search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசைலநாதர்"

    • பங்குனி மாதத்தின் கடைசி நாளில் தேரோட்டம் நடைபெறும்.
    • சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் பவனி வருவார்கள்.

    இந்த கோவிலில் சுவாமிக்கு, அம்பாளுக்கு என்று இரு தனித்தனி தேர்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தின் கடைசி நாளில் கோலாகலமாக தேரோட்டம் நடைபெறும். ஆனால் தேரோட்டம் இந்த கோவிலில் நடக்காது. தேர்கள் ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிவந்தியப்பர் கோவில் முன்பு நிறுத்தப்பட்டு உள்ளன. அங்குதான் தேரோட்டம் நடைபெறும்.

    கொடியேற்றம் மட்டும்தான் சிவசைலம் கோவிலில் நடைபெறும். கொடியேற்றம் முடிந்ததும் அன்றே சிவசைலநாதரும், பரமகல்யாணி அம்பாளும் அங்கிருந்து ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிவந்தியப்பர் கோவிலுக்கு எழுந்தருளுவர். திருவிழாவின் பிற உற்சவங்கள் அனைத்தும் அந்த கோவிலிலேயே நடைபெறும்.

    விழாவின் 11-வது நாள், அதாவது பங்குனி மாதத்தின் கடைசி நாள் தேரோட்டம் நடைபெறும். அன்று காலை சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் நான்கு வீதிகளிலும் பவனி வருவார்கள்.

    அம்பாள் பரமகல்யாணியின் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துவந்து நிலையத்தில் சேர்ப்பது இதில் தனிச்சிறப்பாகும்.

    இந்த தேர்த்திருவிழாவில் ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தேரோட்டம் முடிந்த மறுநாள் அதாவது `சித்திரை விசு' (தமிழ்ப் புத்தாண்டு) அன்று சுவாமியும், அம்பாளும் மறுபடியும் சிவசைலம் கோவிலுக்கு எழுந்தருளுவார்கள். அங்கு கோவிலை அடைந்ததும், கடனாநதியில் தீர்த்தவாரி நடத்தப்பட்டு சுவாமியும் அம்பாளும் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    இதேபோல் தைப்பூச திருநாள் அன்று தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவும் ஆழ்வார்குறிச்சியில்தான் நடக்கும். இதற்காக சுவாமியும், அம்பாளும் சிவசைலத்தில் இருந்து அழைத்து வரப்படுவார்கள்.

    • நான்கு கைகளுடன் அம்பாள் ஜலவாசம் செய்து வருகிறாள்.
    • சிவசைலநாதரையும், பரமகல்யாணியையும் தங்கள் ஊருக்கு `மறுவீடு' அழைக்கிறார்கள்.

    சிவசைலநாதர் கோவிலில் அம்பாள் பரமகல்யாணி எழுந்தருளிய வரலாறு சுவாரசியமானது...

    ஆழ்வார்குறிச்சிக்கு தெற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழஆம்பூர் என்ற எழில்மிகுந்த சிறிய கிராமம். பழங்காலத்தில் இந்த ஊர் `சினேகபுரி' என்று அழைக்கப்பட்டது.

    அப்போது அங்கு வாழ்ந்து வந்த அந்தணர் ஒருவரின் கனவில் சிவசைலநாதர் தோன்றி, `இங்குள்ள அக்ரஹாரத்தின் நடுவில் அமைந்துள்ள கிணற்றில் நான்கு கைகளுடன் அம்பாள் ஜலவாசம் செய்து வருகிறாள். அவளை என் இருப்பிடத்துக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்வாயாக'' என கூறிவிட்டு மறைந்தார்.

    இதனால் மெய்சிலிர்த்துப்போன அந்த அந்தணர், விடிந்ததும் ஊர் மக்களை கூட்டி இறைவன் கனவில் வந்து தனக்கு பணித்த விவரங்களை கூறினார். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த கிணற்றுக்குள் இருந்து அம்பாள் சிலையை வெளியே எடுத்தனர்.

    பின்னர் ஈசனின் ஆணைப்படி சிலையை சிவசைலம் கொண்டு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்தனர்.

    அம்பாள் தங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதால், கீழ ஆம்பூர் கிராம மக்கள் ஆண்டுதோறும் சிவசைலநாதரையும், பரமகல்யாணியையும் தங்கள் ஊருக்கு `மறுவீடு' அழைக்கிறார்கள். `வசந்த உற்சவம்' எனப்படும் இந்த மறுவீடு வைபவம் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் ஒரு நன்னாளில் நடைபெறுகிறது. சிவசைலத்தில் இருந்து சுவாமி-அம்பாள் சிலைகளை கீழ ஆம்பூரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு கொண்டு வருவார்கள். அங்கு 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு சுவாமியும் அம்பாளும் மீண்டும் சிவசைலத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    பெண் வீட்டார், புதுமண தம்பதியை மறுவீடு அழைத்து எப்படி நன்றாக உபசரித்து கணவன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்களோ அதேபோல் கீழ ஆம்பூர் கிராம மக்கள் சிவசைலநாதரையும், பரமகல்யாணி அம்மனையும் தங்கள் ஊருக்கு வரவேற்று உபசரித்து வாஞ்சையுடன் அனுப்பி வைப்பது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.

    ×