search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருப்பணி"

    • இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது.
    • காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றது.

    அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதும் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடியதுமான பல சிறப்புகள் பெற்றதாக விளங்குகிறது.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது. எனவே கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலை யத்துறையின் மூலம் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி வருகிற 24-ந் தேதி காலை 7 மணி அளவில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • புனித நீரால் சாமி அம்பாளுக்கு அபிஷேகமும் நடந்தது.
    • சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கோனூர்நாடு கோட்டைத் தெருவில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நவக்கிரகங்களும் தனிசன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.அகத்திய மாமுனி வழிப்பட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. பழமையும், பல்வேறு சிறப்பும் வாய்ந்த இக்கோவில் வளாகத்தில் தீர்த்த கிணறு ஒன்று இருக்கிறது. இதில் இருந்து தீர்த்தம் எடுத்து சாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கிணறு புனரமைக்கப்படாமல் நீர் மாசுபட்ட நிலையில் இருந்தது. இதனால் கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்காரணமாக சாமி, அம்பாளுக்கு மாற்று நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.

    இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தீர்த்த கிணற்றின் நிலை அறிந்து மிகுந்த வருத்தத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்த்த கிணற்றை புனரமைக்கும் முடிவை எடுத்தனர்.

    அதன்படி கோவில் வளாகத்தில் இருந்த தீர்த்த கிணறு பக்தர்களால் சுத்தம் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ருத்ர யாகம் நடந்தது. இதனையடுத்து திருமுறை பாராயணம் ஓதி சாமி, அம்பாளுக்கு கிணற்றில் இருந்து எடுத்த புனிதநீரால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர், சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கோவிலில் உள்ள பிரகார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்வதற்காக தீர்த்த கிணற்றில் இருந்து குழாய் அமைக்கப்பட்டது. பழமை வாய்ந்த கோவிலின் தீர்த்த கிணற்றை பக்தர்கள் புனரமைத்து தினசரி அபிசேகத்திற்கு இறைவனுக்கு சமர்பித்துள்ளனர். புனித தீர்த்தத்தில் அபிஷேகம் நடைபெற்றதை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது.

    தஞ்சை பெரிய கோவில் விமான கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம், மழைநீரால் பாசி படிந்திருப்பதை அகற்றும் வகையில் ரசாயன கலவையால் வர்ணம் பூசும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், பணிகள் மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு கோவில் குடமுழுக்கு நடைபெற்றதையொட்டி அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் உள்ள திருச்சுற்று மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன. மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் கோபுரம், விமான கோபுரம், பெரியநாயகி அம்மன், முருகர், நடராஜர், விநாயகர் சன்னதி கோபுரங்களும் ரசாயன கலவை மூலம் வர்ணம் பூசப்பட்டது.

    அதன்படி விமான கோபுரத்தில் படிந்திருந்த பறவைகளின் எச்சங்கள், மழைநீரால் படிந்திருந்த பாசிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ததோடு, பழமை மாறாமல் இருப்பதற்காக ரசாயன கலவை பூசும் பணியும் நடைபெற்றது. சிதிலமடைந்து இருந்த சுதை சிற்பங்களும் சீரமைக்கப்பட்டன. இந்த பணிகள் 2018-19-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.

    விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விமான கோபுரலத்தில் உள்ள கலசமும் தங்க முலாம் பூசப்பட்டது. கொடிமரம் புதிதாக நடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இதனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தஞ்சை பெரிய கோவில் பழமை மாறாமல் ரசாயன கலவை கொண்டு வர்ணம் பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற நிதி ஆண்டு முதல் (ஏப்ரல் மாதத்திற்கு பிறகு) வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தொல்லியல் துறையினர் நேற்று 216 அடி விமான கோபுரத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். தொல்லியல் துறையை சேர்ந்த 4 பேர் நேற்று கயிறு உதவியுடன் விமான கோபுரத்தின் மீது ஏறி ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். 1 மணி நேர ஆய்வுக்குப்பின்னர் அவர்கள் கீழே இறங்கி வந்தனர்.

    இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் ரசயான கலவையுடன் வர்ணம் பூசும் பணி வருகிற ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைபெற உள்ளது. மழைநீரால் பாசி படியாமல் இருப்பதற்காகவும், பறவைகளின் எச்சத்தை அகற்றி அதன் பொலிவு மாறாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் கோபுரத்தில் வேறு ஏதும் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதா? சிற்பங்கள் எதுவும் சிதிலமடைந்து உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதனை எவ்வாறு சரி செய்வது? ரசாயன கலவை பூசுவது எப்படி? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான கோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறைவடைந்ததும் இதர கோபுரத்திலும் பணிகள் மேற்கொள்ளப்படும்"என்றனர்.

    • பஞ்சலோக பொருட்கள் வைக்கும் பிரிவையும் ஆய்வு செய்தார்.
    • கோவிலில் மூலவர் கோபுரம் தங்க முலாம் பூசும் பணிக்காக 50 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள தேவஸ்தான தங்க நகைகள் பிரிவையும், கோவிலில் தற்போது நடந்து வரும் மூலவர் கோபுரத்துக்கு தங்க முலாம் பூசும் பணிகளையும் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவிலில் மூலவர் கோபுரம் தங்க முலாம் பூசும் பணிக்காக 50 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோவில் அதிகாாிகள் இணை அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    அந்தப் பணிகளை விரைவுபடுத்த கோவிலில் உள்ள அலுவலகங்களை மாற்றி, பொற்கொல்லர்களுக்கு தேவையான 5 பட்டறைகளை ஏற்பாடு செய்யுமாறு இணை அதிகாரியிடம் கோவில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    அப்போது பொற்கொல்லர்களுடன் உரையாடிய இணை அதிகாரி வீரபிரம்மன், தெய்வீகப் பணியை முழு ஈடுபாட்டுடன் முடிக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

    அத்துடன் கோவிந்தராஜசாமி கோவில் மூலவர் கோபுரத்தில் தங்க முலாம் பூசும் பணிகளை விரைவுபடுத்தவும், திட்டமிட்டபடி பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தி முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இணை அதிகாரி உத்தரவிட்டார்.

    பின்னர் தேவஸ்தானத்தின் பழைய ஹுசூர் அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, செப்புத் தகடுகள், வெண்கலம் போன்றவற்றைப் பொற்கொல்லர்கள் வைக்கும் அறைகளாகப் பழுதுப்பார்த்து பயன்படுத்த கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பழுதான பொருட்களை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பஞ்சலோக பொருட்கள் வைக்கும் பிரிவையும் ஆய்வு செய்தார். அந்த அறையை சரியான காற்றோட்டத்துடன் விசாலமானதாக அமைக்க பொறியியல் துறை அதிகாரிகளுக்கு இணை அதிகாரி உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது நிதித்துறை அதிகாரி பாலாஜி, என்ஜினீயர்கள் நாகேஸ்வரராவ், வேணுகோபால், கோவில் உதவி அதிகாரி சுப்பராஜு மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • இந்த பணிகளை 6 மாத காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை.
    • இந்த கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.

    நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள 24 வைணவ தலங்களில் ரூ.5 கோடியே 68 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார்.

    அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.33 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் வர்ணம் பூசும் பணி மற்றும் சாளக்காரம் கட்டும் பணியை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் தட்டோடு பதிக்கும் பணி, விநாயகர் கோவில் மராமத்து பணி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் படிக்கட்டுகளுக்கு பித்தளை கவசம் சாற்றும் பணிகளை தனிநபர்களின் நிதி பங்கீட்டில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் எம்.பி‌.க்கள் கே‌ஆர்.என்.ராஜேஸ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ், ராமலிங்கம் எம்.எல்‌.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி பணிகளை தொடங்கி வைத்தனர். முன்னதாக சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இந்த பணிகளை 6 மாத காலத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் உதவி ஆணையர் இளையராஜா, நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, தி.மு.க. நகர செயலாளர்கள் சிவக்குமார், ராணா ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழமையான கோவில்களை பாதுகாக்கும் வகையில் திருப்பணி செய்வது அவசியம்.
    • திருப்பணிகள் விரைந்து மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மருத்துவக்குடி காசிவிஸ்வநாதர் கோவி்லில் வருகிற 20-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது.

    இக்கோவில் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து 45 நதிகளின் புனித தீர்த்தங்களுக்கு வழிபாடு செய்து, யாகசாலை மண்டபம் மற்றும் புனித நீர் ஊர்வலத்திற்கான 500 குடங்கள், புடவைகள்- கோவில் விமானத்தில் வைக்கப்படும் கலசங்களையும் பார்வையிட்டு குடமுழுக்கு ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பழமையான கோவில்களை புராதானத்தை பாதுகாக்கும் வகையில் திருப்பணி செய்வது அவசியம். மருத்துவக்குடியில் 84 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் சிதலமடைந்து காணப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை மிகவும் சிறப்பாக திருப்பணி செய்திருப்பது பாராட்டுக்குரியது.

    கோவில்களில் இறைவழிபாட்டிற்கு இடையூறு தரக்கூடிய எந்த ஒரு செயலையும் அனுமதிக்க கூடாது. அத்தகைய வகையில் கோவில்களில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள், பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட்டின் யோசனை வரவேற்கத்தக்கது. அதனை அரசு முழுமையாக செயல்படுத்த முன்வர வேண்டும். மேலும் கூட்டம் அதிகமாக உள்ளதால் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கோவில்களில் கட்டண தரிசனம் இருப்பது தடுக்கப்பட வேண்டும். நமது பண்பாடு, கலாச்சார உடை அணிந்து கோவில்களில் வழிபாடு செய்வது மிக அவசியமானது.

    திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோவிலில் திருப்பணி நடக்கிறது. சூரியனார் கோவிலில் நவக்கிரக நாயகர்களுக்கு கருங்கல் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. திருப்பணிகள் விரைந்து மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருப்பணி கமிட்டி பொறுப்பாளர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், நாட்டான்மைகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இந்த கோவிலின் மாசிக்கொடை விழா தான் சிறப்பு.
    • திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த கோவில் தென்னந்தோப்புகள், மரங்கள் நிறைந்த தோட்டங்கள், வயல்வெளிகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ்ந்து, அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.

    இந்த கோவிலில் நடந்த தீ விபத்தில் சேதம் அடைந்த ஓடுகளால் ஆன மேற்கூரை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும், இன்னும் பல பணிகளும் தற்போது ரூ.1 கோடிக்கு மேல் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் நிறைவடைந்ததும் வருகிற தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிட்டு குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி வினிஷ் குருக்கள் (வயது 36) கூறியதாவது:-

    இந்த கோவிலில் எங்கள் குடும்பத்தினர் தான் பரம்பரை, பரம்பரையாக பூஜை செய்து வருகிறோம். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் புற்று வடிவில் உள்ளது. புற்று வடிவான அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்துள்ளார். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இந்த கோவிலின் மாசிக்கொடை விழா தான் சிறப்பு. அம்மனை நினைத்து வேண்டினால் என்ன வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    கை, கால் முடக்கம் போன்ற பிரச்சினைகளுக்கும் அம்மனை வேண்டினால் தீர்வு கிடைக்கும். தீ விபத்து சம்பவத்தின் காரணமாக அம்மன் கருவறை மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பிரசன்னம் பார்த்ததில் அம்மனுக்கு எந்த குறையும் இல்லை என்றும், அம்மனின் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்காகவும், தன்னை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த தீ விபத்து நடந்துள்ளது என தெரிய வந்தது. எனது முன்னோர்கள் காலத்தில் இந்த கோவிலின் புற்று வளர்ந்து மேற்கூரையை தட்டும்போது அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் கனவில் அம்மன் தோன்றி எனது தலை தட்டுவதால் கோவில் மேற்கூரையை மாற்றித்தருமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.

    கருங்கல் அருகே உள்ள தொழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் பக்தர் பத்மலதா (வயது 55) கூறியதாவது:-

    நான் இந்த கோவிலுக்கு சிறுவயதில் இருந்தே வந்து வழிபாடு செய்கிறேன். வருடந்தோறும் பொங்கல் வழிபாட்டில் கலந்து கொள்வேன். கடந்த ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கலிட்டேன். திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். எனக்கும் பல்வேறு காரியங்கள் நடந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பணிகள் முடிந்து விரைவில் கலசாபிஷேகம் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்கது.
    • இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் மங்களநாதர் திருக்கோவில் உள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.

    மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஆண்டு முழுவதும் இந்த சிலையின் மீது சந்தன கவசம் பூசப்பட்டு வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் களைந்து பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இந்த மங்களநாதர் கோவில் சாமி சன்னதியின் முதல் பிரகாரம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்தது.

    குறிப்பாக சாமி சன்னதி பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் பெரும் பாலான தூண்கள் மற்றும் மேல் தளங்களில் கற்கள் இல்லாமலும் முழுமை பெறாமலேயே காட்சி அளித்து வந்தது. இந்தநிலையில் பல ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்த சாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் கோவிலின் நிரந்தர அறங்காவலர் ராமநாதபுரம் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் முயற்சியின் பேரில் பக்தர் ஒருவரின் நன்கொடை மூலம் ரூ.1 ½ கோடி நிதியில் திருப்பணிகள் நடைபெற்றன.

    கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த திருப்பணியில் முதல் பிரகாரத்தில் முழுமை பெறாமல் இருந்த இடத்தில் கருங்கல்லினால் ஆன தூண்கள் வைக்கப்பட்டு உள்ளது. 4 ஆண்டுகள் முடிவில் தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளது.

    ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மேற்பார்வையில் நடைபெற்று வந்த இந்த திருப்பணியில் சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் சுமார் 18 அடி உயரம் கொண்ட கருங்கல்லினால் ஆன 40-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டன. இதனிடையே கோவிலின் சாமி சன்னதி பிரகாரத்தை சுற்றி அமைக்கப்பட்ட தூண்களை சுற்றி கருங்கற்களினால் ஆன மேல்தளங்களும் முழுமையாக கட்டி முடித்து திருப்பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளன.

    கோவில் உருவான காலத்தில் இருந்தே முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்த திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் சாமி சன்னதி பிரகாரம் தற்போது கருங்கற்களினால் ஆன தூண்கள் மற்றும் மண்டபங்கள் அமைக்கப்பட்டு முழுமை பெற்ற நிலையில் மிக அழகுற காட்சி அளிக்கிறது.

    • இந்த கோவிலில் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • கும்பாபிஷேகம் நடத்த அரசும், கோவில்கள் நிர்வாகமும் தீர்மானித்துள்ளனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தற்போது அதற்கான ஏற்பாடுகளை அரசும், மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகமும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது தொடர்பாக கோவிலை சார்ந்தவர்களும், பக்தர்களும் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    இதுதொடர்பாக நாகராஜா கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:-

    1992-ம் ஆண்டில் இருந்து இந்த கோவிலில் பூஜை செய்து வருகிறேன். கலியுகத்தில் நாகராஜா இங்கு சுயம்புவாக இருக்கிறார். அதனால் ஆயில்ய நட்சத்திர தினம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். நாகதோஷ பரிகாரங்கள் நடைபெறுகிறது. நாகராஜா, அனந்த கிருஷ்ணன், சிவன் ஆகியோர் மூலவர்களாக உள்ளனர். இங்கு சைவ, வைணவ ஆராதனை நடைபெறுகிறது. துர்க்கைக்கும் பூஜை செய்யப்படுகிறது. ஆகம விதிப்படியும், தாந்திரீக முறைப்படியும் பூஜைகளும், நாகராஜருக்கு பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. பால்பாயாசம் நைவேத்யமாக வழங்கப்படுகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த அரசும், கோவில்கள் நிர்வாகமும் தீர்மானித்துள்ளனர். கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடைபெற பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    மனக்குறை

    நாகர்கோவிலைச் சேர்ந்த நீலகண்டன் (வயது 63) கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த புனித தலமாக நாகராஜா கோவில் இருந்து வருகிறது. கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். பல்வேறு சூழ்நிலை காரணமாக நடக்கவில்லை. இது மனதுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவாக கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று ஊர் சார்பாகவும், அனந்தகிருஷ்ணா பக்தசேவா அறக்கட்டளை சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

    வருமானத்தில்...

    நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன் (70) கூறியதாவது:- நான் கடந்த 60 ஆண்டுகளாக நாகராஜரை வழிபட்டு வருகிறேன். கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்கு என்னை போன்ற உபயதாரர்கள் உதவ தயாராக இருக்கிறோம்.

    நமது வருமானத்தில் ஒரு தொகையை சாமிக்கு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. எனவே சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ரூ.1½ கோடி மதிப்பீடு

    குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.1½ கோடியில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் டைல்ஸ்களை கருங்கல் தளமாக மாற்றுதல், மகாமேரு மாளிகை பழுது பார்த்தல், கிழக்கு முகப்பு மண்டபம் பழுது பார்த்தல், நாகர் சன்னதி முன்பக்க ஆனைக்கொட்டில் மண்டபம் பழுதுபார்த்தல், ஜெனரேட்டர் அறை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள், கோவில் கதவு மற்றும் ஜன்னல்கள் பழுது பராமரிப்பு செய்தல் போன்ற திருப்பணிகள் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தேருக்கு கூடாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று குறைகள் கேட்டார்.

    விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நிர்வாக ஆணையர் பொதுநல நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தேருக்கு கூடாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தி பணிகளை துரிதமாக முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சென்றார். அங்கு கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று குறைகள் கேட்டார். அப்போது வீரப்பட்டி கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை, கால்வாய் பிரச்சினை, சாலை பிரச்சினை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனை கேட்டறிந்த எம்.எல்.ஏ., மக்கள் முன்னிலையில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மக்களின் கோரிக்கைகள் குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    இதில் புதூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, பஞ்சாயத்து தலைவர் சுசீலா ராணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக அதிகாரி ராகவன் உள்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நடைபாதை மண்டப பாதையை பயன்படுத்தி வந்தனர்.
    • மண்டபம் விரிசல் ஏற்பட்டதையடுத்து இந்த வழிபாதை அடைக்கப்பட்டது.

    உலக புகழ் பெற்ற தியாகராஜர் கோவில் சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்கிறது. இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரியது. தோன்றிய வரலாற்றை கணக்கிட முடியாத அளவு தொன்மை வாய்ந்த கோவிலாக விளங்குகிறது.

    ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவிலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

    இந்த சிறப்புக்குரிய கோவிலின் மேற்கு கோபுர வாசலில் குளமே ஆலயமாக கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த மேற்கு கோபுர வாசலில் நுழைவு பகுதியில் கோவில் நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் முன்பு பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் மண்டபம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நடைபாதை மண்டப பாதையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்த மண்டபத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. கோவில் நடைபாதை மண்டபத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

    தொல்லியல் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் படி மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் விரிசல் ஏற்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் அதை சீரமைக்க இதுவரையில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர்.

    மண்டபம் விரிசல் ஏற்பட்டதையடுத்து இந்த வழிபாதை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நேர் வழியாக கோவிலுக்கு செல்லாமல் அருகில் உள்ள வழிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    விரிசல் ஏற்பட்ட மண்டபத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஒழுகி வருகிறது. அந்த காலத்தில் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு கருங்கல்லால் கட்டப்பட்ட மண்டபம் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறது.

    விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் மண்டபம் மேலும் பலவீனப்பட்டு ஏதேனும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு கட்டிடம் வலுவாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வதுடன் விரிசல் ஏற்பட்ட பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இங்கு ஆண்டு தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது.
    • இக்கோவிலில் பக்தர்களுக்கென எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

    திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் நிர்வாகம் தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சி துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருச்சிற்றம்பலத்தை சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது இஷ்ட தெய்வமாக புராதனவனேஸ்வரரையும், பெரியநாயகி அம்மனையும் வழிபட்டு வருகின்றனர். திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குவதால் ஆண்டு தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் இங்கு நடைபெறுகிறது.

    இக்கோவிலில் பக்தர்களுக்கென எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக திருமணம் நடைபெறும் நேரங்களில் மணமக்கள் உடைமாற்றும் அறை இதுவரை அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் திருமணம் செய்து கொள்ள வரும் மணமக்களும், அவரது உறவினர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் வெளியூர்களிலிருந்து வரும் எண்ணற்ற பக்தர்கள் நீராடி விட்டு சாமியை வழிபட செல்கின்றனர். அவ்வாறு வரும் பெண் பக்தர்களும் உடை மாற்றும் அறை இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே இனியும் தாமதிக்காமல் கோவில் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மணமக்கள் உடை மாற்றும் அறையும், திருக்குளத்தின் குறிப்பிட்ட கரையில் பக்தர்கள் உடைமாற்றும் அறையும் அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு திருச்சிற்றம்பலம் பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×