லாததால் இருவரையும் தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.39 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 745 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த 2 பேரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 293 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 53 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர்.
    • சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மின்மோட்டாரை உடைத்து பார்த்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர். அதில் வந்த சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோதும் எதுவும் இல்லை. மீண்டும் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் மின்சார மோட்டார் இருந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அந்த மோட்டார் சற்று கனமாக இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மின்மோட்டாரை உடைத்து பார்த்தனர். அதில் தங்கத்தை உருளை போல் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.95 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பயணிகளிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை விமான சுங்கப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • தங்கம் பறிமுதல் தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் கரீப்பூரில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை விமான சுங்கப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சவுதி அரேபியா, ஜெட்டாவிலிருந்து வந்த மலப்புரத்தைச் சேர்ந்த ரஹ்மான் (43) என்பவரிடமிருந்து 1,107 கிராம் எடையுள்ள தங்கத்தை நான்கு கேப்சூல்களில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவத்தில், மலப்புரம் கருளையைச் சேர்ந்த முகமது உவைசில் (30) என்பவர் உடலில் நான்கு கேப்சூல்களில் தங்கம் வைத்து கடத்த முயன்றபோது காவலர்களிடம் சிக்கியுள்ளார்.

    மேலும், அபுதாபியில் இருந்து வந்த கோழிக்கோடு கூடரஞ்சியைச் சேர்ந்த உன்னிச்சல் மெத்தல் விஜித் (29) என்பவரிடம் இருந்து, 1,061 கிராம் எடையுள்ள தங்கம் கொண்ட நான்கு கேப்சூல்கள் உடல் மற்றும் காலுறைக்குள் மறைத்து வைக்து கடத்த முயன்றபோதுஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நான்காவது வழக்கில் துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த மலப்புரத்தைச் சேர்ந்த ஒசங்குன்றம் ஷபிக் (27) என்பவர் தனது கைப்பையில் 9.01 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட தங்கத்தை பிரித்தெடுத்த பிறகு, பயணிகளைக் கைது செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் மட்டும் 1,317 கிலோ சிக்கியது.
    • தமிழ்நாட்டில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி :

    அங்கத்தை அழகு செய்யும் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அசுர வேகத்தில் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

    இருப்பினும் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.

    தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒரு புறம் இருக்க தங்கம் இல்லாமல் வணிகம் இல்லை என்கிற நிலையிலேயே உலகப்பொருளாதாரம் உள்ளது.

    பண்டைய காலத்தில் இருந்தே இதே நிலைதான். தங்கம் நுகர்வில் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது.

    கடந்த 2021-2022-ம் ஆண்டில் சுமார் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதுமட்டுமின்றி கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள் பலர் அதனை தங்கமாக மாற்ற ஆசைப்படுவதாலும் தங்கத்தின் மீதான நுகர்வு இந்தியாவில் அதிகமாக உள்ளது.

    இப்படி தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருப்பதால் துபாய், சிங்கப்பூர் போன்ற தங்கம் விலை குறைவாக உள்ள நாடுகளில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தி வருகிறார்கள். இந்தியாவில் விலை அதிகமாக இருப்பதால் கடத்தல்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதற்கிடையே தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரிப்பது, கடத்தல்காரர்களை கடத்தலுக்கு மேலும் தூண்டுகிறது.

    இப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் தங்கத்தை சுங்க அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகிறார்கள். சில நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து தங்கம் வெளியேறினாலும் ரெயில் நிலையங்களில் பிடிபட்டு விடுகிறது.

    இதுபோன்ற கடத்தலில் கடந்த 3 ஆண்டுகளில் பிடிபட்ட தங்க விவரங்களை பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், பத்ம விபூஷண் விருது பெற்ற நடனக்கலைஞர் சோனல் மான்சிங் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்டு இருந்தார்.

    இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில், 'கடந்த 3 ஆண்டுகளில் (2020 முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை) நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரம் கிலோ, அதாவது 8 ஆயிரத்து 956 கிலோ 490 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாட்டிலேயே அதிக அளவு கடத்தல் தங்கம் கடந்த 3 ஆண்டுகளில் கேரளாவில்தான் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு ஆயிரத்து 869 கிலோ 290 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் ஆயிரத்து 317 கிலோ 430 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் ஆயிரத்து125 கிலோ 380 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

    வழக்குகளை பொறுத்தவரை நாடு முழுவதும் 9 ஆயிரத்து 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    தங்கம் கடத்தலை தடுக்கும் பணிகளை புலனாய்வு அமைப்புகள் ரகசிய தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன' என்று மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.

    • வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.
    • வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 11 பயணிகளிடம் இருந்து மொத்தம் 6.62 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற பிற மாநிலங்களுக்கும், சென்னைக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்படுகிறது.

    வெளிநாடுகளில் இருந்தும் விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை அதிகாரிகள் கண்காணித்து நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் கோவைக்கு வரும் பயணிகள் சிலர் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கோவை விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஷார்ஜாவில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் வந்த 11 பயணிகள் தங்களது பேண்ட் பைகள், மலக்குடல், காலணிகள் மற்றும் ஜீன்ஸ் பேண்டில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 11 பயணிகளிடம் இருந்து மொத்தம் 6.62 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.8 கோடி ஆகும்.

    இந்த சோதனையில் ½ கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை கடத்தி வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜூன் (43) என்பவரை மட்டும் அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து மற்ற பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று அதிகாலை துபாயில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
    • அதிகாரிகள் துபாயில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற கோடை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்கள் இயக்கவும் ஆலோசனைக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு குருவிகள் மூலம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் இருக்க கடத்தல் புள்ளிகள் பல்வேறு நூதன வழிகளில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை துபாயில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் ஆண் பயணி ஒருவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் அவரையும், அவர் கொண்டு வந்த உடமைகளையும் நவீன ஸ்கேனர் கருவி மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.

    அப்போது அவர் எடுத்து வந்த மொபைல் போன் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.27 லட்சத்து 98 ஆயிரத்து 189 மதிப்புள்ள 53 கிராம் பிடிபட்டது.

    பின்னர் அதிகாரிகள் துபாயில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×