search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்பத்திருவிழா"

    • திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது.
    • பங்குனி திருவிழா 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சோழிங்கநல்லூர்:

    திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 26-ந்தேதி வரை 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவைமுன்னிட்டு தினந்தோறும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 20-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் தொட்டி விழா எமதர்மனுக்கு அருளல், இரவு விடையூர்திக் காட்சி (ரிஷபவாகனம்), பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை சந்திரசேகரர் தேர் திரு விழாவும், பிரம்மனுக்கு காட்சி அருளலும் நடைபெற உள்ளது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் 4 மறைகளுக்கு அருளல், மாலை 6 மணிக்கு பரிவேட்டை விழா, இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது.

    24-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடை பெறுகிறது. மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி, வன்னி மரக்காட்சி நடைபெறுகிறது. 25-ந்தேதி திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் சந்திர சேகரர் கடல் நீராடல், இரவு 8 மணிக்கு திரிபுர சுந்தரி, தியாகராஜர் சுவாமி திருமண விழா, இரவு 10.30 மணிக்கு கொடியிறக்கம், தொடர்ந்து வால்மீகி முனிவருக்கு 18 திருநடன காட்சி அருளி வீடுபேறு அளித்தல் நடக்கிறது.

    தெப்பத்திருவிழா

    26-ந்தேதி மாலை சந்திர சேகரர் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இரவு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, தியாகராஜர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு அருளல், அதிகாலை 4.30 மணிக்கு பந்தம்பரி 18 திருநடன காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதியுலா.
    • தேரோட்டம் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பவனி வருதல் நடைபெற்று வருகிறது.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    இன்று அதிகாலையில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி 8 வீதியிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது.

    தொடர்ந்து மதியம் 11 மணிக்கு மேல கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்கு பிறகு பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    இந்த பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை வழிபட்டால் விஷ்ணு அம்சமாக இருந்து சண்முகர் வாழ்வில் வள மான வாழ்வு பெற்று செல்வ செழிப்புடன் இந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக வாழ வைப்பார் என்ற ஐதீகத்தால் பக்தர்கள் பச்சை நிறத்தில் ஆன உடையணிந்து தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    11-ம் திருவிழாவான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருவிழா அன்று மாலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    • 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலம்.
    • தேரோட்டம் நாளை 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் கிராமத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற இக்கோவில், 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு பெருமாள் ஓலை சப்பரத்துடன் கூடிய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    இந்த கருட சேவை நிகழ்ச்சியில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 24-ந் தேதி (சனிக்கிழமை) சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாளுடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • மாசித்திருவிழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • சண்முகர் இன்று சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பவனி வருதல் நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 4.30 மணிக்கு உருகு சட்டசேவை, காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

    இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    8-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பின்னர் பகல் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான (23-ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான (24-ந்தேதி) தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    • அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • மாசிமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பி க்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக திருவிழா வருகிற 11-ந்தேதியும், தேர் திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
    • தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் உள்ளே பிரம்ம தீர்த்தமும், வெளியே ஆதிஷேச தீர்த்த குளமும் உள்ளது. ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி கோவில் வெளியே உள்ள ஆதிஷேச தீர்த்த குளத்தில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தெப்பத்தில் உற்சவர் சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரி தாயார் எழுந்தருளி ஆதிஷேச தீர்த்த குளத்தின் மைய மண்டபத்தை ஐந்து முறை வலம் வருவார். இரவு 7 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெற உள்ளது.

    • 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய் வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேர் கீழ ரதவீதி, மேல ரதவீதி, பெரிய ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதேபோல இரவு மின்னொளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • பங்குனி மாதத்தின் கடைசி நாளில் தேரோட்டம் நடைபெறும்.
    • சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் பவனி வருவார்கள்.

    இந்த கோவிலில் சுவாமிக்கு, அம்பாளுக்கு என்று இரு தனித்தனி தேர்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தின் கடைசி நாளில் கோலாகலமாக தேரோட்டம் நடைபெறும். ஆனால் தேரோட்டம் இந்த கோவிலில் நடக்காது. தேர்கள் ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிவந்தியப்பர் கோவில் முன்பு நிறுத்தப்பட்டு உள்ளன. அங்குதான் தேரோட்டம் நடைபெறும்.

    கொடியேற்றம் மட்டும்தான் சிவசைலம் கோவிலில் நடைபெறும். கொடியேற்றம் முடிந்ததும் அன்றே சிவசைலநாதரும், பரமகல்யாணி அம்பாளும் அங்கிருந்து ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிவந்தியப்பர் கோவிலுக்கு எழுந்தருளுவர். திருவிழாவின் பிற உற்சவங்கள் அனைத்தும் அந்த கோவிலிலேயே நடைபெறும்.

    விழாவின் 11-வது நாள், அதாவது பங்குனி மாதத்தின் கடைசி நாள் தேரோட்டம் நடைபெறும். அன்று காலை சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் நான்கு வீதிகளிலும் பவனி வருவார்கள்.

    அம்பாள் பரமகல்யாணியின் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துவந்து நிலையத்தில் சேர்ப்பது இதில் தனிச்சிறப்பாகும்.

    இந்த தேர்த்திருவிழாவில் ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தேரோட்டம் முடிந்த மறுநாள் அதாவது `சித்திரை விசு' (தமிழ்ப் புத்தாண்டு) அன்று சுவாமியும், அம்பாளும் மறுபடியும் சிவசைலம் கோவிலுக்கு எழுந்தருளுவார்கள். அங்கு கோவிலை அடைந்ததும், கடனாநதியில் தீர்த்தவாரி நடத்தப்பட்டு சுவாமியும் அம்பாளும் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    இதேபோல் தைப்பூச திருநாள் அன்று தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவும் ஆழ்வார்குறிச்சியில்தான் நடக்கும். இதற்காக சுவாமியும், அம்பாளும் சிவசைலத்தில் இருந்து அழைத்து வரப்படுவார்கள்.

    • காளையார் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோயிலில் கடந்த 26 -ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப் பட்ட தேரில் ஸ்வர்ணவல்லிஅம்மன் சமேத சொர்ண காளீஸ்வரர் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ கண்காணிப் பாளர் பால சரவணன், மற்றும் ஸ்தானிகர் காளீஸ்வர குழுக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர்.
    • நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர்.

    ஸ்ரீ சங்கர நயினார் திருக்கோவில் உள்ள சங்கரன்கோவில் திருத்தலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலம் ஆகும். நெல்லை மாவட்டத்திற்கு தலைநகரம் திருநெல்வேலி. அதற்கு அடுத்த பெரிய நகரம் சங்கரன்கோவில் ஆகும். ஆடித்தபசு என்றால் உடனே நினைவுக்கு வருவது சங்கரன் கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும்.

    மற்ற தலங்களைப் போன்றே இந்த திருத்தலத்திற்கும் ரசிக்கும்படியான, சுவையான புராணக்கதைகள் உண்டு. இந்து சமயத்திலே பல பிரிவுகள் உண்டு. வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் ஒற்றுமை இருப்பதாலே உலகிலேயே மிகவும் தொன்மையான பெரிய சமயம் ஆக இருக்கின்றது.

    வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் வாதங்கள் உண்டாயிற்று. மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர். இருவரும் ஒன்றே என்பதை உணர்த்த சங்கரனாகவும், நாராயணராகவும் இணைந்து தோன்றி, ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை புரிய வைத்தனர்.

    இங்குள்ள பெருமானார் பாதி உருவம் சந்தனம், பாம்பு, மான் ஆகியவற்றுடன் சிவபெருமான் ஆகவும், மறு பாதி உருவத்தில் சங்கு, சக்கரத்துடனும் நாராயணராகவும் காட்சி தருகிறார். ஆனாலும், இதை ஒப்புக்கொள்ளாத வைணவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபடுவதை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுகின்றனர்.

    ஒரு காலத்தில் தேவர்களில் ஒருவரான மாணிக்கிரீவன் என்பவர் பார்வதி தேவியின் சாபத்தினாலே பூமியிலே மானிடனாகப் பிறந்து ஒரு தோட்டத்தில் தோட்டக்காரானாக வேலை செய்து வந்தார். அந்த தோட்டத்தில் இருந்து மலர்கள் அரண்மனைக்கு தினமும் அனுப்பப்பட்டு வந்தது.

    வன்மீகநாதன் பெயர் எப்படி?

    ஒரு நாள் தோட்டத்தில் ஒரு பாம்பு புற்று இருப்பது கண்டு அதை அகற்ற மாணிக்கிரீவன் முயன்றபொழுது அதில் இருந்த பாம்பின் வால் வெட்டப்பட்டது. அதன் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்து அரண்மனைக்கு வந்து மன்னனிடம் கூறினார். அப்பொழுது அரசனாக இருந்த மன்னன் உக்கிரம பாண்டியன் இது சிவபெருமானின் இருப்பிடம் தான் என்று தீர்மானித்து, அந்த லிங்கத்தை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து ஒரு கோவிலை நிர்மாணித்தார்.

    அந்த புற்று வன்மீகம் என்று அழைக்கப்பட்டதால் அந்த இறையனாருக்கு வன்மீகநாதர் என்று பெயரிட்டனர். அந்த புற்றை இப்பொழுதும் கோவிலிலுள்ள ஒரு பெரிய தொட்டியில் வைத்துள்ளனர். அந்த புற்று மண்ணை சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக பூசி வருகின்றனர். பாம்பு கடித்தல், தோல் நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

    சிவபெருமானின் துணைவியார் பார்வதி தேவி சிவபெருமானையும், தன் அண்ணன் மஹாவிஷ்ணுவையும் ஒன்று சேர காண விரும்பி, அதற்காக புங்கவன யாத்திரை சென்றாராம். ஆடி மாதம் ஒன்பது நாட்கள் விரதமிருந்து பூஜைகள் செய்தார். பவுர்ணமி அன்று அவர் விருப்பம் நிறைவேற பூஜையின் முடிவில் சங்கரரும், மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நாராயணராக காட்சி அளித்து ஆசி கூறியதால், இந்த இடம் சங்கர நாராயணர் கோவில் ஆயிற்று.

    சிவபெருமான்-விஷ்ணுவை வழிபட்ட நாக அரசர்கள்

    நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இருவரும் போட்டியில் யாருடைய இறைவன் பெரியவர் என்று வினா எழுப்பியதற்கு விடை தரும் வகையில் சிவனும் மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நராயணராக காட்சி அளித்ததாகவும் மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.

    உக்கிர பாண்டிய மன்னன் யானை மீது ஏறி, மீனாட்சி அம்மனை தரிசிக்க புறப்பட்டபொழுது யானை ஒரு குழியில் விழுந்து அதனால் அந்த குழியில் இருந்து எழ முடியவில்லை. அதுசமயம், ஒரு குடியானவன் அரசனிடம், காட்டில் உள்ள ஒரு எறும்பு புற்றின் மேல் ஒரு சிவலிங்கம் உள்ளது என்றும் அந்த லிங்கத்தை ஒரு பாம்பு சுற்றி இருப்பதாகவும் கூறினான். அங்கு விரைந்து சென்று அந்த அதிசயத்தை கண்ட மன்னன், இது இறைவனின் ஆணை என்று தீர்மானித்து கட்டியது தான் இந்த தலம் என்றும் கூறுகின்றனர்.

    இப்படி பல புராண கதைகள் இத்தலத்தை பற்றி உள்ளது.

    இத்திருத்தலத்தை சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இங்கு மூன்று கருவறைகள் உள்ளன. ஸ்ரீ சங்கரேஸ்வரர், அன்னை கோமதி அம்மன், மற்றும் ஸ்ரீ சங்கரநாராயணன் ஆகியோர் முறையே உள்ளனர்.

    புற்று மண்ணே அருள் பிரசாதம்

    இங்குள்ள புற்று மண்ணை அருள் பிரசாதமாக நோய் தீர்க்கும் நிவாரணி என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் வீடுகளில் பாம்பு இருப்பதை கண்டால் சங்கரன் கோவிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்டால் அதன் பின்பு எந்த பாம்பும் அந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை.

    இங்குள்ள திருக்குளம் நாகசுனை என்பது ஆகும். இதை நாகதேவதைகளான பதுமன்-சங்கம் தோண்டியதாகவும், இந்த சுனையில் உள்ள நீருக்கு அதிக சக்தி உள்ளது என்று பக்தர்கள் நம்புகின்றனர். தினமும் இந்த சுனை நீர் கொண்டுதான் இங்குள்ள சிலைகளுக்கு ஆராட்டு செய்யப்படுகின்றது.

    இங்குள்ள அம்மன் விரதம், பூஜைகள் செய்து அமைந்த கோவில் என்பதால் இந்த அம்மன் மிகவும் சக்தி பெற்றவள் என்கின்றனர். அம்மன் கருவறைக்கு முன்பு சக்கரம் போன்ற ஒரு சிறிய குழி இருக்கின்றது. மன நோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும் இந்த இடத்தில் அமர்ந்து அம்மனை வழிபட சகலமும் தீர்ந்திடும், வாழ்வு வளம் பெறும், மன நிம்மதி கிடைக்கும் என்பது உண்மை ஆகும்.

    ஆடித்தபசு அன்று திருக்குளத்தில் சர்க்கரையையும் உப்பையும் கலந்து வீசி எறிந்து வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்றும். சகல துன்பங்களும் அவை நீரில் கரைவது போன்று கலந்து போய்விடும் என்பது ஐதீகம்.

    சித்திரை பிரம்மோத்சவம் ஏப்ரல் மாதம் 10 நாட்களும், ஆடித்தபசு ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்களும், தெப்பத்திருவிழா தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு விழா சமயத்தில் சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலுமிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கி பக்தர்களுக்கு வசதி செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாக கூடுவர்.

    வளர்ந்து வரும் பெரிய நகரம்

    சங்கரன் கோவில் வளர்ந்து வரும் ஒரு பெரிய நகரம் ஆகும். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி, மிளகாய் வத்தல், நெல், வாழை, கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள் ஆகும். மேலும் இதை சுற்றி, நூற்பாலைகளும், 4000 விசைத்தறி ஆலைகளும், கைத்தறி நெசவுத் தொழிலும் இருக்கிறது.

    இங்கு உற்பத்தி ஆகும் பருத்தி சேலைகள், பாலி பருத்தி சேலைகள், துண்டுகள், டெரிதுவாலை துண்டுகள் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

    நிலவு லாவிய நீர்மலி வேணியன்

    அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

    மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

    சென்னையில் இருந்து தினமும் வரும் பொதிகை விரைவு ரெயில் மூலம் வரலாம். இங்கு ரெயில் நிலையம், பேருந்து நிலையமும் உண்டு.

    தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து ஆகம பூஜைகளும் பக்தர்களுக்காக தவறாமல் செய்யப்பட்டு வருகின்றது.

    • நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • 29-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் தொட்டிலுக்கும் தேரோட்டம் நடக்கிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டா டப்படுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. கோவிலில் உள்ள சித்திர சபை மண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு 18 ஊர் பிடாகைகள், ஊர் தலைவர்கள், வட்டப் பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவபிரசாத், தெற்கு மண்மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, துணை தலைவர் சுப்பிரமணியபிள்ளை, கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், சுரேஷ், நடுத்தெரு ஊர்வகை அறக்கட்டளை ரவீந்திரன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு திருவிழாவுக்கான பத்திரிகைக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் இன்று (20-ந்தேதி) மாலையில் கோட் டார், இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுபடி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்று விழாவை யொட்டி காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 9 மணிக்கு மேல் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு தேவார இன்னிசை, 6.15 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை சாமி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகம், சமய சொற்பொழிவு, இரவு வாகனத்தில் வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் 9-ம் நாளான 29-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் தொட்டிலுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், சப்பர தேர் என மூன்று தேர்கள் உலா வருகின்றன. தேரோட்டத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். மாலை 6 மணிக்கு சாமி மண்டகப்படிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 30-ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் தெப்பத்திற்கு சாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளும் தெப்பத்திரு விழா நடை பெறுகிறது. தெப்பக்குளத்தை சுற்றிலும் தெப்பம் 3 முறை வலம் வருகிறது.

    முதல் சுற்றினை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றினை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளை ஞர்களும் வடம் பிடித்து இழுத்து வருவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு வைபவம் நடை பெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமையில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகளும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • 30-ந்தேதி இரவு தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத்திருவிழா வருகிற 21-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை போன்றவைகள் நடைபெறுகிறது.

    29-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 30-ந்தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான கால்நாட்டு விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. தாணுமாலய சாமி சன்னதியின் அருகே உள்ள முருகன் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முகப்பில் பந்தகால் நடும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வட்டப் பள்ளி மடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண்மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, நடுத்தெரு ஊர் வகை டிரஸ்டி ரவீந்திரன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    ×