என் மலர்
இந்தியா

கோழிக்கோடு விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
- பயணிகளிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை விமான சுங்கப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- தங்கம் பறிமுதல் தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கரீப்பூரில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை விமான சுங்கப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சவுதி அரேபியா, ஜெட்டாவிலிருந்து வந்த மலப்புரத்தைச் சேர்ந்த ரஹ்மான் (43) என்பவரிடமிருந்து 1,107 கிராம் எடையுள்ள தங்கத்தை நான்கு கேப்சூல்களில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவத்தில், மலப்புரம் கருளையைச் சேர்ந்த முகமது உவைசில் (30) என்பவர் உடலில் நான்கு கேப்சூல்களில் தங்கம் வைத்து கடத்த முயன்றபோது காவலர்களிடம் சிக்கியுள்ளார்.
மேலும், அபுதாபியில் இருந்து வந்த கோழிக்கோடு கூடரஞ்சியைச் சேர்ந்த உன்னிச்சல் மெத்தல் விஜித் (29) என்பவரிடம் இருந்து, 1,061 கிராம் எடையுள்ள தங்கம் கொண்ட நான்கு கேப்சூல்கள் உடல் மற்றும் காலுறைக்குள் மறைத்து வைக்து கடத்த முயன்றபோதுஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நான்காவது வழக்கில் துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த மலப்புரத்தைச் சேர்ந்த ஒசங்குன்றம் ஷபிக் (27) என்பவர் தனது கைப்பையில் 9.01 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தை பிரித்தெடுத்த பிறகு, பயணிகளைக் கைது செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






