search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகராஜா கோவிலில் ரூ.1½ கோடியில் திருப்பணிகள்
    X

    நாகராஜா கோவிலில் ரூ.1½ கோடியில் திருப்பணிகள்

    • இந்த கோவிலில் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • கும்பாபிஷேகம் நடத்த அரசும், கோவில்கள் நிர்வாகமும் தீர்மானித்துள்ளனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தற்போது அதற்கான ஏற்பாடுகளை அரசும், மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகமும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது தொடர்பாக கோவிலை சார்ந்தவர்களும், பக்தர்களும் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    இதுதொடர்பாக நாகராஜா கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:-

    1992-ம் ஆண்டில் இருந்து இந்த கோவிலில் பூஜை செய்து வருகிறேன். கலியுகத்தில் நாகராஜா இங்கு சுயம்புவாக இருக்கிறார். அதனால் ஆயில்ய நட்சத்திர தினம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். நாகதோஷ பரிகாரங்கள் நடைபெறுகிறது. நாகராஜா, அனந்த கிருஷ்ணன், சிவன் ஆகியோர் மூலவர்களாக உள்ளனர். இங்கு சைவ, வைணவ ஆராதனை நடைபெறுகிறது. துர்க்கைக்கும் பூஜை செய்யப்படுகிறது. ஆகம விதிப்படியும், தாந்திரீக முறைப்படியும் பூஜைகளும், நாகராஜருக்கு பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. பால்பாயாசம் நைவேத்யமாக வழங்கப்படுகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த அரசும், கோவில்கள் நிர்வாகமும் தீர்மானித்துள்ளனர். கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடைபெற பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    மனக்குறை

    நாகர்கோவிலைச் சேர்ந்த நீலகண்டன் (வயது 63) கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த புனித தலமாக நாகராஜா கோவில் இருந்து வருகிறது. கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். பல்வேறு சூழ்நிலை காரணமாக நடக்கவில்லை. இது மனதுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவாக கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று ஊர் சார்பாகவும், அனந்தகிருஷ்ணா பக்தசேவா அறக்கட்டளை சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

    வருமானத்தில்...

    நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன் (70) கூறியதாவது:- நான் கடந்த 60 ஆண்டுகளாக நாகராஜரை வழிபட்டு வருகிறேன். கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்கு என்னை போன்ற உபயதாரர்கள் உதவ தயாராக இருக்கிறோம்.

    நமது வருமானத்தில் ஒரு தொகையை சாமிக்கு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. எனவே சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ரூ.1½ கோடி மதிப்பீடு

    குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.1½ கோடியில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் டைல்ஸ்களை கருங்கல் தளமாக மாற்றுதல், மகாமேரு மாளிகை பழுது பார்த்தல், கிழக்கு முகப்பு மண்டபம் பழுது பார்த்தல், நாகர் சன்னதி முன்பக்க ஆனைக்கொட்டில் மண்டபம் பழுதுபார்த்தல், ஜெனரேட்டர் அறை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள், கோவில் கதவு மற்றும் ஜன்னல்கள் பழுது பராமரிப்பு செய்தல் போன்ற திருப்பணிகள் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×